‘மாற்றத்துக்குப் பதில் நஜிப் நமக்கு வெட்கத்தையே கொண்டு வந்துள்ளார்’

“கடினமான வாழ்க்கை என்ன என்பதையும்  தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க  சட்டியை சுரண்டவும் சேமிக்கவும் தெரிந்த தலைவர்களே நமக்குத் தேவை.”

நஜிப்: நான் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளேன். பக்காத்தான் தேவையில்லை

எம்எப்எம்: மாற்றம் ? என்ன மாற்றம் ? வாழ்க்கைச் செலவுகள் கூடுவதால் என் சேமிப்பு குறைந்து கொண்டே போகிறது. சேவகர்களை பணக்காரர்களாக வைத்திருப்பதற்காக சம்பளங்கள் தேக்கமடைந்துள்ளன. மலேசியாவில் எங்கு சென்றாலும் அந்நியர்களே அதிகம் காணப்படுகின்றனர். பஸ் பயணம் கூட இப்போது பாதுகாப்பாக இருப்பதில்லை.

பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு என்ன தெரியும் ? முன்னாள் பிரதமர் ஒருவருடைய புதல்வர் என்பதால் அவர் நியாயமான வாழ்க்கைக்கு வருமானத்தை தேட வேண்டிய தேவை அவருக்கு இருந்தது இல்லை.

நமக்கு மாற்றம் தேவை. கடினமான வாழ்க்கை என்ன என்பதையும்  தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க சட்டியை சுரண்டவும் சேமிக்கவும் தெரிந்த தலைவர்களே நமக்குத் தேவை.

கீ துவான் சாய்: நீங்கள் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளீர்கள் ? தயவு செய்து சொல்லுங்கள் நஜிப் அவர்களே ! நீங்கள் 5.4 விழுக்காடு வளர்ச்சி பற்றியும் உருமாற்றம் என அழைக்கப்படும் உங்கள் திட்டங்கள் பற்றியும் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.

எந்த ஓர் அரசாங்கமும் வளர்ச்சியைக் கொண்டு வர வேண்டும். ஆகவே நீங்கள் தம்பட்டம் அடித்துக் கொள்வதற்கு அதில் ஒன்றுமில்லை. அது மாற்றமல்ல. உங்கள் உருமாற்றத் திட்டங்களினால் மக்கள் நன்மை அடைந்துள்ளார்களா ?

வாழ்க்கைச் செலவுகள் தொடர்ந்து ஏறிக் கொண்டே போவதால் நாம் இன்னும் சிரமப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். உங்கள் 5.4 விழுக்காடு வளர்ச்சியும் எங்களுக்கு உதவவில்லை. உங்கள் சேவகர்களே பயனடைகின்றனர்.

மலேசியா மேலும் முன்னேற்றம் அடையவும் தாராளப் போக்கைப் பின்பற்றவும் நீங்கள் என்ன மாற்றம் செய்துள்ளீர்கள் ? பிஏஏ என்ற அமைதியாக ஒன்று கூடும் சட்டம், ஆதாரச் சட்டத்தில் 114ஏ திருத்தம், ஆகிய கட்டுப்பாடுகள் மிகுந்த சட்டங்களை எங்களுக்கு கொடுத்தீர்கள். இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் வேறு ஒரு பெயரில் இன்னும் உள்ளது.

சொந்தமாகவே மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என நீங்கள் சொல்கின்றீர்கள். உண்மையில் அது வேடிக்கைதான். எதிர்த்தரப்பு நெருக்குதல் இல்லாவிட்டால் உங்களுக்கும் பிஎன் -னுக்கும் மேலும் அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கான மாற்றத்தையே நீங்கள் கொண்டு வந்திருப்பீர்கள்.

ஒய்எப்: இல்லை. நீங்கள் எங்களுக்கு நிறைய ஊழலையும் வெட்கத்தையுமே தந்துள்ளீர்கள். மலேசிய வரலாற்றில் முதன் முறையாக தேசிய நாள் கொண்டாட்டங்கள் உள் அரங்கில் மலிவான அர்த்தமில்லாத சின்னத்துடன் நடத்தப்பட்டுள்ளது. தேவாலய பாடல் ஒன்று திருடப்பட்டுள்ளது. கட்சிச்  சார்புடைய கருப்பொருள் பயன்படுத்தப்பட்டது. அதுதான் நீங்கள் சொல்லும் மாற்றமா ? மக்கள் அதனை வெட்கக்கேடு என்கின்றனர்.

எதிர்வரும் மலேசிய எழுச்சி பற்றி என்ன சொல்வது ? நீங்கள் அதனைத் தொடர்ந்து அலட்சியம் செய்தால் அது உங்களுக்கே பாதகமாக முடியும். சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் முதல் ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகள் வரை அம்னோ தனது இறுதி நாட்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது.

அடையாளம் இல்லாதவன்#03078561: நஜிப் நீங்கள் சொல்வது உண்மையா ? நீங்களும் உங்கள் கட்சியும் எங்களை தொடர்ந்து மிரட்டுவதற்கு எங்களை இன்னும் முட்டாள்கள் என எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா ?

நாங்கள் விரும்புவது மாற்றம். அந்த மாற்றத்தை நாங்கள் அடைவோம்.

பூமிஅஸ்லி: பிஎன் -னில் யாரும் கணக்கில் புலிகள் அல்ல. அது நமக்கு நன்கு தெரியும். அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம்- தங்கள் வங்கிக் கணக்குகள் கூடுவதும் பொது நிதிகள் கழிவதும் மட்டுமே.

அடுத்து அவர்கள் வகுத்தல் கணக்கில் வல்லவர்கள். அதனை அவர்கள் பயன்படுத்தி மலேசிய இனங்களைப் பிரித்து வைத்துள்ளனர்.  தங்கள் அன்றாட வாழ்வில் பொய்களை அடுக்குவதின் மூலம் கூட்டல் கணக்கையும் அவர்கள் அறிவர்.

ஒரே கேலிக் கூத்து: “இலவசக் கல்வியை வழங்க PTPTN உதவித் திட்டத்தை ரத்துச் செய்வது, டோல் கட்டணங்களை அகற்றுவது, குடும்ப வருமானத்தை 4,000 ரிங்கிட்டாக உயர்த்துவது, வாகன விலைகளைக் குறைப்பது, சபா, சரவாக்கிற்கான எண்ணெய் உரிமப் பணத்தை 20 விழுக்காட்டுக்கு உயர்த்துவது போன்ற அவற்றின் வாக்குறுதிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்,” என்கிறார் நஜிப்.

ஆனால் நீங்களும் உங்கள் மனைவியும் உங்கள் திருடர் கும்பலும் ஏற்படுத்திய கசிவுகளை நீங்கள் குறைத்தால் நிதிப் பற்றாக்குறையை எவ்வளவோ சமாளிக்க முடியும். நாட்டை கொள்ளையடிப்பதை நிறுத்துங்கள். அது உங்கள் பணம் அல்ல. மக்கள் பணம்.

பென் காசி: நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதில் வல்லவர் என்றால் வரவு செலவுப் பற்றாக்குறையை நியாயமான அளவுக்குக் குறையுங்கள்.

வரவு செலவுப் பற்றாக்குறை அதிகரிப்பதைப் பற்றி கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் வாக்காளர்களுக்கு ரொக்கத்தை அள்ளி வழங்குவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். அல்லது அடுத்த அரசாங்கத்தை உங்கள் கடனை திருப்பிச் செலுத்துமாறு செய்து அதனைத் தண்டிப்பதுதான் உங்கள் நோக்கமா ?

பிஎன் வெற்றி பெற்றாலும் நீங்கள் 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வெளியே போகப் போகின்றீர்கள். 2008ல் அப்துல்லா அகமட் படாவையைக் காட்டிலும் நீங்கள் சிறப்பாக வெற்றி பெறா விட்டால் உங்களுக்கு பதில் பொறுப்பை ஏற்க முஹைடின் காத்துக் கொண்டிருக்கிறார்.

நீலகிரி: ஸ்கார்ப்பின் நீர்மூழ்கி தரகுப் பணத்தில் சம்பந்தப்பட்டவர்களையும் அல்தான்துயா ஷாரிபு கொலையில் சம்பந்தப்பட்டவர்களையும் போலீஸ் கொண்டு வரும் போதுதான் மாற்றம் நிகழும். அந்த மாற்றம் எப்போது வரும் ?

 

TAGS: