ஆளும் அரசியல்வாதிகளுடைய வாய்களிலிருந்து வெளியாகும் அபத்தங்கள் எனக்குப் பழகிப் போய் விட்டன. காரணம் அதே தலைவர்கள் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கடந்த சில ஆண்டுகளை அபத்தமான அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார். அன்வார் இப்ராஹிம் தலைமையில் பிகேஆர் மேற்கொண்டுள்ள நாடு முழுமைக்குமான மெர்தேக்கா ராக்யாட் சுற்றுப் பயணத்துக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது என சொல்லியிருப்பதின் வழி அதனை அவர் இப்போது மீண்டும் செய்துள்ளார். இந்த நாட்டில் முக்கியமான அமைச்சுக்கு ஒன்றுக்குப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ஒருவரிடமிருந்து இது போன்ற பதில்கள் வரும் என யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
ஹிஷாமுடின் தெளிவாக அரசியல் வன்முறையைத் தூண்டி விடுகிறார். அதை விட மோசமானது என்னவென்றால் கவலைப்படாத தமது பதில் மூலம் வன்முறையை சட்டப்பூர்வமாக்குவதாகும். தனது அதிகாரப்பிடியை இழக்கும் அச்சம் அம்னோவை சூழ்ந்துள்ளது என்பதை நாம் இதிலிருந்து நிறையக் காண்கிறோம்.
பிகேஆர் பிரச்சாரப் பஸ் மீது மீண்டும்-மூன்றாவது முறையாக- சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளது. சாலைகளில் ஆணிகள் வீசப்பட்டுள்ளன. கார்களில் ஒன்றின் மீது கல் வீசப்பட்டுள்ளது.
பினாங்கில் டிஏபி தலைமையகம் மீதும் சிவப்புச் சாயம் வீசி அடிக்கப்பட்டுள்ளது. கடந்த 13 மாதங்களில் அந்த டிஏபி தலைமையகம் தாக்கப்பட்டுள்ளது மூன்றாவது முறையாகும்.
அந்தக் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் விட்டு வைக்கப்படவில்லை. 1969ம் ஆண்டு மே 13 கலவரத்தைத் தூண்டி விட்டதாக கூறும் குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர் அண்மைய காலமாக தீவிரமான தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறார்.
வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்ட கதையுடன் ஒரு திரைப்படம் கூட வெளியாகியுள்ளது. அதில் சிலாங்கூர் கொடி பறக்க விடப்ப்பட்டிருந்த கொடிக் கம்பத்தின் மீது லிம் சிறுநீர் கழித்ததாகக் கூறிக் கொள்ளப்பட்டது ( அந்தத் திரைப்படம் தொடர்பான முக நூல் பக்கத்தில் அவ்வாறு கூறப்பட்டது).
அத்துடன் நிற்கவில்லை. சுவாராம் என்ற மனித உரிமைப் போராட்ட அமைப்பும் விஷமத்தனமான தாக்குதல்களுக்கு இரையாகியுள்ளது. “மிகவும் சந்தேகத்துக்குரியது” என உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் வருணித்துள்ள அதன் கணக்குகளுக்காக சுவாராம் இப்போது விசாரிக்கப்பட்டு வருகின்றது. சுவாரமுக்கு அந்நிய அமைப்புக்களிடமிருந்து நிதி உதவிகள் கிடைப்பதால் தான் இவ்வளவு ஆரவாரத்திற்குக் காரணமாகும்.
மனித உரிமைப் போராட்ட அமைப்புக்கள், சிவில் சமூகங்கள், ஏன் அரசாங்கம் கூட அந்நிய நிதி உதவியைப் பெறுவது அனைவருக்கும் தெரியும். ஆனால் சுவாராமுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது பழி வாங்கும் நடவடிக்கை என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அந்த மனித உரிமை நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் தொடங்கப்பட்டுள்ள பிரஞ்சு ஸ்கார்ப்பின் விசாரணைகள் வழி எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு நடுக்கத்தைக் கொடுத்துள்ளதையே அது காட்டுகின்றது.
அடுத்த பொதுத் தேர்தலில் தாம் தொடர்ந்து பதவியில் இருப்பதை உறுதி செய்ய பெரிய அளவில் வெற்றி பெறப் போராடும் நஜிப்பை அந்த விசாரனையில் அம்பலப்படுத்தப்படும் விவரங்கள் பாதிக்கத் தொடங்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
அத்தகைய அரசியல் வன்முறைகளும் தேர்ந்தெடுத்து வழக்குப் போடுவதும் முடிவுக்கு வருவதாக நமக்குத் தெரியவில்லை. நஜிப்புக்கும் அவரது துணைப் பிரதமருக்கும் இடையிலான உறவுகள் கசப்பான நிலையிலிருந்து கடுமையான நிலைக்கு மாறியுள்ளன. அதனால் நஜிப்பும் அவரது சொந்தக் கட்சியில் உள்ள அவரது எதிரிகளும் எதிர்க்கட்சித் தலைவர்களைக் களங்கப்படுத்துவதற்கு சாத்தியமான எல்லா அச்சுறுத்தல் வழிகளிலும் முயன்று வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவிக்கு எதிரான புரட்சியை வழி நடத்தி நஜிப் அதிகாரத்துக்கு வருவதற்கு வழி வகுத்த முகமட் யாசின் தமது ஆற்றலை, வலிமையை ஏற்கனவே மெய்பித்துள்ளார்.
அவர் தற்போது தமது எஜமானரோடு கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருப்பதோடு பல தடவைகளில் தமது எஜமானரையும் கீழறுப்புச் செய்வதாகவும் தோன்றுகிறது.
என்றாலும் ஆளும் கட்சித் தலைவர்கள் மலேசியர்கள் அரசியல் முதிர்ச்சியை அடைந்து வருவதை நிராகரிக்கக் கூடாது. அவர்கள் வேறுபாடுகளை புரிந்து கொண்டுள்ளனர். அதனால் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதின் மூலம் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளையும் சிவில் சமீக உறுப்பினர்களையும் மிரட்டுவதும் அச்சுறுத்துவதும் பாரிசான் நேசனலுடைய வீழ்ச்சியையே விரைவுபடுத்தும். ஆகவே தேர்வு செய்வது அவர்களைச் சார்ந்துள்ளது.