ஜோகூர் பிகேஆர் விருந்தில் ஹிஷாமுக்கு கண்டனக் கணைகள்

நேற்றிரவு ஜோகூர், ஸ்கூடாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிகேஆர் இரவு விருந்தில் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கடும் குறைகூறலுக்கு ஆளானார்.அம்மாநிலத்தில் பயணம் செய்யும் பிகேஆர் பரிவாரங்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருந்த அவர் மீது பிகேஆர் தலைவர்கள் கண்டனக் கணைகளைப் பொழிந்தனர்.

அமைச்சரின் கூற்று “அதிகார ஆணவத்”க் காண்பிப்பதாகக் குறிப்பிட்ட பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், ஹிஷாமுடின் அவரின் ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார் என்றார்.

“நீங்கள் மக்களுக்காக பணியாற்ற வேண்டுமே தவிர கட்சிக்காக அல்ல… இது  அதிகார ஆணவத்தைக் காண்பிக்கிறது.

“நல்ல வேளையாக, பிகேஆர், பாஸ், டிஏபி ஆதரவாளர்கள் கட்டுப்பாடு மிக்கவர்கள்.அவர்களைப்போல் நாம் எளிதில் சினமுறுவதில்லை. நாம் சண்டையிட விரும்பவில்லை. புத்ரா ஜெயாவைப் பிடிக்கத்தான் விரும்புகிறோம்.

“இது ஒரு மலேசியா. ஆனால், இரண்டு சட்டங்கள். ஒன்று அம்னோவுக்காகவும் பணக்காரர்களுக்காகவும் இன்னொன்று மக்களுக்காக”, என்று மெர்டேகா முன் தினம் பிரதமரின் புகைப்படத்தைக் காலில் போட்டு மிதித்த 19-வயது பெண் கைது செய்யப்பட்ட விவகாரத்தைக் குறிப்பிட்டு அன்வார் பேசினார்.

நேற்று அன்வாரும் மற்ற பிகேஆர் தலைவர்களும் ஜோகூரில் இரட்டை மாடி பேருந்தில் பயணம் செய்து தங்காக், மூவார், பத்து பஹாட், ஸ்கூடாய் முதலிய இடங்களில் ஆதரவாளர்களையும் பொதுமக்களையும் சந்தித்தனர்.

தங்காக் பள்ளிவாசலில் அன்வார் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது அப்பேருந்துமீது சிகப்புச் சாயம் வீசியடிக்கப்பட்டது.

இரவில் விருந்துக்காக சென்று கொண்டிருந்தபோது பேருந்தின்மீது ஒரு கல் எறியப்பட்டது.சாலையில் ஆணிகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.

பிஎன் கோட்டையில் ஒரு சாதனை

அவ் விருந்து பிஎன் கோட்டையாக விளங்கும் ஜோகூரில் பிகேஆர் ஏற்பாடு செய்த மிகப் பெரிய நிதிதிரட்டும் நிகழ்வாக அமைந்தது.

ஜோகூரில் ,மாற்றரசுக் கட்சியிடமுள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான ஸ்கூடாயில் அது நடைபெற்றது.

விருந்துக்கு 8,000பேர் வந்ததாக பிகேஆர் தேசிய உதவித் தலைவரும் ஜோகூர் தலைவருமான சுவா ஜுய் மெங் கூறினார்.ஆனால்,6,000பேர் இருக்கலாம் என்பது மலேசியாகினியின் மதிப்பீடு.

என்றாலும், பிஎன் குறிப்பாக அம்னோ தன் வலுவான பிடிக்குள் வைத்துள்ள ஒரு மாநிலத்தில் இவ்வளவு பெரிய கூட்டம் திரண்டு வந்தது ஒரு சாதனைதான்.

விருந்தில் ரிம19,000 திரட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக பேசிய பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, ஹிஷாமுடினின் பேச்சு காலித்தனத்துக்குப் பச்சை விளக்கு காட்டிவிட்டது என்றார்.

“அது உள்துறை அமைச்சர் காலித்தனத்துக்கு அனுமதி அளித்திருப்பதைக் காண்பிக்கிறது.

“அவரை அடுத்த தேர்தலுக்குள் கீழே இறக்க வேண்டும்”, என்றார்.

ஹிஷாமுடின் மக்களைப் பாதுகாப்பது உள்துறை அமைச்சரின் பொறுப்பு என்பதை மறந்து பேசுகிறார் என்று பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் சாடினார்.

இன்னொரு பிகேஆர் உதவித் தலைவரான புசியா சாலே, இப்படிப்பட்ட தாக்குதல்கள் தொடர்ந்தால் வெண்ணிற பிரச்சார பேருந்து சிகப்பு நிறமாக மாறி விடும் என்றார்.

“சீனர்களுக்கு சிகப்பு என்பது வளப்பத்தின் அறிகுறி இல்லையா?இதில்லிருந்து தெரிவது என்னவென்றால்(தேர்தலில்) வெற்றி நமக்கே”, என்றாவர்.

சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம், பாஸ் உதவித் தலைவரும் குபாங் கிரியான் எம்பியுமான சலாஹுடின் ஆயுப்,ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ் ஆகியோரும் அவ்விருந்தில் பேசினர்.