சட்ட விரோதமாகக் கூடியதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவருடைய ஆணையை மீறியதாகவும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து 21 பேரை பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுவித்து விடுதலை செய்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு இருப்பதை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறி விட்டதாக அது தீர்ப்பளித்தது. 2008ம் ஆண்டு பெர்சே-க்கு ஆதரவாக நடத்தப்பட்ட மெழுகுவர்த்தி விழிப்பு நிலையில் பங்கேற்பாளர்கள் ஆற்றிய பங்கை காட்ட போலீஸ் தவறி விட்டதாகவும் நீதிமன்றம் கூறியது.
போலீஸ் சாட்சியங்களில் முரண்பாடு இருப்பதைத் தொடர்ந்து அரசாங்கத் தரப்பு வழக்கில் இடைவெளி உள்ளது.”
“கூட்டத்திரை கலைந்து செல்லுமாறு உத்தரவிட்ட நேரம் குறித்து சாட்சிகள் முரண்பட்டுள்ளனர். சிலர் இரவு மணி 9.45 என்றும் மற்றவர்கள் 10 மணி என்றும் 11 மணி என்றும் குறிப்பிட்டுள்ளனர். அதனால் அவர்களுடைய நம்பகத்தன்மையும் கலைந்து செல்லுமாறு வெளியிடப்பட்ட ஆணையின் நம்பகத்தன்மையும் பாதிக்கப்பட்டுள்ளது.”
“அதனை தொடர்ந்து எதிர்வாதம் புரியுமாறு குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைக்க வேண்டிய தேவை இல்லை. அவர்கள் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகின்றனர்,” என செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹாயாத்துல் அக்மால் கூறினார்.
அத்துடன் பெட்டாலிங் ஜெயா நகராட்சி மன்றக் கட்டிடத்துக்கு முன்பு உள்ள புல் திடலில் நிகழ்ந்த தொடக்கக் கூட்டம் திடீரென நடைபெற்றதாகும். காரணம் அதற்கு முறையாக ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.
பங்கேற்பாளர்கள் பல வண்ண டி சட்டைகளையும் அணிந்திருந்தார்கள். அவற்றில் இசா எதிர்ப்பு செய்திகள் உட்பட பல செய்திகள் காணப்பட்டன. ஆகவே யார் ஏற்பாட்டாளர்கள் என்பதை தம்மால் உறுதி செய்ய இயலவில்லை என்பதையும் ஹாயாத்துல் சுட்டிக் காட்டினார்.
“அத்தகைய சூழ்நிலையில் போலீஸ் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு பங்கேற்பாளர்கள் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே அதனை சட்டவிரோதக் கூட்டமாக கருத முடியாது,” என ஹாயாத்துல் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா, சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூ, கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் ஆகியோரும் அடங்குவர்.
பெட்டாலிங் ஜெயா ஜாலான் யோங் சூக் லின் -னுக்கு அப்பால் உள்ள பெட்டாலிங் ஜெயா நகராட்சி மன்றத் திடலில் சட்ட விரோதமாகக் கூடியதாகவும் கலைந்து செல்லுமாறு போலீஸ் அதிகாரி சூப்பரிடெண்ட் முகமட் சுக்கோர் சுலோங் விடுத்த ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்ததாகவும் அந்த 21 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி இரவு 9 மணியிலிருந்து 10 மணி வரையில் இசா எதிர்ப்பு விழிப்பு நிலையின் போது அவர்கள் அந்தக் குற்றங்களைப் புரிந்ததாக கூறப்பட்டது.
போலீஸ் சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் அந்த இரண்டு குற்றச்சாட்டுக்களும் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.
இப்போது அந்த பிரிவு நீக்கப்பட்டு அமைதியாக ஒன்று கூடும் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.