“மகாதீரும் நஜிப்பும் வேலைக்கு அமர்த்திய சாலோமான் ஸ்மித், சாட்ஷி சாட்ஷி, அப்கோ போன்ற பல யூத நிறுவனங்கள் பற்றி அனுவார் ஷாரி கேள்விப்பட்டுள்ளாரா ?”
அன்வாரின் முன்னாள் உதவியாளர்: நமது நீர்மூழ்கிகள் குறித்து யூதர்களுக்குப் பொறாமை
விஜய்47: அம்னோ ஆதரவாளர்கள் எதிர்க்கட்சிகளையும் தங்களது 55 ஆண்டு கால அதிகார அத்துமீறல்களை எதிர்க்கின்றவர்களையும் தாக்கும் போது விவேகமாக பேசா விட்டாலும் சற்று சொந்த மூளையோடு பேச வேண்டும்.
அந்த ஆதரவாளர்களுக்கு விரக்தி அடைந்துள்ள ஒருவர் தலைமை ஏற்றுள்ளார். அவரை அரசியல் அறிஞர் என ஏற்றுக் கொள்ளவே முடியாது. இந்த மாதத்தில் அடிக்கடி பேசப்படப் போகும் விஷயம் யூதர்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
மலேசியா எதிர்நோக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் இஸ்ரேலிய சதிகளே காரணம் என்றும் அம்னோ கடைப்பிடித்த பாரபட்சமான நியாயமற்ற கொள்கைகளும் நீடிக்கும் ஊழலும் திருட்டும் காரணமல்ல என்றும் திடீரென நாட்டில் உள்ள எல்லாக் குரங்குகளும் பேசத் தொடங்கி விட்டன.
எப்படி எதிர்க்கட்சிகள் மீது பழி போட வேண்டும், பின்பற்ற வேண்டிய கருப் பொருட்கள் யாவை என்பதை ஏதோ ஒரு மத்திய அமைப்பு முடிவு செய்து கொண்டிருக்கிறது. மலாய்க்காரர் அல்லாதாரையும் கிறிஸ்துவர்களையும் குறை கூறுவது இனிமேலும் பயன் தராது என்பதை அந்த அமைப்பு கண்டு பிடித்திருக்க வேண்டும். அதனால் மேலும் கவர்ச்சியான, அனைத்துலக அளவிலான ஒரு விஷயம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
யூதர்கள், இஸ்ரேலியர்கள், யூதவாதிகள் ஆகியோர் தாக்கப்பட்டுவதற்கு மிகவும் சௌகரியமான மனிதர்கள். அம்னோ வீரர்கள் ஒவ்வொரு மரத்துக்குப் பின்னாலும் பேய்களைக் காண்கின்றனர். ஆனால் அறையில் இருக்கும் யானை தெரியவில்லை.
NMNT: இவ்வாண்டுக்கான சிறந்த மேற்கோளுக்கு யாராவது பரிசுக் கோப்பையைத் தட்டிச் செல்ல விரும்பினால் இதோ அதனைத் தருகிறேன்: “பிரஞ்சுத் தயாரிப்பான நீர்மூழ்கிகளை மலேசியாவுக்கு மறுப்பதற்கு யூதர்கள் சுவாராமை பயன்படுத்தி வருகின்றனர்.”
முஷிரோ: மகாதீரும் நஜிப்பும் வேலைக்கு அமர்த்திய சாலோமான் ஸ்மித், சாட்ஷி சாட்ஷி, அப்கோ போன்ற பல யூத நிறுவனங்கள் பற்றி அனுவார் ஷாரி கேள்விப்பட்டுள்ளாரா ?
நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போலீஸ் தொலைத் தொடர்புத் திட்டக் குத்தகையை முன்னாள் ஐஜிபி மூசா ஹசானின் புதல்வர் யூத நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியது அவருக்குத் தெரியாதா ?
மலேசிய உள்விவகாரங்களில் நாணய ஊக வணிகரான ஜார்ஜ் சோரோஸ் தலையிடுகிறார் என்பதைக் காட்டுவதற்கு எங்களுக்கு இன்னும் கூடுதலான ஆதாரத்தைக் கொடுங்கள். 500,000 ரிங்கிட் சுவாராம் அலுவலகத்தை நடத்துவதற்குக் கூடப் போதாது.
அபாசிர்: அம்னோ எப்போது தேவைப்படுகிறதோ அப்போது அதன் தலைவர்கள் யூதர்கள் மீதும் அமெரிக்கர்கள், மேற்கத்தியப் பண்பாடு மீதும் பழி போடுவர். அடுத்து அவர்கள் மிகவும் அமைதியாக பல்லூடகப் பெரு வழித் திட்டத்துக்கான அனைத்துலக ஆலோசகர் குழு போன்ற ஆடம்பரமான அபத்தங்களுக்கு அவர்களை அரசாங்க விருந்தினர்களாக அழைப்பர். அவர்களை நிதி, பொருளாதார, பொது உறவு, விற்பனை ஆலோசகர்களாகவும் நியமிப்பர். அதற்காக நியூயார்க்கில் பெரிய ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்துவர்.
அந்த வெறுக்கத்தக்க இரட்டை வேடத்துக்கு உச்சக் கட்டமாக அவர்கள் அமெரிக்க அதிபரைச் சந்திப்பதற்கு முழுக் கட்டணம் செலுத்தப்பட்ட சந்திப்புக்கும் ஏற்பாடு செய்வர். அவர்கள் வெட்கமே இல்லாத நெறிமுறையில்லாத தலைவர்கள். அதிகாரத்தில் இருப்பதற்கு என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
ஜு குவான்: அரசாங்கம் தூய்மையானதாக இருந்தால் ஏன் ஸ்கார்ப்பின் நீர்மூழ்கி ஊழல் விசாரணை பற்றிக் கவலைப்பட வேண்டும் ? உங்கள் மீது யாருக்காவது பொறாமை இருந்தால் போகட்டுமே ! அரசாங்கம் வெளிப்படையாக இருப்பதாக தற்காப்பு அமைச்சர் கூறவில்லையா ? ஆகவே ஏன் இந்த கூச்சல் ?
விஜார்ஜ்மை: அனுவார் ஷாரி, மக்களை உங்களைப் போன்று முட்டாள்கள் என எண்ணினால் நீங்கள் தவறு செய்கின்றீர்கள். ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகள் உட்பட எந்த வகையான நீர்மூழ்கிகளை மலேசியா வாங்குவதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. அந்தக் கொள்முதலைச் சூழ்ந்துள்ள ஊழலும் கொலையுமே எங்களுக்கு உள்ள பிரசனை.
தயவு செய்து தேசியப் பாதுகாப்பை தவிர்க்கக் கூடிய ஊழலுடன் பிணைக்க வேண்டாம். தற்காப்புத் தளவாடங்கள் கொள்முதல்கள் குறித்து எதிர்க்கட்சிகள் மட்டும் பிரச்னையை எழுப்பவில்லை. அண்மையில் ஜோகூர் சுல்தான் கூட வாகனங்கள் வாங்கப்பட்ட விஷயம் மீது கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்விபெண்டர்: எனவே யூதப் பூச்சாண்டி இன்றைய கருப் பொருளாகும். சீனக் கம்யூனிஸ்ட்கள் இனிமேல் இல்லை.