“மூத்த அரசியல்வாதி சம்பந்தப்பட்ட கையூட்டுக்கள்”

பிகேஆர் ஆதரவு அரசு சாரா அமைப்பான Solidarity Anak Muda Malaysia ( SAMM ) நேற்று ஒர் அரசாங்கத் துறையும் உயர் நிலை அரசியல் கட்சித் தலைவர் ஒருவரும் சம்பந்தப்பட்ட ‘கையூட்டுக்கள்’ என சந்தேகிக்கப்படும் விவகாரம் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) ஆவண ஆதாரங்களை வழங்கியுள்ளது.

இவ்வாண்டு அரசு சாரா அமைப்பு ஒன்றுக்கு கொடுக்கப்பட்ட 500,000 ரிங்கிட் அரசாங்க நலன் உதவியிலிருந்து கிள்ளானில் உள்ள அடையாளம் தெரியாத நிறுவனம் ஒன்றுக்கு 40 விழுக்காடு தரகுப் பணம் என்ற வடிவத்தில் அந்தக் கையூட்டுக்கள் செலுத்தப்பட்டுள்ளதாக SAMM கூறிக் கொண்டது.

இவ்வாண்டு மார்ச் மாதம் நடைபெற்றதாகக் கூறப்படும் கூட்டக் குறிப்புக்கள், அதிகாரத்துவக் கடிதங்கள் ஆகியவை எம்ஏசிசி -யிடம் வழங்கப்பட்ட ஆவணங்களில் அடங்கும் என பினாங்கில் SAMM தலைவர் பத்ருல் ஹிஷாம் ஷாஹாரின் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அவர் அந்த ஆவணங்களை சமர்பிக்கும் முன்னர் நிருபர்களைச் சந்தித்தார். சம்பந்தப்பட்ட தரப்புக்களின் விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் செகுபார்ட் என அழைக்கப்படும் பத்ருல் ஹிஷாம் கூறினார்.

தரகுப் பணம் எனக் கூறப்பட்ட மொத்தம்  200,000 ரிங்கிட் தொகைக்கான 10 காசோலைகளின் பிரதிகளையும் தாம்  எம்ஏசிசி-யிடம் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட சங்கத்தில் முன்னாள் போலீஸ் ஊழியர்கள் உறுப்பியம் பெற்றுள்ளதாகக் கூறிய அவர், பிரதமர் துறையிலிருந்து அரசாங்க உதவி கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

“அதற்குப் பின்னர் கிள்ளானில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனம் ஒன்றுக்கு 40 விழுக்காடு ‘தரகுப் பணம்’ கொடுக்குமாறு மூத்த கட்சித் தலைவர் ஒருவர் அந்த சங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.”

“இதில் வினோதமானது என்னவெனில் எல்லாம் எழுத்துப்பூர்வமாக நடைபெற்றுள்ளதாகும். உதவி வழங்கும் போது சில தரப்புக்களுக்கு தரகுப் பணம் கொடுக்க வேண்டும் என்பது அரசாங்கத் துறைகளுக்கு வழக்கமாகி விட்டதா ?” என பத்ருல் ஹிஷாம் வினவினார்.

“பிரதமர் துறை வழங்கும் சமூக நல உதவியை தரகுப் பணம் கொடுக்கப் பயன்படுத்தலாமா ?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“அரசு சாரா அமைப்புக்களுக்கு அரசாங்க நிதிகள் கொடுக்கப்படும் போது சில தரப்புக்களுக்கு அல்லது தரகர்களுக்கு தரகுப் பணம் செலுத்துவது இயல்பாகி விட்டதா ?’

தாம் யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தவில்லை என வலியுறுத்திய அந்த முன்னாள் பிகேஆர் ரெம்பாவ் வேட்பாளாரான பத்ருல் ஹிஷாம், தமது கைகளுக்குள் வந்து விழுந்த ஆவணங்களில் “ஏதோ விடுபட்டிருப்பதாக” தெரிவதால் தாம் அந்தக் கேள்விகளை எழுப்புவதாகவும் சொன்னார்.

அந்த முன்னாள் பிகேஆர் இளைஞர் தலைவரும் மற்றும் பலரும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம்- பிற்பகல் மணி 3.15லிருந்து மாலை மணி 6.00 வரை- நோர்த்தாம் ரோட்டில் உள்ள எம்ஏசிசி அலுவலகத்தில் செலவிட்டனர்.

பத்ருல் ஹிஷாம் குழுவினரிடமிருந்து எம்ஏசிசி முதுநிலை மேலாளர் சூக் வெய் தெம் புகாரைப் பெற்றுக் கொண்டார்.

பத்ருல் ஹிஷாம் 25 ஆவணங்களை எம்ஏசிசி-யிடம் சமர்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.

அந்த ஆவணங்களைக் கொண்ட பொட்டலம் நிபோங் தெபாலில் உள்ள தமது வீட்டில் செப்டம்பர் 12ம் தேதி கிடைத்ததாக அவர் கூறினார்.

இப்போது எம்ஏசிசி வசமுள்ள பிரதிகளில் கீழ் வரும் ஆவணங்களும் அடங்கும்:

1. முன்னாள் போலீஸ் ஊழியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அரசு சாரா அமைப்பு, 500,000ரிங்கிட் மானியத்தைப் பெறும் என அதற்குத் தெரிவிக்கும் மார்ச் 28ம் தேதியிடப்பட்ட நிதி அமைச்சு கடிதம்

2. அந்த மானியத்தை ஏற்றுக் கொள்வதற்கு தான் ஒப்புக் கொள்வதாக அந்த அரசு சாரா அமைப்பு நிதி அமைச்சுக்கு எழுதிய பதில் கடிதம்

3. அரசாங்கத் துறையிடமிருந்து மானியத்தைப் பெறுவதற்கு உதவிய மூத்த கட்சித் தலைவர் பெயரைத் தெளிவாகக் குறிப்பிடும் அரசு சாரா அமைப்பின் கூட்டக் குறிப்புக்கள். தனியார் நிறுவனத்துக்கு அந்தத் தொகையில் 40 விழுக்காடு கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கூட்டக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

4. அந்த நிறுவனத்துக்கு ‘தரகுப் பணமாக’ கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் மொத்தம் 200,000 ரிங்கிட்டுக்கான 10 காசோலைகளின் பிரதிகள்.

5. அந்தப் பரிவர்த்தனையும் தரகுப் பணம் கொடுக்கப்பட்டதும் அரசாங்கத் துறைக்கு தெரியும் என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்கள்.

அந்த பரிவர்த்தனையை சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறையும் பிரபலமான அரசியல்வாதியும் விளக்க வேண்டும்- சந்தேகத்துக்குரிய தரகுப் பணம் ஏன் கொடுக்கப்பட்டது, அந்தப் பணத்தைப் பெற்ற நிறுவனத்துக்குப் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதும் தெரிவிக்கப்பட வேண்டும் என பத்ருல் ஹிஷாம் வலியுறுத்தினார்.

.

TAGS: