13வது பொதுத் தேர்தலுக்கு நிதி திரட்டுவதற்காக பக்காத்தான் ரக்யாட் ‘பக்காத்தான் ரக்யாட்டுடன் பிரதான விருந்து’ என்னும் தலைப்பில் மிகப் பெரிய விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.அவ்விருந்து செப்டம்பர் 28-இல் ஷா ஆலம் ஸ்டேடியம் மெலாவாத்தியில் நடைபெறும்.
விருந்துக்கான 255 மேசைகளில் 30 மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் மற்றவை விற்று முடிந்தன என்றும் விருந்து ஏற்பாட்டாளர் டாக்டர் ஹத்தா ரம்லி சொன்னார்.
“ஓர் அரசியல் கூட்டணி என்ற முறையில் பக்காத்தான் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு நிதி திரட்டுவது இதுவே முதல்முறை.
“விருந்துக்காக 255 மேசைகள் போடப்படும்.அவை பெரும்பாலும் விற்று முடிந்தன.எஞ்சியிருப்பவை 30மட்டுமே.மேசை ஒன்றின் விலை ரிம1,000”, என்று ஹத்தா(நடுவில் இருப்பவர்) கூறினார்.
“இந்நிகழ்வின்வழி ரிம1மில்லியனுக்குச் சற்றுக் குறைவாக திரட்ட முடியும் என்று நினைக்கிறோம்.விருந்துக்கு வருவோர் பக்காத்தான் தலைவர்கள் அன்வார் இப்ராகிம், அப்துல் ஹாடி ஆவாங், லிம் குவான் எங் போன்றோர் பேசுவதைக் கேட்கும் வாய்ப்பும் பெறுவர்.”
விருந்தில் பாஸ் ஆன்மிக தலைவரும் கிளந்தான் மந்திரி புசாருமான நிக் அப்துல் அசீஸ் நிக் மாட், பினாங்கு முதலமைச்சரும் டிஏபி தலைமைச் செயலாளருமான லிம், பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயில் ஆகியோரின் பொருள்கள் ஏலத்துக்கு விடப்படும்.
அதன்வழி திரட்டப்படும் பணமும் தேர்தல் நிதியில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று ஹத்தா செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
அக்கூட்டத்தில், கோலாக்கிரை எம்பியுமான ஹத்தாவுடன் டிஏபி-இன் ஹன்னா இயோ, சிலாங்கூர் பிகேஆரின் பொருளாளர் டாக்டர் டான் ஈ கியு ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விருந்துக்குப் பணம் செலுத்தி வர முடியாதவர்கள் தலைவர்களின் பேச்சைக் கேட்பதற்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டிருப்பக்தாகவும் தெரிகிறது.
“விருந்து முடிந்ததும் தலைவர்களின் பேச்சைக் கேட்பதற்கு அவர்களை அனுமதிப்பது பற்றிப் பரிசீலிக்கிறோம்”, என்று ஹத்தா கூறினார்.