பினாங்கு DAP தலைமையகம் 13 மாதங்களில் மூன்றாவது முறையாக தாக்கப்பட்டுள்ளது

ஜாலான் ரங்கூனில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள -விஸ்மா டிஏபி என்ற பினாங்கு டிஏபி தலைமையகம் மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.

வைகறை வாக்கில் அந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

பாதுகாப்புத் தொண்டர் ஒருவர் அதிகாலை 4 மணி வாக்கில் மூன்று மாடிகளைக் கொண்ட அந்தக் கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள தகவலை தமக்குத் தெரிவித்ததாக கொம்தார் சட்டமன்ற  உறுப்பினர் இங் வெய் எய்க் கூறினார்.

“நாங்கள் மீண்டும் தாக்கப்படுகிறோம் ! இன்று காலை விஸ்மா டிஏபி மீது ஐந்து பொட்டலம் சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளது,” என மாநில டிஏபி இளைஞர் தலைவருமான இங் டிவிட்டர் மூலம் அறிவித்தார்.

ஜாலான் பட்டாணியில் உள்ள வட கிழக்கு மாவட்ட போலீஸ் நிலையத்தில் இன்று புகார் செய்யப் போவதாக தொடர்பு கொள்ளப்பட்ட போது குறுஞ்செய்தி வழி இங் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

இவ்வாண்டு தொடக்கத்தில் கிட்டத்தட்ட 3 மில்லியன் ரிங்கிட் செலவில் அந்தக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஆயர் பூத்தே சேவை மய்யத்தின் மீதும் சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இன்று காலை 6 மணி வாக்கில் டிஏபி உறுப்பினர் ஒருவர் அதனைக் கண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஜக்தீப் சிங் டியோவின் தொகுதியில் உள்ள டத்தோ கிராமாட் டிஏபி சேவை மய்யம் மீது சிவப்புச் சாயம் தெளிக்கப்பட்டுள்ளது. சிவப்புச் சாயத்தைக் கொண்ட 6 பிளாஸ்டிக் பைகள் அங்கு கண்டு பிடிக்கப்பட்டன. அந்த மய்யம் டத்தோ கிராமாட் போலீஸ் நிலையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது.

அதே நேரத்தில் லோரோங் செராத்துஸ் தாவுனில் அமைந்துள்ள இங்-கின் சேவை மய்யம் மீது சிவப்பு, ஆரஞ்சு நிறச் சாயங்கள் தெளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. அந்த சேவை மய்யத்துக்குவெளியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனம் மீதும் சாயம் வீசப்பட்டுள்ளது.

நள்ளிரவுக்கு பின்னர் மணி 1.20 வாக்கில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் இங்-கின் சேவை மய்யத்துக்கு வந்த அறுவர் சாயம் வைக்கப்பட்டிருந்த சிறிய பிளாஸ்டிக் பைகளை வீசியதாக அதனை நேரில் பார்த்த சிலர் கூறினர்.

இரண்டாவது தாக்குதலில் எரியூட்டுவதற்கு முயற்சி

கடந்த ஆண்டு தொடக்கம் இது வரை டிஏபி கட்சித் தலைமையகம் மூன்றாவது முறையாகத் தாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜாலான் டெலிபோனில் அமைந்திருந்த கட்சித் தலைமையகக் கட்டிடத்தின் மீது 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி சிவப்பு, ஆரஞ்சு நிறச் சாயங்கள் வீசப்பட்டன.

அதற்கு பின்னர் நான்கு நாட்களில் மிகவும் மோசமான இன்னொரு தாக்குதல் அந்தக் கட்டிடத்தின் மீது நடத்தப்பட்டது.

அதிகாலை மூன்று மணி வாக்கில் நிகழ்ந்த தீ வைப்பு முயற்சி எனச் சந்தேகிக்கப்படும் அந்தத் தாக்குதலின் போது கட்டிடத்திற்கு வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பத்திரிக்கைகளுக்கு தீ வைக்கப்பட்டது.

அண்டை வீடுகளில் குடியிருந்தவர்ளும் தீயணப்புத் துறையினரும் 20 நிமிடங்களில் நெருப்பை அணைத்து விட்டனர் என்றும் அதனால் கட்ட்டத்தின் மற்ற பகுதிகளுக்கு நெருப்பு பரவுவது தடுக்கப்பட்டது என்றும் இங் சொன்னார். அவர் பினாங்கு முதலைமைச்சருக்கு அரசியல் செயலாளரும் ஆவார்.

அந்த இரண்டு சம்பவங்கள் மீதும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்னும் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கவில்லை.

தீ வைப்பு சம்பவத்தைத் தொடர்ந்து டிஏபி கட்டிடத்துக்கு வருகை புரிந்த அப்போதைய பினாங்கு போலீஸ் படைத் தலைவர் அயூப் யாக்கோப், அந்தச் சம்பவத்தை முழுமையாக விசாரிப்பதாக வாக்குறுதி அளித்தார்.

TAGS: