சுவாராம் ஒடுக்கப்பட்டாலும் ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகளை மலேசிய அரசாங்கம் கொள்முதல் செய்ததில் கையூட்டுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது மீதான பிரஞ்சு விசாரணை தொடரும் என அந்த மனித உரிமை போராட்ட அமைப்பு இன்று அறிவித்துள்ளது.
“அரசாங்கம் எங்கள் மீது குற்றம் சாட்ட முடிவு செய்தாலும் அல்லது எங்களுக்கு வேறு எதுவும் செய்தாலும் ஸ்கார்ப்பின் வழக்கு தொடரும் என எங்கள் வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.”
“அரசாங்க நடவடிக்கை பிரான்ஸில் நிகழும் எங்கள் வழக்கு மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது,” என சுவாராம் செயலக உறுப்பினர் சிந்தியா கேப்ரியல் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.
சுவாராமின் அமைப்பான Suara Inisiatif Sdn Bhd-க்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சமர்பிக்குமாறு சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையம், சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்குப் பரிந்துரை செய்யும் என அறிவித்துள்ள உள்நாட்டு வாணிக,கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப்பையும் சிந்தியா சாடினார்
“இஸ்மாயில் அந்த அறிவிப்பைச் செய்த போது எங்கள் வாரிய இயக்குநர்களும் நிர்வாக இயக்குநர்களும் சிசிஎம் தலைமையகத்தில் இருந்தனர். அவர்கள் விசாரிக்கப்பட்டனர்.”
“சிசிஎம் கட்டிடத்தில் விசாரணை தொடரும் போது அமைச்சர் எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும் ? அது தேவையற்றது. கேள்விக்குரியது,” என்றும் சிந்தியா சொன்னார்.
‘Suara Inisiatif கணக்குகளில் எந்தத் தவறும் இல்லை’
இன்று பிற்பகல் ஒரு மணி வரையில் Suara Inisiatif இயக்குநர்களான குவா கியா சூங், இயோ செங் குவான், சுவாராம் நிர்வாக இயக்குநரான இ நளினி, அதன் நிர்வாக நிதி ஒருங்கிணப்பாளரான டியான் சாவாரி ஆகியோர் சிசிஎம் தலைமையகத்தில் இருந்தார்கள். அப்போது அவர்களை சிசிஎம் அதிகாரிகள் விசாரித்தனர்.
Suara Inisiatif-வின் கணக்குகள் ‘குழப்பமாக’ இருப்பதாகவும் அதன் நடவடிக்கைகள் அதன் கணக்கறிக்கைகளில் காணப்பட்டுள்ளதாக மாறாக அமைந்துள்ளதாகவும் இஸ்மாயில் சொல்வதை சிந்தியா மறுத்தார்.
“நாங்கள் நிறுவனச் செயலாளர், கணக்கு தணிக்கையாளர்கள் ஆகியோருடன் அமர்ந்து கணக்குகளை சரி பார்த்துள்ளோம். அதில் எந்தத் தவறும் இல்லை.”
“நாங்கள் சிசிஎம் அதிகாரிகளுடனும் அதனைச் செய்துள்ளோம். எங்கள் கணக்குகளில் எந்தத் தவறும் இல்லை என நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்,” என்றார் அவர்.