இசி: படத்தை மிதிப்பது வெறுக்கத்தக்கது, அரசமைப்புக்கு முரணானது

ஆகஸ்ட் 30ம் தேதி Janji Demokrasi பேரணியின் போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் படம் மிதிக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் கடுமையாகச் சாடியுள்ளது.

அந்தச் செயல் வெறுக்கத்தக்கது, அரசமைப்புக்கு முரணானது, ஜனநாயகத்துக்குப் புறம்பானது என அதன் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் வருணித்தார்.

பிரதமரை அவமதிப்பது ஜனநாயக நடைமுறைகளை மீறுவதாகும் என அவர் சொன்னார். ஏனெனில் அரசாங்கத் தலைவர் என்பவர் பொதுத் தேர்தல் வழி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்படுகின்றவர் ஆவார்.

“அவர்கள் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ன  என்பதையே அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே நான் கருதுகிறேன். அது வெறுக்கத்தக்கது. நாகரீகமற்ற பண்பாடு, அரசமைப்பையும் நன்னடத்தையையும் நன்னெறிகளையும் வலியுறுத்தும் ருக்குநெகாரா கோட்பாடுகளுக்கு எதிரானது.”

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஆனால் அத்தகைய நடவடிக்கைகளில் தங்களது ஆதரவாளர்கள் ஈடுபட அனுமதிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடைய கலாச்சாரம் அது என்றால் பொதுத் தேர்தலின் போது என்ன நடக்கும் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை,” என வான் அகமட் உத்துசான் மலேசியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

Janji Demokrasi” ஏற்பாட்டாளர்கள் ‘கற்களை எறிந்த பின்னர் தங்கள் கைகளை மறைத்து கொண்டுள்ளனர்” என அவர் மேலும் குற்றம் சாட்டினார். அவர்களுடைய நடவடிக்கைகள் “முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டவை” என்றும் அவர் சாடினார்.

அவர்கள் மீண்டும் கல்வி கற்பதற்கு பள்ளிக்கூடத்திற்கு திரும்ப அனுப்பப்பட வேண்டும்,”என்றார் வான் அகமட்.

உலகில் எந்த நாட்டிலும் தோல்வி கண்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அரசாங்கத் தலைவருடைய படத்தை மிதித்தது இல்லை என்றும் அவர் கூறினார்.

 

TAGS: