இஸ்லாத்தை எதிர்க்கும் ‘Innocence of Muslims’ திரைப்படமும் பிரஞ்சு சஞ்சிகையில் வெளியான முகமது நபியையும் சிறுமைப்படுத்தும் Charlie Hebdo-வின் கேலிச் சித்திரங்களும் முஸ்லிம்களை அவமானப்படுத்துவதாகும். அதனால் அவற்றை உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் கண்டிக்க வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்தத் திரைப்படமும் கேலிச் சித்திரங்களும் முஸ்லிம்களுடைய உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ளன என்றார் அவர்.
“அந்த கேலிச் சித்திரங்களை வெளியிட்டதின் மூலம் Charlie Hebdo பிரஞ்சுச் சட்டத்தை மீறாமல் இருக்கலாம். ஆனால் அவருடைய நெறிமுறைகள் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பலாம்,” என நஜிப் தமது வலைப்பதிவில் எழுதியுள்ளார்.
ஏற்கனவே பதற்றம் அதிகமாக இருக்கும் வேளையில் அந்தத் திரைப்படம் அதனை மேலும் தூண்டி விட்டுள்ளது என நஜிப் சொன்னார்.
முஸ்லிம்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் அதிருப்தியைக் காட்டுவதற்கு வன்முறையை நாடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்கு இப்போது நாம் முன்னைக் காட்டிலும் மிகுந்த மரியாதை, சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு ஆகியவற்றுக்காக இணைந்து பாடுபட வேண்டும்.”
“அதனால் மலேசியாவில் நாங்கள் உலகளாவிய மிதவாதிகள் இயக்கத்தை உருவாக்குவதில் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அனைத்து சமய மக்களையும் அழைத்துள்ளோம்,” என்றும் அவர் சொன்னார்.
அமெரிக்கா கலிப்போர்னியாவைச் சேர்ந்த Sam Bacile என்பவர் இயக்கியுள்ள ‘Innocence of Muslims’ திரைப்படம் உலக அளவில் கண்டிக்கப்பட்டுள்ளது.
பெர்னாமா