“கிளந்தானியர் பலரும் ஹூடுட் சட்டத்தை விரும்புகிறார்கள்”

கிளந்தானுக்கு மேற்கொண்ட வருகை ஹூடுட் சட்டம் பற்றி அம்மாநில மக்கள் கொண்டுள்ள கருத்தை அறிந்துகொள்ள உதவியதாகக் கூறுகிறார் அரசமைப்பு வல்லுனர் ஒருவர்.

“ஹூடூட் பற்றி தோக் குருவிடம் (கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட்) எடுத்துரைக்க கிளந்தான் சென்றேன். அங்கு சாதாரண மக்களிடம் பேசிப் பார்த்தபிறகு அவ்விவகாரம் தொடர்பில் என் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று”, என்று அப்துல் அசீஸ் பாரி மலேசியாகினிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்.

ஹூடுட் சட்டம் தொடர்பில் மக்களின் விருப்பத்தை அறிய ஒரு கருத்துக்கணிப்பு நடத்தவும் பாஸின் கிளந்தான் அரசு தயாராக உள்ளதென அந்த யுஐடிஎம் சட்ட விரிவிரையாளர் கூறுகிறார்.

“நிலைமை இப்படியிருக்க ஹூடுட்டுக்கு இடம் ‘இல்லை’ என்று கூறியுள்ளதற்காக நஜிப்பை அங்குள்ள அம்னோ தலைவர்கள் சபித்தனர்.  நஜிப்பின் அறிவிப்பால் அம்மாநிலத்திலிருந்து அம்னோ இனி மூட்டை முடிச்சுடன் வெளியேற வேண்டியதுதான்”, என்றாரவர்.

ஹூடுட் சட்டத்தை நஜிப் நிராகரித்தது அவருக்கு முஸ்லிம்-அல்லாதாரின் வாக்குகளைப் பெற்றுத்தரப் போவதில்லை என்றவர் கருத்துரைத்தார்.

பாஸ், ஃபேஸ்புக்கில் தனக்குக் கிடைத்துள்ள ஆதரவை வைத்து மலாய்க்காரர்/முஸ்லிம் பகுதிகளில் அம்னோவுக்கு ஆதரவில்லை என்று நம்பிக்கை கொண்டுள்ளது என்றாரவர்.

நீறுபூத்த நெருப்பாக இருந்த ஹூடுட் விவகாரம், 1990-களில் கிளந்தான் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தடையாக இருந்தவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்தான் என்று கடந்த வாரம் நிக் அசீஸ் கூறப்போக மீண்டும் பற்றிக்கொண்டது.

மகாதிர், பதிலுக்கு இப்போதைக்குத் தாம் பிரதமராக இல்லை என்பதால் ஹூடுட் சட்டத்தைக் கொண்டுவர வேண்டியதுதானே என்று நிக் அசீசுக்குச் சவால் விடுத்தார்.

நஜிப், இப்போதைய நிலையில் நாடு முழுக்க ஹூடுட் சட்டத்தைச் செயற்படுத்தவியலாது என்றும் பாஸ் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பத்தான் இப்படியெல்லாம் நாடகமாடுகிறது என்றும் சொன்னார்.

இப்போதைய சட்டங்களில்,  ஹூடுட் அம்சங்கள்  உண்டு என்றும் “அதன் தீவிரத்தன்மைதான் இல்லை” என்றும் அவர் வலியுறுத்தினார். 

ஆக, ஒருபுறம் ஹூடுட் அம்சங்கள் இப்போதைய சட்டங்களில் இருப்பதாகக் கூறும் நஜிப்,  மறுபுறம் ஹூடுட் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார் என்பதையும் அப்துல் அசீஸ் சுட்டிக்காட்டுகிறார். அந்த வகையில் அவர் முன்னுக்குப்பின் முரண்படுகிறார். 

“அதனால்தான் முஸ்லிம்-அல்லாதார் ஆதரவைப் பெறும் முயற்சியில் ஈடுபடும் அம்னோ மலாய்/முஸ்லிம் பகுதிகளில் அதற்குள்ள ஆதரவை இழக்கும் அபாயம் இருக்கிறது என்கிறேன்”, என்று அப்துல் அசீஸ் கூறினார்.

அரசமைப்பு ஹூடுட் உள்பட இஸ்லாமிய சட்டம் பின்பற்றப்படுவதற்குத் தடை விதிக்கவில்லை.

“அரசமைப்பு மதச்சார்பற்றது என்று டிஏபி கூறியிருப்பதில் உண்மையில்லை. எப்படியோ மசீச, கெராக்கானுடன் சேர்ந்து டிஏபி-யும் இப்படியொரு தப்பான எண்ணத்தைக் கொண்டிருக்கிறது.”

பாஸ் பின்வாங்காது

“ஹூடுட் சட்டத்தை எதிர்ப்பதில் மசீசவையும் கெராக்கானையும் முந்திகொள்ளப் பார்க்கிறது டிஏபி” என்றும் அசீஸ் குறிப்பிட்டார்.

“இதனால் (டிஏபி தலைமைச் செயலாளர்) லிம் குவான் எங்  கூறுவதுபோல் பக்காத்தான் கொள்கை மாறப்போவதில்லை. ஏனென்றால் ஹூடுட் கிளந்தானில் அதுவும் முஸ்லிம்களிடத்தில் மட்டுமே அமலாக்கப்படும்.”

கிளந்தான் மக்களின் விருப்பத்தை அறியாமல், டிஏபி ஹூடுட் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது ஜனநாயக அணுகுமுறை ஆகாது.

“நிக் அசீஸ் அவரது மாநில மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்துகொள்கிறார் என்பதை டிஏபி கவனிக்கத் தவறிவிட்டது…அது மக்களின் விருப்பத்தை மதித்துச் செயல்படுகிறதே தவிர, ஹூடுட்டை வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பார்க்கிறது அல்லது பக்காத்தான் பங்காளிக்கட்சிகளுக்கு இரண்டகம் செய்துவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை.

“இவ்விசயத்தில் பாஸ் விட்டுக்கொடுக்காது. அதைப் பிடிவாதம் என்று சொல்ல முடியாது. கிளந்தான் மக்களில் பெரும்பாலோர் விரும்புவதை அது செயல்படுத்த முனைகிறது. அதுதானே அடிப்படை ஜனநாயகம். அதை கெடாவில் கொண்டுவர பாஸ் விரும்பவில்லை. ஏனென்றால் அங்குள்ள நிலைமை வேறு”, என்றாரவர்.

“ஹூடுட் விசயத்தில் பாஸ், ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படையாக நடந்துகொள்ள விரும்புகிறது. அதனால்தான் கிளந்தானில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தவும் அது தயாராகவுள்ளது.”

பாஸ் கட்சியின் நிலையைத் தற்காத்துப் பேசிய அப்துல் அசீஸ், 1990-இலிருந்து கிளந்தானை ஆண்டுவரும் அக்கட்சி தொடர்ந்து நிலைத்திருக்க ஹூடுட் சட்டத்தைக் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சி சரியான ஒன்றே என்றார்.

“கிளந்தானியர்கள் தங்களின் விருப்பம் மதிக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். மற்ற மலேசியர்களுடன் இணைந்திருக்க அவர்கள் விரும்புகிறார்கள். அதே நேரத்தில் சக மலேசியர்கள் தங்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

“இங்கு பிரச்னை, பாஸ்  முஸ்லிம்-அல்லாதவர்களையோ கிளந்தானுக்கு வெளியில் உள்ளவர்களையோ ஹூடுட் சட்டத்தை ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது என்பதல்ல.  கிளந்தானியர்களை அவர்கள் விரும்பும் சட்டத்தைக் கைவிட வேண்டும் என்று வற்புறுத்துவதுதான் பிரச்னையாகவுள்ளது.”

டிஏபி அதன் நிலைப்பாட்டிலிருந்து இறங்கிவர வேண்டும். கிளந்தானில் ஹூடுட் சட்டத்தின் செயலாக்கம்  பக்காதானை வலுப்படுத்துமே தவிர பலவீனப்படுத்தாது என்றாரவர்.

“அது நாட்டின் பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதாகவும் அமையும்.”

TAGS: