இண்ட்ராப்: ஸாகீர் நாய்க் மலேசியாவிற்குள் அனுமதிக்கப்படக்கூடாது

-வி.சம்புலிங்கம், தேசிய ஒருங்கிணைப்பாளர், இண்ட்ராப் மக்கள் சக்தி. செப்டெம்பர் 26, 2012.

பல சமயத்தவர்கள் ஒருவர் மற்றவரை  மதித்து முதிர்ந்த நல்லிணக்கத்தோடு வாழ வகை செய்யும் அரசியலமைப்பைக் கொண்ட நாடு மலேசியா. அதே நேரத்தில், ஒருவரின் மத நம்பிக்கைகளைச் சிறுமைப்படுத்தும் எவ்வித நடவடிக்கையும் எரிமலையாக வெடித்திடும் அளவுக்கு உணர்சிகளைத் தூண்டக் கூடிய சமூக கட்டமைப்பையும் இந்நாடு இயற்கையாகவே கொண்டுள்ளது. அத்தகைய கொடூரமான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதில் எந்த சராசரி  மலேசியனுக்கும் இதுவரை நாட்டமோ நோக்கமோ இருந்ததில்லை, இருக்கபோவதுமில்லை.

இந்த அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் ஆபத்தை  விளைவிக்க கூடிய வகையில் அமையும் ஸாகீர் நாய்க் வருகையைத்  தடை செய்ய வேண்டும் என்று இண்ட்ராப் இயக்கம் மலேசிய அரசை கேட்டுகொள்கிறது.

இந்து சமயம் தனி மனிதனால்  தோற்றுவிக்கப்பட்டதல்ல. அதற்கு வயதும் வரம்பும் இல்லை. இறைவன் ஒருவனே. அவனுக்கு உருவம் என்று ஏதுமில்லை. ஆயினும் அவனை விரும்பிய தோற்றத்தில் வழிபடலாம் என்ற சுதந்திரத்தை இந்துக்கள் அருளாளர்கள் மூலம்  பெற்றிருக்கிறார்கள். இந்த பிரபஞ்சத்தையும் அதில் எண்ணிலடங்கா ஜீவராசிகளையும் படைத்த மகா வல்லமை பொருந்திய  கருணை  வடிவான இறைவனை, பக்தியால் ஊனை உருக்கி கண்ணீர் மல்கி, உடல், உயிர் என்ற அனைத்தையும் அந்த பரமாத்மாவின் பாதங்களில் சமர்பிக்கும் உன்னதமான சரணாகதியின் உச்சத்தில்,  பக்தன் விரும்பும் எத்தகையக்  கோலத்திலும் காட்சி தந்து அருள் பாலிக்கும் பராக்கிரமம்  படைத்தவன் இறைவன்  என்பது இந்து சமயத்தாரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

இந்துக்களின் இதுபோன்ற இன்னும் பல அடிப்படை நம்பிக்கைகளையும் அவர்களின் உணர்வுகளையும் புண்படுத்தி கொண்டிருக்கும் ஸாகீர் நாய்க் வருகை மலேசியாவிற்கு  தேவையான ஒன்றல்ல.

இந்துக்களை மட்டும் அல்ல, கிருஸ்துவ, சீக்கிய சமயத்தாரையும் ஸாகீர் நாய்க் தமது பேச்சால் புண்படுத்தும் நபர். ஸாகீர்  நாய்க்கின் இந்தப் பொறுப்பில்லாதச் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. கனடா மற்றும் இங்கிலாந்திற்குள்  நுழைய முடியாத அளவிற்கு அவருக்கு அந்நாடுகள் தடை விதித்துள்ளன.

அண்மையில் முஸ்லிம் சகோதரர்களை புண்படுத்தும் நோக்கத்தில் இணையத் தளத்தில் பதிவேற்றம் கண்ட ‘Innocence of Muslims’ என்ற திரைப்படத்தைப் பற்றி செப்டெம்பர்  25-ஆம்  தேதி மலேசிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது, பிரதமர் துறை அமைச்சர்  டத்தோ ஸ்ரீ முஹமட் நஸ்ரி அப்துல் அசீஸ், மலேசியா  எந்த சமயத்திற்கும் அவமானத்தை ஏற்படுத்தும் செயல்களை அனுமதிக்காது என்று கூறியிருக்கிறார். அவர் கூறியது வெறும் உதட்டளவில் அல்ல என்பதை  மற்ற சமயத்தாரை சிறுமை படுத்தும் ஸாகீர் நாய்க் மலேசியாவிற்குள் வருவதை பாரிசான் அரசாங்கம்  தடை விதித்து நிரூபிக்க வேண்டும் என்று இண்ட்ராப் கேட்டுக்கொள்கிறது.

இந்து சமயம்  பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் எத்தனையோ விவாதங்களையும், தர்கங்கங்களையும்  எதிர்கொண்டுள்ளது. அதன் மூலம் இந்து சமயத்தின் மாண்மை மேலும் மேலும் உயர்ந்துள்ளது. எனினும் அந்தச் செயல்கள் இந்து சமயத்தாரின் உள்விவகாரம். இந்து சமயத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் அது பற்றி வியாக்கியானம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

இந்து சமயம் மலேசியாவில் அதன் அரசாலும் குடிமக்களாலும்  ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சமய மார்க்கம். அதனை ஸாகீர் நாய்க் போன்றவர்கள் சீர்குலைப்பதை மலேசிய அரசு அனுமதிக்ககூடாது.

TAGS: