முஸ்லிம்களை புண்படுத்தும் காணொளி: ஹிண்ட்ராப் வன்மையான கண்டனம்

உலக முஸ்லிம்களை அவமானத்திற்கு உள்ளாக்கிய “Innocence of  Muslims” என்ற திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி தயாரிப்பாளர்களின் நடத்தையை ஹிண்ட்ராப்  அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. ஒரு சமூகத்தின் அடையாளத்தை பிரதிபலிப்பதில் சமய நம்பிக்கைகள் முக்கிய பங்காற்றுகின்றன. அதிலும் தாங்கள் ஒடுக்கப்படுவதாக கருதும் சமூகத்தினரிடையே சமய நம்பிக்கைகள் ஆழ்ந்த உணர்ச்சிமயமான பற்றுதலை ஏற்படுத்துகின்றன. ஒடுக்கப்பட்டவர்களாக கருதும் முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களின் மத்தியில் உணர்ச்சிமயமான பிரச்சனைகளை தூண்டிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களை அவமதிக்கும் வகையில்  இந்த காணொளி காட்சிகளை தயாரித்துள்ளனர் என்கிறார் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி தேசிய  ஆலோசகர் நா.கணேசன்.

“அவமானப்படுத்த வேண்டும் என்ற தெளிவான நோக்கத்துடன் எதனையோ சாதித்திட வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக  உருவாக்கி, சில ஆண்டுகளுக்கு முன்னர் நபிகள்  நாயகத்தை சிறுமைப்படுத்தும் வகையில் டென்மார்க்கில் அச்சேற்றப்பட்ட கேலிச் சித்திரங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை, இம்முறையும் ஏற்படுத்த வேண்டும் என்ற தீர்க்கமான எதிர்பார்ப்பை இப்படத்தின் தயாரிப்பாளர்கள் கொண்டுள்ளனர்” என்கிறார் கணேசன்.

மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் தரப்பினர் இது போன்ற சம்பவங்களை ஒரு யுக்தியாக பயன்படுத்துகின்றனர் என்பதை நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்ப்போர் உணர வேண்டும். ஒரு தேசத்தின் எல்லைக்குள்ளும், எல்லைகளுக்கு அப்பாலும், உலகெங்கும்  தங்களின் சுயலாபத்திற்காக செயல்படுவோர் இத்தகைய கொடூர செயலை கட்டவிழ்த்து விடும் பல்வேறு இது போன்ற சதிநாச வேலைகளை செயல் படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றவர், “வேண்டுமென்றே  முஸ்லிம் சமூகத்தினரின் ஆழ்ந்த உணர்சிகளை தூண்டி,  அவமானத்திற்கு உள்ளாக்கி, அவர்களை ஆத்திரம் கொள்ளச் செய்து, கலவரங்களை ஏற்படுத்தி , அமைதியை கெடுக்கவே இந்த காணொளி தயரிப்பாளர்கள் செயல்பட்டிருக்கிறார்கள்” என்கிறார்.

இந்த உணர்வுகளின் அடிப்படையில், உலக முஸ்லிம்களை அவமானத்திற்கு உள்ளாக்கிய அந்த காணொளி தயாரிப்பாளர்களின் நடத்தையை ஹிண்ட்ராப்  அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது என்றும், “இது போன்ற தவறுகள் நிகழாமலிருக்க  மலேசிய அரசும் வெகு கவனமுடன் செயல்பட வேண்டும். பல்லின மக்கள், பல்வேறு  சமய  நம்பிக்கைகளை போற்றுவோர் வாழும்  நாடு நம் மலேசிய திருநாடு. இந்த சம்பவத்திலிருந்து ஒடுக்கபடாமை, சமத்துவம், தன்மானம் ஆகிய அடிப்படை உரிமைகளின் முக்கியத்துவம் குறித்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது மிக அவசியம்” என்கிறார் கணேசன்.

“ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீதோ, ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் மீதோ அடக்குமுறைகளை கையாளும் சந்தர்ப்பத்தில் இந்த காணொளி ஏற்படுத்துவது போன்ற தாக்கங்கள்  தொடரவே செய்யும். எனவே மக்களாகிய நாம் இது போன்ற தாக்கங்களின் பிறப்பிடம் ஒடுக்குமுறைதான் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். என்று ஒடுக்குமுறை முடிவுக்கு வருகிறதோ அன்றுதான் வேற்றுமைகள் அகன்று, வஞ்சிக்கப்பட்டவர்கள் நிம்மதி பெருமூச்சு விட முடியும் . அன்றுதான் இந்நாட்டு குடிமக்கள் அனைவரும் சமுத்துவம் பெற்ற தன்மானமுள்ளவர்களாக வாழும் வாய்ப்பை பெறுவார்கள்” என்கிறார் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி தேசிய ஆலோசகர்.

“எப்போதும் எத்தகைய அடக்குமுறைகளையும் மக்கள் எதிர்க்க வேண்டும். மலேசிய மக்களுக்கு இந்த விழிப்புணர்வை தூண்டும்  காரியங்களை ஹிண்ட்ராப் தொடரும் என்பதோடு “முஸ்லிம்களை புண்படுத்தும் இந்த காணொளி ஆகட்டும் அல்லது இது போன்ற மற்ற காரியங்களால் பலவீனமானவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அதிகாரத்தின் மூலம் இலாபமடைய முயலும் எத்தகையச் செயலையும் ஹிண்ட்ராப் அமைப்பு வெகுகடுமையாகக் கண்டிக்கும்” என எச்சரிக்கிறார் ஹிண்ட்ராப் ஆலோசகர்.

TAGS: