ஏஜி அலுவலகம்: சுவாராம் மீதான சிசிஎம் புலனாய்வு முழுமையாக இல்லை

1965ம் ஆண்டுக்கான நிறுவனச் சட்டத்தின் கீழ் சுவாராம் எனப்படும் Suara Rakyat Malaysia மற்றும் Suara Initiatif Sdn Bhd ஆகியவை புரிந்துள்ளதாகக் கூறப்படும் குற்றங்கள் பற்றியும் அதன் கணக்குகள் பற்றியும் மேலும் ஆய்வு நடத்துமாறு சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையத்துக்கு ஏஜி என்னும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் பணித்துள்ளது.

சிசிஎம் சமர்பித்த புலனாய்வு அறிக்கைகள் ஏஜி அலுவலகம் குற்றச்சாட்டுக்களை வரைவதற்கு போதுமான அளவுக்கு முழுமையானதாக இல்லை என துணைத் தலைமை வழக்குரைஞர் II துன் அப்துல் மஜிட் துன் ஹம்சா கூறினார்.

“புலனாய்வு முழுமையாக இல்லை. புலனாய்வு அறிக்கைகள் சிசிஎம்-க்கு நேற்று திருப்பி அனுப்பப்பட்டு விட்டன,” என்று அவர் சொன்னார்.

சுவாராம் மீது அடுத்த சில நாட்களில் வழக்கு போடப்படும் என்ற ஊடகத் தகவல்கள் பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது துன் மஜிட் அவ்வாறு கூறினார்.

இதனிடையே சுவாராம் மற்றும் அந்த நிறுவனம் ஆகியவற்றின் கணக்குகளும் அவற்றின் ‘பண வரவு’ பற்றியும் இன்னும் ஆய்வு நடத்தப்படுவதை பாங்க் நெகாரா அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாங்கள் இன்னும் “நிதிகளுக்கான ஆதாரத்தையும் அதன் பண வரவுக்கான ஆதாரத்தையும் இதர சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகளுக்கான ஆதாரத்தையும் நாங்கள் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறோம்,” என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அடுத்த ஆணைகளுக்காக ஏஜி அலுவலகத்திடம் தனது சொந்த புலனாய்வு அறிக்கைகளைச் சமர்பிப்பதற்கு முன்னர் ஒரே விசாரணையை மற்ற அமைப்புக்களும் மேற்கொள்வதைத் தவிர்ப்பதற்காக பாங்க் நெகாரா அவற்றுடன் ஒத்துழைத்து வருவதாகவும் அவர் சொன்னார்.