ஹிண்ட்ராப் தலைவர் நாட்டை விட்டு புறப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டார்

ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழுத் தலைவர் பி வேதமூர்த்தி நாட்டை விட்டு புறப்படுவதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளார். அவர் தேசிய மருட்டலாக இருப்பது அந்தத் தடைக்குக் காரணம் எனக் கூறப்பட்டது.

“குடி நுழைவுத் துறை தலைமை இயக்குநரும் தேசியப் போலீஸ் படைத் தலைவரும் என் மீது கட்டுப்பாடு விதித்துள்ளதாக என்னிடம் குடி நுழைவு அதிகாரிகள் தெரிவித்தனர்,” என அவர் சொன்னார்.

“நான் தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலாக இருப்பதாக இரு தரப்பும் தெரிவித்த காரணம்,” என மலேசியாகினி தொடர்பு கொண்ட போது வேதமூர்த்தி கூறினார்.

வர்த்தக நிமித்தம் தாம் பிலிப்பீன்ஸில் உள்ள மணிலாவுக்கு செப்பாங் குறைந்த கட்டண விமான முனையத்திலிருந்து  மாலை 6.30க்கு விமானத்தில் புறப்படுவதாக இருந்தது என்றும் அவர் சொன்னார்.

“அரசாங்கம் என்னை ஏமாற்றி விட்டது. அது ஜுலை 30ம் தேதி எனக்கு மிகவும் நல்ல பாஸ்போர்ட்டை வழங்கியது. இரண்டு மாதங்களுக்கு பின்னர் நான் நாட்டை விட்டு புறப்பட அனுமதிக்கப்படவில்லை.”

“நான் இந்த நாட்டுக்குள் வந்த போது பாதுகாப்பு மருட்டலாக இல்லை. ஆனால் இரண்டு மாதங்களுக்கு பின்பு நான் திடீரென பாதுகாப்புக்கு மருட்டலாகி விட்டேன்,” என்றார் அவர்.

பாதுகாப்பு மருட்டல் எனத் தம்மைத் தவறாக குற்றம் சாட்டியதற்காக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் மீதும் தேசிய போலீஸ் படௌத் தலைவர் மீதும் போலீசில் புகார் செய்யப் போவதாகவும் வேதமூர்த்தி சொன்னார்.

குடி நுழைவு தலைமை இயக்குநர் தமது அதிகாரங்களுக்கு அப்பால் செயல்பட்டுள்ளதாகவும் தாம் புகார் செய்யப் போவதாக அவர் மேலும் கூறினார்.

“அவர்கள் என்னை என் சொந்த நாட்டிலேயே கைதியாக்கியுள்ளனர். அது, காரணம் இல்லாமல் குடிமகனை தமது நாட்டிலிருந்து புறப்படுவதைத் தடுக்கக் கூடாது எனக் கூறும்  அனைத்துலக ஒப்பந்தங்களுக்கும் சட்டங்களுக்கும் முரணானதாகும்,” என்றும் வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

 

TAGS: