பிகேஆர்: கணக்காய்வு அறிக்கை தாமதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

கடந்த ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின்னரே வெளியிடப்படும் என மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து பிகேஆர் கேள்வி எழுப்பியுள்ளது.

அரசாங்க நிதிகள் சம்பந்தமான அத்துமீறல்களையும் பலவீனங்களையும் அரசாங்கம் மறைக்க முயலுகிறதோ என்னும் தோற்றத்தை அந்தத் தாமதம் தந்துள்ளது,” என நாடாளுமன்ற வளாகத்தில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி நிருபர்களிடம் கூறினார்.

விநியோக மசோதாவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்து விவாதிப்பதற்கு அந்த அறிக்கை அவசியம் என அவர் சொன்னார்.

“அந்த அறிக்கை முக்கியமானது. நாங்கள் அடிப்படை இல்லாமல் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த விரும்பவில்லை. பொது நிதிகள் நடைமுறைகளுக்கு ஏற்ப செலவு செய்யப்பட்டுள்ளதா அல்லது அத்துமீறல்கள் நிகழ்ந்துள்ளதா என்பதை மக்களுக்கு காட்டுவதற்கு எங்களுக்கு கணக்காய்வு அறிக்கை தேவை.”

அத்துடன் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சாத்தியமான குளறுபடிகள் பற்றிய விவரங்களுடன் வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்ட ஒரு வாரத்திற்கு பின்னரே வெளியாகும் என்பதால் ‘அத்துமீறல்களிலிருந்து கவனத்தை திசை திருப்ப’ அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியாகவும் அது இருக்கலாம் என்றார் அஸ்மின்.

அப்போது எம்பி-க்கள் பிரச்னைகளை கண்டு பிடித்து விவாதத்திற்கு கொண்டு வருவதற்கு கால தாமதமாகி விடும் என அவர் கவலை அடைந்துள்ளார்.

“ஏன் இது நடக்கிறது என நான் நஸ்ரியைக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். உருமாற்றம் பற்றிப் பேசுகின்ற அரசாங்கம் வெளிப்படையாக இயங்க வேண்டும்.”

2013ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டு  ஒரு வாரத்துக்குப் பின்னரே அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளரின் கணக்கறிக்கை வெளியிடப்படும் எனப் பிரதமர் துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் அறிவித்துள்ளது மீது அஸ்மின் கருத்துரைத்தார்.

விநியோக மசோதா மீதான விவாதத்திலிருந்து கவனம் திரும்பிவிடக்கூடாது என்பதற்காக அவ்வாறு செய்யப்படுவதாக அவர் சொன்னார்.  .

இதனிடையே அந்த விவகாரம் பற்றிக் கருத்துரைத்த பக்காத்தான் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், எதிர்த்தரப்புக் கூட்டணி புத்ராஜெயாவைக் கைப்பற்றினால் அது போன்ற நிலை ஏற்படாது என்றார்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னரே கணக்காய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.”

அது எம்பி-க்கள் வரவு செலவுத் திட்டத்தை கவனமாக விவாதிக்கவும் ஒர் அமைச்சுக்கு நிதிகள் ஒதுக்கப்படுவதற்கு முன்னர் ஏற்கனவே அத்துமீறல்கள் ஏதும் நிகழ்ந்துள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும் உதவும் என்றார் அன்வார்.

 

TAGS: