மோசடி செய்ததாக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் லிங் லியோங் சிக்மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் எதிர்தரப்புச் சாட்சியாக அழைக்கப்படுவார் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்தது.
இன்று காலை லிங்கை மறு விசாரணை செய்த அவரின் வழக்குரைஞர் வொங் கியான் கீயோங், “நாங்கள் மகாதிரைச் சாட்சியாக அழைக்கப்போகிறோம்”, என்றார்.
ஆனால்,மேல்விவரம் எதனையும் வொங் வெளியிடவில்லை.
ஆனால், எதிர்தரப்புக்கு அணுக்கமான வட்டாரமொன்று மகாதிருக்கு அழைப்பாணை விடுக்கப்படிருப்பதாகவும் அடுத்த மாதம் அவர் சாட்சியமளிப்பார் என்றும் தெரிவித்தது.
“அக்டோபர் 8-இல் (அவர்) நீதிமன்றம் வரலாம்”, என்றது கூறியது.
லிங்,69, மகாதிர் பிரதமராக இருந்த காலத்தில் 2002 செப்டம்பர் 25-க்கும் 2002 நவம்பர் 6-க்குமிடையில் பொய்யான தகவல்களைச் சொல்லி அமைச்சரவையை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.
எதிர்தரப்பு, போர்ட் கிள்ளான் தீர்வையற்ற வணிக மண்டலத்துக்கு நிலம் பெறும் விவகாரத்தைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த அமைச்சர் ரயிஸ் யாதிமையும் ஒரு சாட்சியாக அழைக்கும் என அந்த வட்டாரம் கூறிற்று.
முன்னதாக விசாரணை நடந்துகொண்டிருந்தபோது லிங், இரத்தத்தில் சீனி அளவு குறைந்து தலைசுற்றல் ஏற்பட்டிருப்பதாக முறையிட்டதால் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டது.
வழக்கு வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசுதரப்புத் தலைமை வழக்குரைஞர் துன் அப்துல் மஜிட் துன் ஹம்சா நீதிமன்றத்தைவிட்டு வெளியேறும்போது, லிங் அங்கு நின்றிருப்பதைக் கண்டு “நீதிமன்றத்தில் மருத்துவ மனை செல்லப்போவதாகக் கூறினார்……ஆனால். .இன்னமும் இங்கேதான் இருக்கிறார்”, என்று உரத்த குரலில் கிண்டலடித்தார்.