‘நாட்டை எதிர்க்கட்சிகளிடம் ஒப்படைப்பது ‘பாவம்’ என்கிறார் நஜிப்

இந்த நாட்டின் எதிர்காலம் மிகவும் மதிப்புமிக்கது. அதனால் அதனைப் பணயம் வைக்கக் கூடாது. நாட்டை எதிர்க்கட்சிகளிடம் ஒப்படைப்பது ‘பாவம்’ (pantang) என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.

அம்னோ தலைவருமான அவர் நேற்று ஜோகூர் அம்னோ பேராளர் கூட்டத்தில் பேசினார். 13வது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி அடைவதை உறுதி செய்ய ஒவ்வொரு அம்னோ உறுப்பினரும் தமது வளங்களையும் வலிமையையும் ஒன்று திரட்ட வேண்டும். என்றார் அவர்.

“நாம் எதிர்காலத்தை பணயம் வைக்கக் கூடாது. நமது எதிர்காலம் மிகவும் மதிப்புமிக்கது. அம்னோ பிறந்தது இந்த மாநிலத்தில் (ஜோகூரில்). இந்த நாட்டை எதிர்க்கட்சிகளிடம் ஒப்படைப்பது நமக்கு ‘பாவம் ஆகும்.

அவர் பெர்சாடா ஜோகூரில் நான்கு ஜோகூர் அம்னோ தொகுதிகளின் கூட்டுப் பேராளர் மாநாட்டை நேற்று தொடக்கி வைத்துப் பேசினார்.

அதில் ஜோகூர் அம்னோ தலைவருமான மந்திரி புசார் அப்துல் கனி ஒஸ்மானும் கலந்து கொண்டார்.

ஜோகூர் பாரு, கோத்தா திங்கி, கூலாய், தஞ்சோங் பியாய் ஆகியவை கூட்டங்களை நடத்தும் அம்னோ தொகுதிகளாகும்.

“எதிர்த்தரப்பிடம் “நம்பகத்தன்மை சூழியமாக” இருப்பதாக வருணித்த அவர், அவை நாட்டை மேம்படுத்துவதற்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் குறை கூறவும் தூண்டி விடவும் அபத்தமான வாக்குறுதிகளை வழங்கவும் மட்டுமே அவற்றுக்குத் தெரியும்.”

பெட்டாலிங் ஜெயாவில் தேவாலயம் ஒன்றில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றில் எதிர்த்தரப்பு ஆதரவு ஆய்வாளர் ஒருவர், அரசாங்கம் அமலாக்கியுள்ள உருமாற்றங்களை பாராட்டியுள்ளதைக் குறிப்பிடும்  பத்திரிக்கை செய்தி ஒன்றை நஜிப் மேற்கோள் காட்டினார்.

அந்த ஆய்வாளர் எதிர்க்கட்சிகளிடம் நம்பகத்தன்மை குறைவாக இருப்பதாகவும் சொல்லியிருப்பதாக அவர் சொன்னார்.

“எதிர்க்கட்சிகளிடம் நம்பகத்தன்மை இல்லை, அவை பொதுவான சின்னத்தைக் கொண்டிருக்கவில்லை, ஹுடுட் சட்டம் மீதான அவற்றின் நிலை உட்பட பல விஷயங்களில் அவற்றின் கொள்கைகள் மாறுபட்டுள்ளன.”

-பெர்னாமா

TAGS: