அம்பிகா: சிவில் அமைப்புகளை ஒடுக்க நடவடிக்கையா?

சிவில் அமைப்புகள் அரசாங்கத்தை நிலைகுலைய வைப்பதற்கு அந்நிய நிதியுதவி பெற்று வருவதாக ஊடகங்களில் வெளிவரும் செய்திகள், அந்த அமைப்புகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான முன்னறிவிப்பாக இருக்கலாம் என்கிறார் பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன்.

“எதிர்மறையான செய்திகள் (நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் செப்டம்பர் 21 முகப்புச் செய்தி போன்றவை) சிவில் அமைப்புகள்மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள அடித்தளமிடுகின்றன.சுவராமுக்கு எதிராக அரசு கொடுத்துவரும் தொல்லைகள் அதற்குச் சான்று பகர்வதுடன் மேலும் கொடூரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் சாத்தியம் உண்டு என்பதையும் காண்பிக்கின்றன”.

அம்பிகா இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் இதைத் தெரிவித்தார்.

அக்கூட்டத்தில் அவருடன், செய்திகளில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த சுவாராம், சுயேச்சை இதழியல் மையம்(சிஐஜே), சுதந்திரத்துக்குப் போராடும் வழக்குரைஞர்கள் அமைப்பு, மெர்டேகா மையம், தென்கிழக்காசிய மின்-ஊடக மையம் (சீகேம்) ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

சீகேம் திட்ட நிர்வாகி சியான் அங், “இது முகவுரையோ என்று கவலையுறுகிறோம்”, என்றார்.

பின்னர் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அவற்றை நியாயப்படுத்தவும் வேலைகள் நடப்பதுபோல் தெரிவதாகக் குறிப்பிட்ட அவர் சிங்கப்பூரில் சில என்ஜிஓ-களுக்கு வெளிநாட்டு நிதி உதவி தடுக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

TAGS: