நாங்கள் இஸ்லாமிய ஜனநாயகவாதிகள் என்கிறார் பாஸ் தலைவர் ஒருவர்

பாஸ் அரசியல் கட்சியாக 64 ஆண்டுகள் நிலைத்திருந்த பின்னர் “முதிர்ச்சி” அடைந்துள்ளதாக அந்தக் கட்சியின் ஆய்வுக் கழக நிர்வாக இயக்குநர் சுல்கெப்லி அகமட் கூறுகிறார்.

அவர் பாஸ் கட்சியில் முன்னேற்ற சிந்தனைகளைக் கொண்ட எர்டோகன் பிரிவைச் சார்ந்தவர் ஆவார்.

“நாங்கள் இனிமேலும் இஸ்லாமியவாதிகள் அல்ல. ஆனால் இஸ்லாமிய ஜனநாயகவாதிகள்,” எனக் கோலாலம்பூரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் சொன்னார்.

உலகம் முழுவதும் இஸ்லாமியவாதிகளைடையே ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு இணங்க அது அமைந்துள்ளது என்றும் மத்திய கிழக்கில் நிகழ்ந்த அரபு எழுச்சியில் அந்த மாற்றங்களைக் காணலாம் என்றும் சுல்கெப்லி தெரிவித்தார்.

உலகம் முழுவதும் இஸ்லாமியவாதிகள் தங்களது ‘இஸ்லாமிய நாட்டு சிந்தனையிலிருந்து’ விலகி மக்கள் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் செய்திகளை வெளியிடத் தொடங்கியுள்ளனர் என்றும் அந்த கோலசிலாங்கூர் எம்பி சொன்னார்.

“ஆளுமை, அரசாங்கம் என்ற மிகவும் கடுமையான விஷயங்களில் நாம் இறைவனுக்கு  எப்படி கீழ்ப்படிகிறோம் என்பதே முக்கியமாகும்.”

நேற்று சுல்கெப்லி Refsa என அழைக்கப்படும் பாஸ் சிந்தனைக் களஞ்சியம் ஏற்பாடு செய்த கருத்தரங்கு ஒன்றில் பேசினார்.

“நல்ல ஆளுமை, அரசாங்கத்தின் மூலம் இந்த உலகத்தை அனைவருக்கும் சிறந்த இடமாக மாற்றும் முயற்சிகளுக்கு பங்காற்ற வேண்டியது முஸ்லிம் ஒருவரின் கடமையாகும்.”

‘புதிய கால கட்டத்தை’ சேர்ந்த இஸ்லாமிய ஜனநாயகவாதிகள் ஜனநாயக ஆளுமையில் பங்கு கொள்ள விரும்புகின்றனர். அவர்கள் தங்கள் கருத்துக்களை அது அரசியலாக இருந்தாலும் சமயமாக இருந்தாலும் யார் மீதும் திணிக்க விரும்பவில்லை.

“எல்லாம் நல்ல ஆளுமை சம்பந்தப்பட்டதாகும்”,  என்றார் சுல்கெப்லி.

பாஸ் கட்சியின் புதுமுகம்

அந்தக் கருத்தரங்கில் டிஏபி புக்கிட் பெண்டேரா எம்பி லியூ சின் தொங்-கும் பேசினார். அவர் பாஸ் கட்சியின் புதிய நிலையை ஒப்புக் கொண்டார்.

எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் முகமட் மோர்சி அதிபராக பதவி எடுத்துக் கொண்ட போது தமது முக்கியக் கவலை இஸ்லாமியச் சட்டங்கள் அல்ல, கெய்ரோவில் குவிந்துள்ள குப்பைப் பிரச்னையைத் தீர்ப்பதாகும் எனக் கூறியதை லியூ சுட்டிக் காட்டினார்.

பக்காத்தான் ராக்யாட் எதிர்த்தரப்பு கூட்டணியில் பாஸ் கட்சியின் பங்கையும் புதிய தோற்றம் தெளிவுபடுத்தியுள்ளதாக சுல்கெப்லி சொன்னார்.

“நாங்கள் பல கட்சி கூட்டணியில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறோம்,” என்றார் அவர்.

இஸ்லாமிய நாடு என்னும் நிலையிலிருந்து ‘பரிவும் வாய்ப்பும் நிறைந்த நாடு’ என்னும் புதிய சிந்தனைக்குக் கட்சி மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அது ‘Negara Berkebajikan’ என்னும் சித்தாந்தமாகும். அந்தச் சித்தாந்தம் பக்காத்தான் அறிவித்த பொதுக் கொள்கையான Buku Jingga-வில் ஒரு பகுதியாகும் என்றும் சுல்கெப்லி சொன்னார்.

 

TAGS: