சிசிஎம் ‘மீன் பிடிப்பதாக’ சுவாராம் குற்றம் சாட்டுகின்றது

மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் குற்றம் செய்யாத வேளையில் அதன் மீது தப்புக் கண்டு பிடிக்க சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையம் விசாரணைகளை நடத்துவதாக அதன் செயலக உறுப்பினர் சிந்தியா கேப்ரியல் கூறுகிறார்.

“அது மீன் பிடிப்பதில் ஈடுபட்டுள்ளது. நாங்கள் எங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள வழிகளில் தவறு எதனையும் கண்டு பிடிக்க முடியாத வேளையில் எங்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்காக விஷயங்களை அது தேடிக் கொண்டிருக்கிறது.”

“நாங்கள் நிறுவனச் சட்டத்தின் கீழ் எல்லாவற்றையும் செய்து விட்டோம். எங்கள் கணக்குகள் சீராக இருக்கின்றன. ஆகவே இது உண்மையில் மீன் பிடிப்பதாகும். அரசியல் நோக்கம் கொண்ட விசாரணை என்பதும் தெளிவாகத் தெரிகிறது,” என சிந்தியா சொன்னார்.

சுவாராமின் முன்னாள் கணக்கியல் நிர்வாகி லியோங் மீ நான் -னையும் அவரையும் நேற்று கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சிசிஎம் விசாரணை செய்த பின்னர் சிந்தியா மலேசியாகினியிடம் பேசினார்.

தங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குவதற்காக நிறுவன வழக்குரைஞர் ஒருவரும் அப்போது உடன் இருந்ததாக அவர் சொன்னார்.

நேற்று பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய அந்த விசாரணை “மிகவும் நுட்பமாக” இருந்தது என்றும் சுவாராமைத் தோற்றுவித்தவர்கள், வங்கி கையெழுத்தாளர்கள், அதன் மேம்பாட்டாளர்கள், அதன் நடவடிக்கைகள் ஆகியவை உட்பட சுவாராம் பற்றியதாக இருந்தது என்றும் சிந்தியா வருணித்தார்.

விசாரணை அறிக்கைகள் திருப்பி அனுப்பப்பட்டன

ஒவ்வொரு கேள்விக்கும் தாம் முழுமையாக பதில் அளிக்க முடிந்ததாக அவர் மேலும் கூறினார்.

“அவர்கள் சுவாராமுக்கும் Suara Inisiatif Sdn Bhd-க்கும் இடையிலான வேறுபாட்டை – அவை இரண்டும் தனித்தனி அமைப்புக்கள்- வலியுறுத்தி வருகின்றனர். உண்மையில் இரண்டும் ஒன்றே,” என்றும் அவர் சொன்னார்.

பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமான Suara Inisiatif -லிருந்து கிடைக்கும் நிதிகளைக் கொண்டு சுவாராமுக்குப் “பணத்தை வெள்ளையாக்கியதாக” வழக்குத் தொடுப்பதற்கு சிசிஎம் முயன்று வருவதாக நம்பப்படுகின்றது.

சுவாராம் மீதான தனது விசாரணை அறிக்கைகளை சிசிஎம் கடந்த வாரம் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு (ஏஜி)அனுப்பியது. ஆனால் குற்றச்சாட்டுக்களை தயாரிப்பதற்கு அந்த அறிக்கைகள் முழுமையானதாக இல்லை என ஏஜி அலுவலகம் திருப்பிக் கொடுத்து விட்டது.

அந்த விசாரணை அறிக்கைகளை மீண்டும் சமர்பிப்பதற்காக எல்லா ஆதாரங்களையும் சிசிஎம் இன்னும் திரட்டி வருவதாக உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் நேற்று அறிவித்திருந்தார்.

TAGS: