அரசாங்கத்தின் நிலைத்தன்மையைச் சீர்குலைப்பதற்கு சதித் திட்டம் தீட்டியதில் தாங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டு முதல் பக்கத்தில் பெரிய செய்தியாக வெளியிட்டதற்காக என்எஸ்டி என்ற நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நிபந்தனை ஏதுமின்றி 48 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஆறு அரசு சாரா அமைப்புக்கள் காலக் கெடு விதித்துள்ளன.
அந்த நாளேட்டின் செப்டம்பர் 21ம் தேதி செய்தி ஆதாரமற்றது, கெட்ட நோக்கத்துடன் எழுதப்பட்டது என அவை கூறின.
அந்த ஆங்கில மொழி நாளேடு சம்பந்தப்பட்ட கட்டுரையை மீட்டுக் கொள்வதோடு “அதற்கு சமமான முக்கியத்துவம் கொண்ட இடத்தில்” மன்னிப்புக் கேட்கும் செய்தியை வெளியிட வேண்டும் என்றும் அவை வலியுறுத்தின.
“நாங்கள் அதனைக் கடுமையாகக் கருதுகிறோம். அந்த விவகாரம் எங்கள் வழக்குரைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது,” என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் இன்று நிருபர்களிடம் கூறினார்.
“ஆகவே நாங்கள் அடுத்த 48 மணி நேரத்துக்குள் நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸிடமிருந்து பதிலை எதிர்பார்க்கிறோம், அது அதனைச் செய்யத் தவறினால் சட்டத்தின் கீழ் எங்களுக்கு உள்ள எல்லா அவசியமான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.”
மனித உரிமைகளுக்குப் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாராம், ஊடக கண்காணிப்பு அமைப்பான சிஐஜே என்ற சுதந்திர இதழியல் மய்யம், விடுதலைக்கான வழக்குரைஞர்கள், மெர்தேக்கா மய்யம், Seacem என்ற தென் கிழக்காசிய மின்னியல் ஊடக மய்யம் ஆகியவை அந்தக் கோரிக்கையை அங்கீகரித்துள்ள அமைப்புக்களாகும். அவற்றின் பேராளர்களும் நிருபர்கள் சந்திப்பின் போது உடனிருந்தார்கள்.