மாற்று பட்ஜெட்டில் இனம் சார்ந்த கொள்கைகளுக்கு இடமில்லை

பக்காத்தான் ரக்யாட் தயாரித்துள்ள நிழல் பட்ஜெட்டில் இனத்தை அடிப்படையாகக் கொண்ட சீரமைப்பு செயல்பாடுகளுக்கு இடமில்லை என்கிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்.

வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்குமுன் இன்று அந்நிழல் பட்ஜெட்டை முன்வைத்த அன்வார், அது பக்காத்தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் கிட்டிய அனுபவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்றார்.

“பூமிபுத்ரா கொள்கைகள் ஒரு சிலரை மட்டுமே பணக்காரர்களாக்கும் வகையில் தவறாக பயன்படுத்தப்பட்டன என்பதால் நாடு ஒரு புதிய கட்டத்தை நோக்கிச் செல்வது அவசியமாகிறது.

“சீரமைப்புத் திட்டங்களின்வழி வறிய மக்களுக்கு உதவி தொடரும் ஆனால், அது இனத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை”, என்றாரவர்.

சிலாங்கூரிலும் பினாங்கிலும் மைக்ரோ-கடனுதவித் திட்டங்கள் போன்றவை இனத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்று கூறிய அவர் என்றாலும் பூமிபுத்ராக்களே பெரும்பாலும் அவ்வுதவிகள் பெறத்  தகுதி உள்ளவர்களாக இருப்பதால் அவர்களே அவற்றால் அதிகம் நன்மை அடைகிறார்கள் என்றார்.

“ஆனால், இதில் தகுதிபெறும் இந்தியர்களும் உதவி பெறுகிறார்கள்.அதனால் மலாய்க்காரர் உரிமைகள் பறிபோவதில்லை”, என்று அன்வார் சொன்னார்.. 

 

TAGS: