மீண்டும் நபிகளை கேலி செய்யும் சித்திரங்கள்: பிரான்ஸில் பதற்றம்!

முகமது நபி அவர்களை கேலி செய்யும் வகையில் பிரெஞ்சு பத்திரிகை ஒன்று கேலிச் சித்திரங்களை வெளியிட்டதை அடுத்து இருபது நாடுகளில் உள்ள தமது தூதரகங்கள் மற்றும் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படும் எனும் பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

நாளை வெள்ளிக்கிழமையன்று அந்த நாடுகளில் பிரார்த்தனைக் கூட்டங்கள் இடம்பெற்ற பிறகு மேலும் பதற்றங்கள் அதிகரிக்கலாம் என்கிற அச்சம் காரணமாகவே பிரான்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கேலிச் செய்திகளை வெளியிடும் பிரெஞ்சு பத்திரிகையான சார்லி ஹெப்டோ இவ்வகையில் இருபது படங்களை வெளியிட்ட நிலையில் தான் மிகவும் கவலையடைந்துள்ளதாக பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் லாரேண் ஃபாபியே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் முகமது நபியை கேலி செய்யும் வகையில் எடுக்கப்பட்ட சர்ச்சைகுரிய காணொளி வெளியாகி, அதையடுத்து அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்த சூழலில், அந்தப் போராட்டங்களை கிண்டல் செய்தே அந்தப் பத்திரிகை கேலிச் சித்திரங்களை வெளியிட்டது.

கடந்த நவம்பர் மாதம் இதே போன்ற கேலிச் சித்திரங்களை அந்தப் பத்திரிகை வெளியிட்ட போது, அதன் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டங்களை முன்னெடுக்க பாகிஸ்தானில் விடுமுறை!

இதனிடையே இஸ்லாத்துக்கு எதிராக அமெரிக்காவில் எடுக்கப்பட்ட தொழில்முறை ரீதியில் அல்லாத ஒரு படம், முஸ்லிம் உலகில் பெரும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் வகையில் எதிர்வரும் வெள்ளிக் கிழமையன்று பாகிஸ்தான் அரசு பொது விடுமுறை அளித்துள்ளது.

முகமது நபி அவர்கள் மீதான அன்பை வெளிக்காட்டும் ஒரு தினமாக அந்த நாள் கடைபிடிக்கப்படு என பாகிஸ்தானின் அமைச்சரவை தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபதிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகில் செல்ல முயன்ற நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய வேளையிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது.

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற வன்முறையில் அங்கு குறைந்தது மூன்று பேர்களாவது பலியாகியுள்ளனர்.

உலகெங்கும் இந்த விஷயம் தொடர்பில் நடைபெற்றுள்ள ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதரும் அடங்குவார்.