தாயிப் நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் என்பது ஆச்சரியமல்ல

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்மூட் நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது சரவாக்கியர் பலருக்கு ஆச்சரியமளிக்கும் தகவல் அல்ல.அவர்களைக் கேட்டால் அவர் எப்படி அவ்வளவு பெரிய பணக்காரர் ஆனார் என்பது தங்களுக்குத் தெரியும் என்பார்கள்.

ஆனால், அவர்களில் பலருக்கு, தாயிப்புக்கு எதிராக பல புகார்கள் செய்யப்பட்டும் மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையமும்(எம்ஏசிசி) போலீசும் மற்ற அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காதிருக்கிறார்களே அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

தாயிப்பின் சொத்துப் பெறுமதி யுஎஸ்$15பில்லியன் அல்லது ரிம46.5பில்லியன் இருக்கலாம் என சுவீஸ் என்ஜிஓ-வான புருனோ மன்செர் மதிப்பிடுகிறது.

கடந்த இரண்டு நாள்களாக கூச்சிங்கில் நேர்காணல் காணப்பட்ட அரசியல்வாதிகளும் சாதாரண பொதுமக்களும் தாயிப் பெரும்பணக்காரர் என்பது அனவரும் அறிந்ததுதான் என்றனர்.

“ஆனால், எவ்வளவு பெரிய பணக்காரர் என்பது தெரியாது.எம்ஏசிசி-யும் போலீசும் பிரதமரும் விசாரணை செய்தால்தான் அதைத் தெரிந்துகொள்ள முடியும்”, என்றனர்.

சரவாக்கியர் பலருக்கும் மிகப் பெரிய குத்தகைகளைப் பெறும், சிமிண்ட் விநியோகம் மொத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்  ராட்சத நிறுவனமான Cahya Mata Sarawak(சிஎம்எஸ்)-க்கும் அதன் துணை நிறுவனங்களும் யாருக்குச் சொந்தம் என்பது தெரியும்.

300பாலங்கள் கட்டும் குத்தகையைப் பெற்ற Titanium Management Sdn Bhd,
269 ஏக்கர் அரசு நிலங்கள் ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட Mornada Sdn Bhd,இன்னும் Sarawak Cable Sdn Bhd, Trenergy Infrastructure Sdn Bhd போன்ற பெரிய நிறுவங்களும் பல செம்பனை தோட்டங்களும் உருக்கு ஆலைகளும் தாயிப்பின் மகன் அபு பெகிருக்குச் சொந்தமானவை என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

இவை போக,தாயிப்பின் குடும்பத்தாருக்குச் சொந்தமாக உலக முழுவதும் 400 நிறுவனங்கள் இருக்கின்றன.மலேசியாவில் மட்டும் 300.இதுவும் அனைவரும் அறிந்த செய்திதான்.

“நம்ப முடியவில்லை……சரவாக்கில் பிறந்த ஒருவர் கற்பனைக்கும் எட்டாத வகையில் சொத்து சேர்த்து வைத்திருப்பதை”, என்கிறார் வணிகரும் பார்டி ரக்யாட் சரவாக்கின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினருமான டெட்வின் இங்கும்பன்.

‘எல்லாமே தாயிப்பின் கட்டுப்பாட்டில்தான்’

வெட்டுமரம், நிலம்,கல்சுரங்கங்கள்,தங்கு விடுதிகள், தோட்டங்கள் என எல்லாமே தாயிப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறுகிறார் 1980-களில் தாயிப்பின்கீழ் துணை அமைச்சராக பணியாற்றிய அம்ப்ரோஸ் கிராமொங்.

 பணி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரும் அதே கருத்தைத்தான் சொன்னார். தம்முடைய கிராமத்தில் தம் குடும்பத்து நிலம் உள்பட மக்களின் நிலங்கள் தாயிப்பின் சகோதரருக்கு ஒதுக்கிக் கொடுக்கப்பட்டதாகக் கூறினார்.

அதே விவகாரம் பற்றிக் கருத்துரைத்த சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியான்(வலம்), “என்னக் கேட்டால் உடனடி விசாரணை தேவை என்பேன்.ஆனால், ஏற்கனவே எம்ஏசிசி விசாரணை செய்வதாக சொன்னார்களே அது என்னவாயிற்று?

“எம்ஏசிசி அதற்கு விளக்கமளித்தால் நன்றாக இருக்கும்”, என்று பா’கிலாலான் சட்டமன்ற உறுப்பினருமான பாரு கூறினார்.

வழக்குரைஞரான அபுன் சுய், தாயிப்பின் சொத்துவளம் பற்றி விசாரிக்க அரச ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றார்.

ஒரு சிறிய குடும்ப வட்டத்துக்குள் இவ்வளவு பெரிய சொத்துவளம் இருப்பதை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது என்றார் சரவாக் தேசிய கட்சி தலைமைச் செயலாளர் பிராங்கி நும்போய்.

“பல நாடுகளும் இவ்விவகாரத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மலேசியர்களும் அரசாங்கம் அதன் ஊழல்-தடுப்பு ஆணையத்தின்வழி நடவடிக்கை எடுப்பதைக் காண ஆவலாக இருக்கிறார்கள்.

“அவர்கள் ஊழல் ஒழிப்பில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால் அம்பலமாக்கப்பட்டுள்ள இவ்வளவு பெரிய விவகாரத்தை அலசி ஆராய வேண்டும்”, என்றார்.

“பில்லியன் கணக்கான ரிங்கிட் சேர்ந்த விதத்தை சம்பந்தப்பட்டவர்கள் விளக்க வேண்டும்”, என்றாரவர்.

இவ்விவகாரம்  தொடர்பில் முதலமைச்சர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளும் முயற்சி பயனளிக்கவில்லை.

பிஎன் தலைவர்களும் அது பற்றிக் கருத்துரைக்க விரும்பவில்லை. 
 

 

 

 

 

TAGS: