மனித உரிமைக்குப் போராடும் அமைப்பான சுவாராம், அரசாங்கத்தின் விசாரணையில் அது ஒரு சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்கப்படுவது உள்பட “மிக மோசமான விளைவுகளை”எதிர்நோக்க நேரலாம், என்றாலும் எது வரினும் எதிர்கொள்ள அது தயாராகவுள்ளது.
“மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்வது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்…. (உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார) அமைச்சர் (இஸ்மாயில் சப்ரி யாக்கூப்)எங்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்படலாம் எனக் கூறியுள்ளார்”, என்று சுவாராம் செயலக உறுப்பினர் சிந்தியா கேப்ரியல் தெரிவித்தார்.
“சுவாராம் ஒரு சட்டவிரோத அமைப்பு என்றும் அவர் கோடி காட்டியிருக்கிறார், (எனவே) எதற்கும் தயாராகவே இருக்கிறோம்”.
என்றாலும் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற திட்டத்தை அது விவரிக்கவில்லை.நேரம் வரும்போது அதைத் தெரிவிப்பதாக அந்த என்ஜிஓ கூறிவிட்டது.
மலேசிய நிறுவனங்களின் ஆணையம் (எஸ்எஸ்எம்), சுவாராமும் பதிவுபெற்ற சுவாரா இன்ஷியேடிப் சென்.பெர்ஹாட்டும் தனித்தனி அமைப்புகள் இரண்டுக்கும் தொடர்பில்லை என்று காண்பிக்க முயல்கிறது.அப்போதுதான் சுவாராமைச் சட்டவிரோத அமைப்பென்று அறிவிக்க வசதியாக இருக்கும் என்பதால் அது அம்முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக சிந்தியா கூறினார்.
“அதிகாரிகள் முறையாக நடந்துகொள்ளவில்லை. சுவாராமும் சுவாரா இனிஷியேடிப்பும் ஒன்றுதான் ஆனால், அவர்கள் வேறுபடுத்திக் காண்பிக்க முயல்கிறார்கள்”, என்றவர் சொன்னார்.
வேறுபடுத்திக் காண்பிப்பதன்வழி சுவாராம் சட்டப்பூர்வ அமைப்பு அல்ல என்பதை நிறுவ எஸ்எஸ்எம் முயல்வதாக அவர் கூறினார்.
1989-இல் சுவாராம் அமைக்கப்பட்டபோது அந்தப் பெயரைப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை.எனவே, அது ‘சுவாரா இனிஷியேடிப்’ என்ற பெயரைப் பயன்படுத்திக்கொண்டு செயல்பட்டது என்று சிந்தியா கூறினார்.
‘தப்பு எதுவும் செய்யவில்லை’
அதன்வழி பணியாளர்களை அமர்த்திக்கொள்ளல், அவர்களுக்குச் சம்பளம் கொடுத்தல் போன்ற நிர்வாக விவகாரங்களைச் சட்டப்பூர்வமாக செய்ய சுவாராமால் முடிந்தது.
“எல்லாவற்றையும் சட்டப்பூர்வமாக செய்தல் அவசியமான ஒன்று.மனித உரிமை அமைப்பான நாங்கள் வெளிப்படைத்தன்மையிலும் பொறுப்புடைமையிலும் நம்பிக்கை கொண்டவர்கள்”, என்றாரவர்.
“அதனால்தான் எங்கள் கணக்குவழக்குகள் கச்சிதமாக இருக்கும்.கணக்கெல்லாம் வெளியில் தணிக்கை செய்யப்படுகின்றது அதில் (எஸ்எஸ்எம்மால்) குறைகாண முடியாது. எனவே,எங்களைப் பொறுத்தவரை எந்தத் தப்பும் செய்யவில்லை”.
விசாரணைக்கு உதவியாக சுவாராம் வாரிய இயக்குனர்களான குவா கியா சூங்கும் இயோ செங் குவானும் கூடவே நிர்வாக, நிதி ஒருங்கிணைப்பாளர் டயன் சவரியும் இன்று எஸ்எஸ்எம்முக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.