பசுமையைப் பேணுவோம், பெங்கெராங்கைப் பாதுகாப்போம்!

ஆஸ்திரேலிய மக்களால் புறந்தள்ளப்பட்ட லினாஸ் (Lynas), பஹாங் , கெபெங்கில் செயல்பட மலேசிய அணு எரிசக்தி வாரியத்தால் தற்காலிக உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தைவானில் சுமார் 10 ஆண்டுகள் செயல்பட்டு, அந்நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்ட ராபிட் (சுயினை) திட்டம் நமது நாட்டின் பெட்ரோனாஸ் நிறுவனத்தால் ‘பெங்கெராங்’கில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. ‘மக்களுக்கு முன்னுரிமை’ என்று முழங்கும் தேசிய முன்னனி அரசாங்கம், மக்களின் கண்டனக் குரல்களையும் மீறி இவ்விரு திட்டங்களையும் செயல்படுத்த ஆயத்தமாகி வருகிறது.

பெங்கெராங், ஜொகூர், கோத்தா திங்கி வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு சிறு பட்டணமாகும். ராபிட் திட்டத்திற்கென இவ்விடம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம், இது கிழக்குக்கரையில் சிங்கப்பூர்- சீனா போன்ற நாடுகளுக்கு மையத்தில் அமைந்துள்ளதே ஆகும். இப்பட்டணம் தென் சீனக் கடலையும் ஜொகூர் நீரிணையையும் நோக்கி வீற்றிருக்கிறது. இப்பட்டணத்தின் மறுகரையில் சிங்கப்பூர் உள்ளது. கிழக்குக் கரை (பாத்தாம், சிங்கப்பூர்) கடல் போக்குவரத்துக்கு பெங்கெராங் மையமாக திகழ்கிறது. தாழ்வான சதுப்பு நிலமானதால், மாநிலத்தின் பிற பகுதிகளைக் காட்டிலும் பெங்கெராங்கின் வளர்ச்சி சற்று பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. மீன் பிடி மற்றும் விவசாயம் இவ்வட்டார குடியிருப்புவாசிகளின் முக்கியத் தொழிலாகும்.

ராபிட் (RAPID- Refining and Petrochemical Intergrated Development)

ராபிட் 60.8 பில்லியன் முதலீட்டில் நிறுமானிக்கப்பட்டு வரும் இராட்சத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஆகும். கடந்த மே 13, 2011-ல் , அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இத்திட்டம், 2016-ல் முழுமையாக செயலாக்கம் காணவுள்ளது. இது நமது பிரதமரால் அறிமுகம் செய்யப்பட்ட நாட்டின் பொருளாதார உறுமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இத்திட்டம் பெங்கெராங்கின் 22,500 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்குகிறது. இதனால், 17 சுற்றுவட்டார கிராமங்கள் சிதைக்கப்படும். மீனவர்களே கூடுதலாக தங்களது வருமானத்தை இழக்க நேரிடும். ஏறக்குறைய 28,000 குடியிருப்பாளர்கள் நியாயமான இழப்பீடு கிடைக்காமல் வெளியேற்றப்படுவார்கள்.

அதே சமயம் இத்திட்டத்தினால் பெரு நிறுவனங்கள் , முதலாளிகள் , ஆட்சியாளர்களின் பங்காளிகள் (உதாரணத்திற்கு :- Dialog Group Bhd , Tebrau Teguh Bhd போன்றவை) அதிக இலாபம் அடையவுள்ளனர்.

பாதிக்கப்படும் இடங்கள்

•    பள்ளிவாசல்    – 6
•    சூராவ்  – 11
•    சீனர் வழிபாட்டுத் தளம்   – 9
•    தேசியப் பள்ளிகள்   – 5
•    இஸ்லாம் மதப் பள்ளி   – 5
•    தேசிய மாதிரி சீனப்பள்ளி  – 3
•    அரசு பணியாளர் இருப்பிடம்  – 3
•    கிராம மருந்தகம்  – 3
•    காவல் நிலையம்     – 2
•    இஸ்லாமிய இடுகாடு   – 11
•    சீனர் இடுகாடு    – 7
•    சமூக மண்டபம்   – 9

சுகாதாரப் பாதிப்பு

பெட்ரோல் வேதிப்பொருள் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளின் நச்சு சுகாதாரத்திற்கு ஆபத்தானது. இத்திட்டத்தினால், சுற்றுவட்டார மக்களுக்கு மூக்கு புற்றுநோய் , குடல் புற்றுநோய் , இரத்தப் புற்றுநோய் மற்றும் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளதை எண்ணெய் மற்றும் வாயு தொடர்பான நிபுணத்துவப் பொறியியலாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இதய நோய் , நுரையீரல் புற்றுநோய் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற நோய்களுக்கு ஆளாகி இறப்போர் எண்ணிக்கை மலேசியாவில் அதிகரித்து வருகிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பு

ராபிட் ஆலையிலிருந்து வெளியாகும் நச்சு வாயுவினால் பெங்கெராங் சுற்றுப்பகுதியில் நீர், காற்று, நிலம் போன்றவற்றின் தூய்மை பாதிப்படையும். தட்பவெப்ப நிலையில் மாற்றம், அமிலம் கலந்த மழை நீர் போன்றவற்றால் பயிர்கள் நாசமாவதோடு , கால்நடைகள் இறக்கவும் நேரிடும். அதுமட்டுமின்றி, தூசு, எண்ணெய், இரைச்சல் ஆகியவற்றோடு மண்ணின் வனப்பையும் அமைதியையும் இழக்கக்கூடும்.

பெட்ரோலியத் துறை அதிகமாக நீரைப் பயன்படுத்தும் ஒரு துறையாகும். நிலத்தடியிலிருந்து அதிகமான நீரை உறிஞ்சி எடுப்பதனால் , ஜொகூர் மாநில மக்கள் எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், பூமி தரை மட்டத்தில் மூழ்கி, அடிக்கடி வெள்ளம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

சூழியல் மாற்றத்தால் சிப்பி, மீன், இறால் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் தங்கள் வாழ்விடங்களை இழக்க நேரிடும். சதுப்பு நிலக்காடுகளும் குறைந்து , நாளடைவில் இல்லாமல் போகும் நிலையும் ஏற்படும்.

தொழிற்துறைப் பாதுகாப்பு

வெளிநாடுகளில் , பெட்ரோலியக் கிடங்கில் நடந்த விபத்துகளினால் சுற்றுவட்டார மக்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அண்மையில், வெனீசுவெலாவில் பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக, அதிகமானோர் கடுமையான காயங்களுக்கு ஆளானதோடு, பல உயிர்களும் பலியாகின. இவ்வெடிப்பின் காரணமாக வெனீசுவெலா மக்கள் எதிர்காலத்தில் பல நோய்களுக்கு ஆளாகும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.

குடியிருப்பாளர் நிலை

பெங்கெராங் மக்கள், தங்கள் வாழ்விடத்தைக் காலி செய்யவோ அல்லது அதற்கு நிகரான எந்த ஒரு சொத்தையோ (நிலம் / பணம்) ஏற்கத் தயாராக இல்லை. இடுகாடு , வழிபாட்டுத் தளம், மதம் / கலாச்சார நிகழ்வு இடங்கள் போன்ற எஞ்சியுள்ள பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதிலும் உறுதியுடன் இருக்கின்றனர்.

எனவே, வட்டார மக்கள் அரசாங்கத்திற்குத் தங்களின் எதிர்ப்பை வெளிபடுத்த எதிர்வரும் செப்டம்பர் 30, 2012 ஞாயிற்றுக்கிழமை , காலை மணி 10க்கு பெங்கெராங்கில் பசுமைப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

நடவடிக்கைகள்

இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்க இம்மக்களுக்கு உரிமை உண்டு.

1.    ராபிட்டினால் ஏற்படும் பாதிப்புகளை மக்களுக்கு விளக்குதல் அவசியம்

2.    ராபிட்டுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்

3.    ஆதாயத்தை மட்டுமே குறியாகக் கொண்டு, மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காத பாரிசான் அரசாங்கத்திற்கு வரும் பொதுத் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவோம்.

——————————————-

-செம்பருத்தி தோழர்கள், ஜொகூர்

TAGS: