ஜப்பானிய துருப்புக்கள் பிரிட்டிஷ் வீரர் ஒருவரைக் கொன்றதை தாம் நேரடியாகப் பார்த்ததை இரண்டாம் உலகப் போரில் உயிர் பிழைத்த கோடீஸ்வர நிதியாளர் ஜார்ஜ் சோரோஸிடம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் விவரித்துள்ளார்.
தமது பெர்டானா தலைமைத்துவ அற நிறுவனம் தொடங்கியுள்ள உலக அளவிலான போர் எதிர்ப்பு முயற்சிகளுக்கு, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தமக்கு எதிரியாக இருந்த சோரோஸின் ஆதரவை நாடி அவருக்கு எழுதிய மூன்று பக்க தனிப்பட்ட கடிதத்தில் அந்தச் சம்பவத்தை மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
மலாயா மீது ஜப்பானியர்கள் படையெடுத்த போது அலோர் ஸ்டாரில் மறக்க முடியாத அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் அதில் தெரிவித்தார்.
“என்னுடைய சொந்த ஊரில் ஜப்பானியர்கள் இளம் பிரிட்டிஷ் வீரர் ஒருவரைக் குத்திக் கொன்றது என் மீது மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டது,” என மகாதீர் 2006ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். அந்தக் கடிதத்தின் பிரதி மலேசியாகினியிடம் உள்ளது.
“அது சிறிய சம்பவமாகத் தோன்றலாம். ஆனால் தமது வீட்டிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் 8,000 மைல் தொலைவில் அந்த இளைஞன் உடல் கத்தியால் குத்தப்பட்ட போது நான் அவனுக்காக கண்ணீர் விட்டேன். அந்த இளைஞன் வலியால் இரண்டு அல்லது மூன்று முறை கத்தினார். பின்னர் எல்லாம் அமைதியாகி விட்டது.”
“நான் அப்போது பதின்ம வயதினர். அது எனக்கு நிகழக் கூடும் என்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. ஒருவரை நாம் இப்படிக் கொடூரமாகக் கொல்ல முடியும். அத்துடன் குற்ற உணர்வு இல்லாமலும் இருக்க முடியும்.”
மகாதீருடைய பதின்ம வயது அறியாத் தன்மையை சிதறடித்த பல அதிர்ச்சியான சம்பவங்களில் அதுவும் ஒன்று என மலேசியாவின் தான்தோன்றி ( Malaysia Maverick ) புத்தகத்தை எழுதியுள்ள பேர் வெய்ன் குறிப்பிட்டுள்ளார். அந்தச் சம்பவங்கள் ” அவரை முழுமையாக அரசியல் மயமாக்கி விட்டது, அவரது வாழ்க்கைப் பாதையையும் மாற்றி விட்டது.”
போர்க் காலப் பயங்கர அனுபவங்கள் சோரோஸுக்கும் உண்டு.
அவர் ஹங்கேரி, புடாபெஸ்ட்டில் யூத குடும்பத்தில் அவர் பிறந்தார். இரண்டாம் உலகப் போரின் போது இறுதி நாட்களில் ஜெர்மானிய படைகளும் சோவியத் படைகளும் ஒவ்வொரு வீட்டிலும் நடத்திய புடாபெஸ்ட் போரில் சோரோஸ் உயிர் பிழைத்தார்.
1947ம் ஆண்டு பதின்ம வயதினராக இருந்த வேளையில் சோரோஸ் போருக்குப் பின்னர் இங்கிலாந்துக்கு குடியேறினார்.
பெரிதும் தூற்றப்பட்ட நாணய ஊக வணிகரான சோராஸை தமது உலக அமைதித் திட்டத்தில் சேர்ந்து கொள்ளுமாறு அந்தக் கடிதம் கேட்டுக் கொண்டது.
அனைத்துலகப் பூசல்களைத் தீர்ப்பதற்கு சண்டையை ஒரு வழியாகப் பயன்படுத்துவதையும் அதனைத் தொடங்குவதையும் கிரிமினல் குற்றமாக்கி சட்ட விரோதமாக்குவது அந்த அமைதித் திட்டத்தின் நோக்கமாகும்.
உயிர் வாழ்வதற்கான உரிமை என்ற இறுதி மனித உரிமைகளை அடையும் முயற்சிக்கு உங்கள் பெயரைத் தந்து உதவுமாறு அழைப்பதற்கு நான் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன்,” என அந்த முன்னாள் பிரதமர் தமது 2006ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் இருவரும் இப்போது 80 வயதைத் தாண்டி விட்டனர். மகாதீருக்கு 87, சோரோஸுக்கு 82- ஆசிய நிதி நெருக்கடியின் போது இருவரும் கசப்பான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். சோரோஸ் ‘குழப்பத்தை’ ஏற்படுத்திய ‘கயவர்’ என்று மகாதீர் கூறினார். மலேசியப் பிரதமர் ‘தமது நாட்டுக்கு ஆபத்தானவர்’ எனச் சோரோஸ் திருப்பித் தாக்கினார்.
“நாம் ஒரு மனிதரைக் கொல்வதை மிகவும் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டிய ஒரு குற்றமாக நாம் கருதுகிறோம்,” என மகாதீர் அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.
“ஒரு பக்கம் கொல்வதை கொலையாகவும் கடுமையான குற்றமாகவும் நாம் கருதுகிறோம். அதே நேரத்தில் மக்களைக் கொல்வதற்கு நமது இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம். கொல்லுமாறு அவர்களுக்கு ஆணையிடுகிறோம். அவர்களுடைய செயல்களையும் போற்றுகின்றோம்- இந்த நிலை எனக்கு இரட்டை வேடமாகத் தெரிகிறது.”
‘ஒரே எண்ணங்கள்’
பதின்மய வயதில் இருவரும் கண்ட தங்களுடைய பொதுவான போர்க்கால அனுபவங்களை விவரித்த மகாதீர், உலகளாவிய போர் எதிர்ப்பு இயக்கத்துக்கு ‘தமது பெயரை’ தந்து உதவுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
நமது வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் போர் குறித்து நாம் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. உதாரணம்: ‘தேசிய நோக்கத்தை அடைவதற்காக மக்களைக் கொல்வது பற்றியதாகும்’ என்றார் மகாதீர்.
சோரோஸ், மகாதீருக்கு என்ன பதில் அளித்தார் என்பது தெரியவில்லை. என்றாலும் அது ‘முடியாது’ என்பதாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் சோரோஸ் உலக அமைதி ஆய்வரங்கில் இணையவே இல்லை.
மகாதீர் சோரோஸை கோலாலம்பூரில் 11 மாதங்களுக்குப் பின்னர் சந்தித்தார். அப்போது இரண்டு எதிரிகளும் வேறுபாடுகளைத் தீர்த்துக் கொண்டனர்.
அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து மலேசிய நாணய மதிப்பு குறைந்ததில் சோரோஸ் சம்பந்தப்படவில்லை என்பதைத் தாம் ஒப்புக் கொள்வதாக மகாதீர் சொன்னார்.
ஆனால் நான்கு நாட்களுக்கு முன்னர் அந்த வேறுபாட்டுக்கு மகாதீர் மீண்டும் உயிர் கொடுத்தார். சோரோஸ் மலேசியாவில் ஆட்சி மாற்றத்துக்கு முயற்சி செய்வதாக இன்னொரு குற்றச்சாட்டை மகாதீர் சுமத்தியுள்ளார்.
மகாதீருக்கும் சோரோஸுக்கும் இடையிலான பகைமை 1990ம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே உருவானது. அந்த நேரத்தில் ‘போக்கிரி மத்திய வங்கி’ என நிதி பார்வையாளர்களால் கருதப்பட்ட பாங்க் நெகாரா மலேசியா அதிக ஆபத்தான நாணய ஊக வாணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. அதனால் 5.7 பில்லியன் ரிங்கிட் இழப்பையும் அது கண்டது.