போலீஸ் படையையும் சங்கப் பதிவதிகாரி அலுவலகத்தையும் சேர்ந்த ஆறு அதிகாரிகள் இன்று முற்பகல் மணி 11.40 வாக்கில் மனித உரிமைகள் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாரமின் அலுவகத்திற்கு வந்தனர். அவர்கள் அந்த அலுவலகத்தை ‘சோதனை’ செய்யும் நோக்கத்துடன் வந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
“சோதனைக்காக போலீஸ், சங்கப்பதிவதிகாரி அலுவலக அதிகாரிகள் அங்கு வந்துள்ளதாக சுவாராம் ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இயக்குநர்களும் வழக்குரைஞர்களும் வரும் வரையில் அவர்களை உள்ளே நுழைய ஊழியர்கள் அனுமதிக்கவில்லை,” எனத் தொடர்பு கொள்ளப்பட்ட போது சுவாராம் வழக்குரைஞர் பாடியா நாட்வா பிக்ரி தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.
தாங்கள் எதனைத் தேடுகிறோம் என்பதை அந்த அதிகாரிகள் ஊழியர்களிடம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.
“அவர்கள் அங்கு சோதனைக்காக சென்றுள்ளதாக நான் நம்புகிறேன்,” என்றார் பாடியா.
பாடியா நண்பகல் 12 மணி வாக்கில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சுவாராம் அலுவலகத்தைச் சென்றடைந்த போது போலீஸாரும் மற்ற அதிகாரிகளும் வெளியில் நின்று கொண்டிருந்தனர். சுவாராம் இயக்குநர்கள் வந்து சேரவில்லை.
‘சோதனை அல்ல’
என்றாலும் அது சோதனை அல்ல என்றும் “ஒர் அமைப்பை சோதனை செய்வதற்கான அறிக்கை” என்னும் தலைப்பைக் கொண்ட பாரத்தை வழங்குவதற்காக தாங்கள் அங்கு வந்துள்ளதாக சங்கப் பதிவதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த ஒர் அதிகாரி சொன்னார்.
இதர பல விஷயங்களுடன் அந்த அரசு சாரா அமைப்பின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அந்தப் பாரம் கோருகின்றது.
ஆனால் சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையத்தின் கீழ் ஒரு நிறுவனம் என்பது சுவாராம் நிலையாகும்.
“எங்கள் அமைப்பு Suara Inisiatif Sdn Bhd என்ற வரம்புக்குட்பட்ட நிறுவனம் என தெரிவித்துக் கொள்கிறேன். ஜுலை 3ம் தேதி எங்களை ஏற்கனவே சிசிஎம் சோதனை செய்து விட்டது,” என அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான இ நளினி கூறினார்.
நான் அந்த பாரத்தைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் அதன் பின்புறத்தில் Suara Inisiatif நிர்வாக இயக்குநர் என வெறுமனே கையெழுத்திட்டதாகவும் நளினி சொன்னார்.
அந்த நிறுவனத்தின் வழக்குரைஞர்களில் ஒருவரான லத்தீப்பா கோயாவுடன் சிறிது நேரம் விவாதம் நடத்திய பின்னர் அந்த அதிகாரிகள் பிற்பகல் மணி 12.30 வாக்கில் அந்த இடத்திலிருந்து புறப்பட்டார்கள்.