ஸ்கோர்பியன் விசாரணை: பிரான்ஸ் விரைவில் சாட்சிகளை அழைக்கும்

ஸ்கோர்பியன் நீர்மூழ்கி ஊழல் மீதான நீதிமன்ற விசாரணைக்கு பிரெஞ்ச் நீதித்துறை விரைவில் சாட்சிகளை அழைக்கும் என்று சுவாராம் செயலக உறுப்பினர் சிந்தியா கேப்ரியல் கூறினார்.

“சாட்சியமளிக்கவும் விசாரணைகளுக்கு உதவியாகவும் சாட்சிகளை அழைப்பதற்கான வேலைகளை பிரெஞ்ச் நீதித்துறை செய்து வருகிறது.மிக விரைவில் சாட்சிகள் அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்”,என்றாரவர்.

“சுவாராம் நீதிபதியின் சமிக்ஞைக்காகக் காத்திருக்கிறது. அது கிடைத்ததும் சாட்சிகளின் பட்டியலும் அவர்கள் எப்போது சாட்சியமளிக்க அழைக்கப்படுவார்கள் என்ற தகவலும் வெளியிடப்படும்”, என்று சிந்தியா நேற்றிரவு மலேசியாகினியிடம் தெரிவித்தார். 

மலேசியாவிலிருந்து,அவ்விவகாரத்துடன் தொடர்புள்ள பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரின் நெருங்கிய நண்பர் அப்துல் ரசாக் பாகிண்டா போன்றோர் உள்பட ஏழு சாட்சிகள் அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

அப்போது தற்காப்பு அமைச்சராக இருந்த நஜிப்புக்கு நீதிமன்ற அழைப்பு ஆணை அனுப்பப்படுமா என்று வினவியதற்கு அரசாங்கத் தலைவர் என்ற முறையில் நஜிப்புக்கு சட்டவிதிவிலக்கு உண்டு என்றும் அத்துடன் இவ்விவகாரத்தால் அரச தந்திர உறவுகள் பாதிப்படைவதை பிரான்ஸ் விரும்பாது என்றும் அவர் கூறினார்.

சாட்சிகளை அழைப்பதும் விசாரிப்பதும் உடனடியாக நடந்துவிடாது.இரண்டாண்டுக் காலமாவது அது நீடிக்கும்.

பல அரசுத்துறைகளின் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் சுவாராமுக்கு ஆதரவு தெரிவிக்க நேற்றிரவு நடைபெற்ற மெழுகுதிரி விழிப்புநிலை கூட்டத்தின்போது சிந்தியா பேசினார்.

சுவாராமின் பணியை மற்ற அமைப்புகள் தொடரும்

அக்கூட்டத்தின் ஏற்பாட்டாளரான இங் யாப் ஹுவா,சுவாராமுக்கு எதிரான நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என்றும்   இருபதாண்டுகளாக இருந்து வரும் சுவாராம் ஸ்கோர்பியன் ஊழல் அம்பலாமாகும்வரை இதுபோன்ற தொல்லையை எதிர்நோக்கியதில்லை என்றும் சொன்னார்.

தாம் சுவாராமில் இல்லை என்றாலும் கடந்த பத்தாண்டுகளாக அதன் செயற்பாடுகளில் கலந்துகொண்டு வந்திருப்பதாகக் கூறிய இங், சுவாராமுக்கு எதிரான அரசாங்கத்தின் “நியாயமற்ற” நடவடிக்கைகளைப் பொறுத்துக்கொள்ள இயலவில்லை என்றார்.

கூட்டத்தாரிடையே பேசிய இங்,“அரசாங்கம் இன்றே சுவாராமை எடுத்தெறியலாம்.ஆனால், ஸ்கோர்பியன் ஊழலிலும் அல்டான்துயா ஷாரீபு கொலையிலும் உண்மையைக் கண்டறிய மேலும் பல சிவில் அமைப்புகள் முன்வரும்”, என்றார்.

டாட்டாரான் மெர்டேகாவில் இரவு மணி 8-க்கு ‘ஸ்கோர்பியன் என்றும் சாகாது’ என்ற தலைப்பில் நடந்த அந்த மெழுகுதிரி ஏந்திய விழிப்புநிலைக் கூட்டத்தில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர்.

கோலாலம்பூர் மாநகராண்மைக் கழக அமலாக்க அதிகாரிகளும் போலீஸ் அதிகாரிகளும் 30மீட்டர் தள்ளி நின்று கூட்டத்தை அணுக்கமாகக் கவனித்துக் கொண்டிருந்தனர்.ஆனால், குறுக்கிடவில்லை.

அந்த 90-நிமிட நேர நிகழ்வில் பல என்ஜிஓ-களின் பேராளர்களும் சுவாராமுக்கு ஆதரவும் ஊக்கமும் தெரிவித்துக் கொண்டனர்.

புக்கிட் கோமான் சைனைட் தடைக் குழு. மலேசிய இளைஞர், மாணவர் இயக்கம்,சுதந்திரத்துக்காக போராடும் வழக்குரைஞர்கள் அமைப்பு, டாட்டாரான் ஆக்கிரமிப்பு இயக்கம், கோமாஸ், வழக்குரைஞர் மன்ற மனித உரிமைக்குழு, கோலாலம்பூர்,சிலாங்கூர் சீனர் அசெம்ப்ளி மண்டப மனித உரிமைக் குழு ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கு குழுமியிருந்தனர்.

‘சுவாராம் தனியாக இல்லை’

நேற்றைய நிகழ்வில் மனித உரிமை வழக்குரைஞர் எட்மண்ட் போன், சுபாங் எம்பியும் சுவாராம் நிறுவனருமான சிவராசா ராசையா, கிளானா ஜெயா எம்பி லோ குவோ-பர்ன் முதலியோரும் அதில் பேசினர்.

சுவாராம் தலைவர் கே.ஆறுமுகம் பேசும்போது, கூட்டத்தில் அவ்வளவு பேர் கலந்துகொண்டது ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டார்.

“இன்று உங்கள் வருகையாலும் ஆதரவாலும் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

“இன்று சுவாராம் தனியாக இல்லை.இதற்குமுன்பும் அது தனியாக இருந்தது இல்லை.அது உண்மையில் உங்களின் குரல்.அது ‘suara rakyat Malaysia’(அதுதான் சுவாராமின் முழுப் பெயருமாகும்)”, என்றார்.

கூட்டத்தினர் “மக்கள் வாழ்க”,“சுவாராம் வாழ்க”, “சட்ட நடவடிக்கையை நிறுத்து” என்று குரல் எழுப்பியதுடன் “சுவாராம் ரக்யாட்” பாடலையும் பாடினர்.

முடிவில் சிந்தியா, சுவாராமுக்கு என்னவானாலும் பிரான்சில் விசாரணை தொடரும் என்று கூட்டத்தாருக்கு உறுதி கூறினார்.

 

TAGS: