லினாஸின் இக்கட்டான சூழ்நிலையை ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் கேலி செய்கிறார்

லினாஸ் தொழில் நிறுவனம் தனது அரிய மண் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்படும் கழிவுப் பொருட்கள் மீது இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்டிருப்பதாக மேற்கு ஆஸ்திரேலிய மாநில நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேலியாகக் குறிப்பிட்டுள்ளார்.

லினாஸ் “அந்தக் குழந்தையை தானே வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு” தள்ளப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது என ரோபின் சாப்பள் என்ற அந்த உறுப்பினர் தமது இணையத்தளத்தில் எழுதியுள்ளார்.

லினாஸ் தனது கழிவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று மலேசியா இப்போது கோரியுள்ளது.

அதனைத் தொடர்ந்து தனது கழிவுப் பொருட்களை ஏற்றுக் கொள்வதற்கு லினாஸ் ஆஸ்திரேலிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் அது சாத்தியமில்லை என அவர் சொன்னார்.

மலேசியாவில் இயங்குவதின் மூலம் கடுமையான ஆஸ்திரேலிய சட்டங்களிலிருந்து தப்பி விட்டதாக  லினாஸ் எண்ணியிருக்க வேண்டும் என சாப்பள் கூறினார்.

“ஆனால் நிலைமை அப்படி இல்லை. மேற்கு ஆஸ்திரேலியா தனது கதிரியக்கக் கழிவுகளை ஏற்றுக் கொள்ளும் என அது நினைத்தால்  அது மீண்டும் சிந்திப்பது நல்லது.”

“அதனை 1999ம் ஆண்டுக்கான WA அணுக் கழிவு சேமிப்புச் சட்டம் இங்கு தடை செய்கிறது,”என அவர் எழுதியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் நீண்ட காலக் கொள்கை

லினாஸ் இரண்டு ஆண்டுகளுக்கு இயங்குவதற்கு அனுமதிக்கும் தற்காலிக நடவடிக்கை அனுமதியை அணு எரிசக்தி அனுமதி வாரியம் அண்மையில் லினாஸுக்கு வழங்கியது.

அந்த அனுமதியைத் தொடர்ந்து லினாஸ், மேற்கு ஆஸ்திரேலியாவின் உட்புறப்பகுதிகளில் அமைந்துள்ள வெல்டு மலையில் உள்ள தனது சுரங்கத்திலிருந்து தாதுப் பொருளை ஏற்றுமதி செய்ய முடியும்.

என்றாலும் லினாஸ் தனது கழிவுப் பொருட்களை எப்படி வெளியேற்றப் போகிறது என்ற விவரங்கள் துல்லிதமாகத் தெரிவிக்கவில்லை. அத்துடன் தற்காலிக நடவடிக்கை அனுமதியில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் மீறப்பட்டால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அணு எரிசக்தி அனுமதி வாரியம் வெளியிடவில்லை.

மலேசியா இன்சைடர் இணையத் தளத்தில் வெளியான தகவலின் படி லினாஸ் தனது கழிவுப் பொருளை திரும்ப ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்ல எண்ணியுள்ளது என்றும் அதற்காக  ஆஸ்திரேலிய கதிரியக்கப் பாதுகாப்பு, அணுப் பாதுகாப்பு நிறுவனத்தின் அனுமதியை நாடியுள்ளது.

ஆனால் மற்ற நாடுகளிலிருந்து அணுக் கதிரியக்கக் கழிவுப் பொருட்களை ஏற்றுக் கொள்வதில்லை என்பது ஆஸ்திரேலியாவின் நீண்ட காலக் கொள்கை என்பதை ஆஸ்திரேலியத் தூதரகம் சுட்டிக் காட்டியுள்ளது.

நிலையான சுரங்க, சுற்றுச்சூழல், சமூக, சட்டத் தரங்கள் மீதான ஆஸ்திரேலியாவின் எதிர்பார்ப்புக்களை மதிக்க தவறி விட்ட இக்கட்டான சூழலில் லினாஸ் சிக்கிக் கொண்டுள்ளதாகக் கூறி சாப்பள் தமது பதிவை முடித்துக் கொண்டுள்ளார்.

 

TAGS: