டாக்டர் மகாதீர்: சோரோஸ் பிரதமராக ஒரு கைப்பாவையை அமர்த்த விரும்புகிறார்

அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜார்ஜ் சோரோஸ் தமக்கு ஏற்றால் போல இயங்கக் கூடிய ஒருவரை பிரதமராக நியமிக்கும் முயற்சியின் கீழ் உள்ளூர் அரசு சாரா அமைப்பு ஒன்றுக்கு நிதி உதவி செய்து வருவதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறிக் கொண்டுள்ளார்.

“அவர் நமது அரசியலைக் கட்டுப்படுத்த விரும்புகிறார். தமது தேர்வு பிரதமராக பெயர் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் கருதுகிறார்.”

“ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மேம்படுத்தும் நோக்கம் எனக் கூறப்படுவதற்கு அவர் நன்கொடைகளை வழங்கும் போது நாம் இங்கு சுதந்திரத்தை பெற்றிருக்கவில்லை என்ற தோற்றம் ஏற்படுகின்றது,” என அவர் இன்று காலை கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.

இறுதியில் இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதே சோரோஸின் நோக்கம் என மகாதீர் சொன்னார்.

“மலேசியாவில் ஆட்சி மாற்றத்தை அவர் விரும்புகிறார். தாம் கட்டுப்படுத்தக் கூடிய பிரதமர் ஒருவரை பெறுவதே அவரது எண்ணமாகும்,” என்றார் அவர்.

அரசு சாரா அமைப்புக்களும் மலேசியாகினி போன்ற செய்தி இணையத் தளங்களும் அந்தச் ‘சதியில்’ ஒரு பகுதியா என வினவப்பட்ட போது “Semua lah (எல்லாம்) என மகாதீர் பதில் சொன்னார்.

விருது ஒன்றைப் பெறுவதற்காக அமெரிக்காவுக்கு செல்வதற்கு விமானத்தை பிடிப்பதற்கு அவசரமாக புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் கோலாலம்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் நிருபர்களிடம் பேசினார்.

உள்நாட்டு அரசு சாரா அமைப்புக்களுக்கும் மலேசியாகினிக்கும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட NED என்ற தேசிய ஜனநாயக அறக்கட்டளையும் இதர அனைத்துலக அமைப்புக்களும் நிதி உதவி செய்வதாக உத்துசான் மலேசியா, பெரித்தா ஹரியான், நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் ஆகிய முக்கிய நாளேடுகள் முதல் பக்கத்தில் பெரிய செய்தியாக வெளியிட்டிருந்தன.

பகைவர்கள் நண்பர்களாகினர்

சோரோஸின் திறந்த சமூக அற நிறுவனம் உட்பட பல அனைத்துலக அமைப்புக்கள் சிவில் சமூக இயக்கங்களுக்கு நிதி வழங்குவதின் நோக்கம் உலகம் முழுவதும் உள்ள சட்டப்பூர்வ அரசாங்கங்களை வீழ்த்தி விட்டு தங்கள் கைப்பாவை அரசுகளை அமர்த்துவதாகும் என டிவி3ன் பிரதானா செய்திகளிலும் ஒர் அறிக்கை ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

என்றாலும் இவ்வட்டாரத்தில் உள்ள மற்ற நாடுகள் தங்கள் சொந்த இணைய ஊடகங்களை மேம்படுத்திக் கொள்ள உதவிய Seacem என்ற தென் கிழக்காசிய மின்னியல் ஊடக மய்யத்துக்கு அந்த நிதி அளிக்கப்பட்டதாக மலேசியாகினி தலைமை நிர்வாக அதிகாரி பிரமேஷ் சந்திரன் கூறியிருக்கிறார்.

1977ம் ஆண்டு ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடியின் போது ரிங்கிட் மதிப்புக் குறைக்கப்படுவதற்குக் காரணமாக இருந்ததற்காக சோரோஸை முதலாவது பொது எதிரி என மகாதீர் குற்றம் சாட்டினார்.

அதற்கு பின்னர் அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் தொடர்ந்தது. மகாதீர் சோரோஸை ‘முட்டாள்’ என்றும் சோரோஸ் மகாதீரை “அவரது நாட்டுக்கு ஆபத்து” எனவும் கூறிக் கொண்டனர்.

ஆனால் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மகாதீர் தமது நிலையை மாற்றிக் கொண்டார். சோரோஸுடன் நண்பர் ஆனார். முதலில் கடிதங்களை அவர்கள் பரிமாறிக் கொண்டனர். பின்னர் கோலாலம்பூரில் அவரை மகாதீர் சந்தித்தார்.