ஜோகூரில் பிகேஆர் குழுவை கற்களும் ஆணிகளும் எதிர்கொண்டன

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஜோகூருக்குச் சென்ற கட்சிக் குழு இன்னொரு சுற்றுத் தாக்குதல்களை  நேற்றிரவு ஸ்கூடாயில் எதிர்நோக்கியது.

ஸ்கூடாயில் உள்ள Sutera மண்டபத்துக்கு வெளியில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  கார் நிறுத்துமிடத்தை அந்தக் குழு அடைவதற்குச் சற்று முன்னர் அந்தத் தாக்குதல் நடந்ததாக 800 மேசைகளைக் கொண்ட அந்த பிகேஆர் விருந்தில் கட்சித் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறினார்.

“நாங்கள் இங்கு வந்து கொண்டிருந்த வேளையில் பாதசாரிகளுக்கான பாலத்தைக் கடந்து சென்ற போது பலமான சத்தத்தை செவிமடுத்தோம்.”

“எங்கள் குழுவில் இருந்த கார்களில் ஒன்றின் மீது கல் வீசப்பட்டதை நாங்கள் கண்டு பிடித்தோம்.”

“நாங்கள் சாலைகளைல் ஆணிகளையும் பார்த்தோம். ஆகவே நாங்கள் எங்கள் வாகனங்களை சாலை ஒரத்தில் நிறுத்தினோம். அப்போது எங்கள் பாதுகாப்பு ஊழியர்களை சாலைகளைத் துப்புரவு செய்தனர்.  அடுத்து நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்,” என அவர் சொன்னார்.

அதே விருந்தில் பிகேஆர் உதவித் தலைவரும் குவாந்தான் எம்பி-யுமான பூஸியா சாலே-யும் பேசினார். “எங்கள் குழுவுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் விழுந்தது,” என அவர் சொன்னார்.

“நாங்கள் சாலையில் நிறைய ஆணிகளைக் கண்டோம். எங்கள் பஸ்ஸுக்கு விபத்து ஏற்பட வேண்டும் என சதிகாரர்கள் எண்ணியிருக்க வேண்டும் !”

“நல்ல வேளையாக நாங்கள் எல்லா சவால்களையும் சமாளித்து விட்டோம்,” என பல இனங்களையும் சார்ந்த 6,000க்கும் மேற்பட்டவர்கள் காணப்பட்ட அந்த விருந்தில் கூறினார்.

அந்தக் கார் விருந்து நிகழ்ந்த இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டது. அதன் முன்பகுதி சேதமடைந்துள்ளது.

விருந்து மய்யத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருட்டாக இருந்த சாலையில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்றும் பூஸியா பின்னர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.  ஆனால் அவருக்கு அந்தச் சாலையின் பெயர் தெரியவில்லை.

பிகேஆர் அமைப்புச் செயலாளர் ராடின் சம்சுல்காமாரின் கார் டயர் ஆணி குத்தியதால் சேதமடைந்தது.
ஓரே ஒரு டயர் மட்டுமே சேதமடைந்தது. ஆகவே நாங்கள் அதனை மாற்றிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.”

 

TAGS: