55 ஆண்டுகள் போதவில்லை; பிஎன் இன்னும் கூடுதல் காலம் கேட்கிறது

நஜிப் அவர்களே, இன்னொரு தவணைக் காலமா ? பிஎன் செய்ய வேண்டியதைச் செய்வதற்கு மலேசியர்கள் 12 தவணைகளைக் கொடுத்து விட்டனர்.”

நஜிப்: எங்களுக்கு இன்னொரு தவணையைக் கொடுங்கள், நாங்கள் நிறையச் செய்ய முடியும்

ஸ்டார்ர்: பிரதமர் நஜிப் ரசாக் அவர்களே, ஒருவர் திறமையைக் காட்டுவதற்கு 55 ஆண்டு கால ஆட்சி போதுமானது. அம்னோ/பிஎன் கடந்த 55 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை இன்னொரு தவணைக் காலத்தில் எப்படி அடையப் போகிறது ?

இன்னொரு தவணையைக் கேட்பது விரக்தியின் வெளிப்பாடு மட்டுமல்ல. திறமையாக இயங்கவில்லை என்பதை ஒப்புக் கொள்வதற்கு சமமாகும். அம்னோ/பிஎன் நல்ல முறையில் செயல்பட்டிருந்தால் இன்னொரு தவணையை நஜிப் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. கேட்காமலேயே மக்களே மன மகிழ்ச்சியுடன் இன்னொரு தவணையை அவருக்கு கொடுத்திருப்பார்கள்.

உண்மையாகச் சொன்னால் அம்னோ/பிஎன் அரசாங்கத்தின் கொள்கைகளினால் நாம் மெர்தேக்காவுக்குப் பின்னர் வாய்ப்புக்கள் அடிப்படையில் ஒரு தலைமுறையை இழந்து விட்டோம். அடுத்த தலைமுறைக்கும் அது நிகழ்வதைக் காண நாங்கள் விரும்பவில்லை.

முட்டாள்கள் மட்டுமே ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள்.

நம்பாதவன்: மாறுபட்ட விளைவுகளை எதிர்பார்த்து ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்வது மடத்தனம். மலேசியர்கள் புத்தியுள்ளவர்கள் என நான் நம்புகிறேன்.

குவிக்னோபாண்ட்: நஜிப் சொல்வதில் உள்ள அர்த்தத்தை தருகிறேன்: நாங்கள் நிரந்தரமாக அதிகாரத்தில் நிலைத்திருக்கவும் எங்கள் குடும்பங்களையும் அடுத்து வரும் எங்கள் தலைமுறையினரையும் வளப்படுத்திக் கொள்வதற்கு மலேசியர்கள் கஷ்டப்பட்டு தேடிய பணத்தை உறிஞ்சுவதற்கு எங்களுக்கு இன்னொரு தவணைக் காலத்தைக் கொடுங்கள்.

சின்ன அரக்கன்: இன்னொரு தவணையா ? அரசாங்க அமைப்புக்கள் (போலீஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் போன்றவை) பிஎன் அரசியல்வாதிகளுக்கு ஏற்ப துதி பாடிக் கொண்டிருக்கின்றன. மேலும் பாதித் தவணை கொடுத்தால் கூடப் போதும், இந்த நாட்டில் இன்னும் எஞ்சியுள்ள செல்வத்தையும் அம்னோ/பிஎன் சுரண்டி விடும்.

சேரிப்பையன்: நஜிப், நீங்கள் பேசுவது அபத்தமாக உள்ளது. அம்னோ ஆட்சி புரிந்துள்ள 55 ஆண்டுகளிலும் ஊழல் மலிந்துள்ளது. இன்னும் நிறையச் செய்ய வேண்டும் என்பதற்காக மேலும் ஐந்து ஆண்டுகளைக் கோருவதற்கு உங்களுக்கு எப்படித் துணிச்சல் வந்தது ?

அன்ஸ்பின்: உங்கள் துணைப் பிரதமர் முஹைடின் யாசின், அம்னோ பழமைவாதிகள் உங்களுக்கு இன்னொரு தவணைக் காலத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கின்றார்களா என அவர்களிடம் கேளுங்கள். அவர்கள் ஆம் எனப் பதில் சொன்னால் நீங்கள் அவ்வாறு கேட்கலாம். முடியாது என்றால் வாயை மூடிக் கொள்ளுங்கள்.

மூன் டைம்: இந்த நாட்டை மேம்படுத்துவதற்கு நாங்கள் உங்களுக்கு 55 ஆண்டுகளை கொடுத்து விட்டோம். துரதிர்ஷ்டவசமாக அதன் விளைவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

நிதி முறைகேடுகள், செக்ஸ் ஊழல்கள், நாட்டை விட்டு மூலதனம் பெருமளவில் வெளியேறியுள்ளது, அந்நியர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளதால் நன்மையைக் காட்டிலும் தீமையே அதிகம் ஏற்பட்டுள்ளது என பட்டியல் நீளுகிறது.

முழுமையான மாற்றத்தைச் செய்வதற்குக் காலம் கனிந்து விட்டது. இந்த நாட்டைப் புதிய கட்சியும் தலைவரும் வழி நடத்த வேண்டும். நீங்கள் ஒரே மாதிரியான மேம்பாட்டுப் பாடலையே பாடிக் கொண்டிருக்கின்றீர்கள். உண்மையாகச் சொன்னால் எங்களுக்கு வெறுப்பு வந்து விட்டது.

அடையாளம் இல்லாதவன்#98268170: 55 ஆண்டுகள் ஒய்வு பெறும் வயதாகும். புதிய அரசாங்கம் நன்மையைக் கொண்டு வருமா என ஒரிரு தவணைக் காலத்துக்கு மக்கள் முயற்சி செய்யட்டுமே ?

ஜிமினி கிரிக்கெட்: நஜிப் மிரண்டு போயிருக்க வேண்டும் அல்லது முழு முட்டாளாக இருக்க வேண்டும். ஒரு பக்கம் அவர் பிஎன் இன்னும் நிறையச் செய்வதற்கு இன்னொரு தவணைக் காலத்தை வழங்குமாறு மக்களைக் கேட்டுக் கொள்கிறார். இன்னொரு பக்கம் முதலமைச்சர் என்ற முறையில் தாம் பெற்ற சம்பளத்தில் பில்லியன் கணக்கான ரிங்கிட் சொத்துக்களைச் சேர்த்து விட்ட தாயிப் விஷயத்தை பொருட்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறார்.

ஆகவே அப்பட்டமான ஊழலையும் பகற்கொள்ளையையும் பார்க்காமல் கண்ணை மூடிக் கொள்ளுமாறு மக்களை கேட்டுக் கொள்கிறார்.

அடையாளம் இல்லாதவன்41809171: அன்புள்ள ஆசிரியர் அவர்களே, அந்தச் செய்தியின் தலைப்பு முழுமையாக இல்லை என நான் நினைக்கிறேன். அது இப்படி இருக்க வேண்டும்: “நஜிப்: எங்களுக்கு இன்னொரு தவணை கொடுங்கள். நாங்கள் நிறைய தீங்கு செய்ய முடியும்.”

முபாராக்: வருந்துகிறேன், நஜிப். பிஎன் ஆட்டம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.

 

TAGS: