பிரதமரும் நிதி அமைச்சருமான நஜிப் அப்துல் ரசாக், அம்பாங்கில் எல்ஆர்டி விரிவாக்க திட்டத்துக்கான குத்தகையைப் பெற்றுள்ள ஜார்ஜ் கெண்ட் நிறுவனத்தைத் தற்காத்து பேசியுள்ளார்.அந்நிறுவனம் அக்கட்டுமான வேலைக்குப் பொருத்தமற்றதென்று கூறப்படுவதை அவர் மறுத்தார்.
ரிம1.084பில்லியன் குத்தகை வேலையை மேற்கொள்ளும் தகுதி லயன் பசிபிக்குடன் கூட்டாக செயல்படும் ஜார்ஜ் கெண்ட் நிறுவனத்துக்கு உண்டென்று அவர் வலியுறுத்தினார்.
செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட பதிலில், ஜார்ஜ் கெண்ட் குழுமம் தொழில்நுட்ப மதிப்பீட்டில் தேறி இருந்ததாக பிரதமர் கூறினார். அத்துடன் அது எட்டுக் குத்தகை நிறுவனங்களில் ஆகக் குறைந்த விலையைக் குறிப்பிட்டிருந்த நிறுவனங்களின் வரிசையில் அது இரண்டாம் இடத்தில் இருந்தது.
“ஜிகேஎல்பி ஜேவி(ஜார்ஜ் கெண்ட்-லயன் பசிபிக் கூட்டு நிறுவனம்)-இல் நிதி வசதி கொண்ட உள்ளூர் நிறுவனங்கள் ஒன்றிணைந்துள்ளன.பங்குச் சந்தையிலும் அது இடம்பெற்றுள்ளது”, என்றாரவர்.
ஜிகேஎல்பி ஜேவி-யைவிட குறைவான விலையை இன்னொரு நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.ஆனால்,அது ஒப்பந்தத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டது”.
குத்தகை வழங்கும் முடிவை மற்ற பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதையும் குறை சொல்லவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நஜிப்பின் கூற்று இதற்குமுன் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி சுமத்திய குற்றச் சாட்டுக்கு முரணாக இருக்கிறது.ரபிஸி, எல்ஆர்டி திட்டத்தை மேற்கொண்டிருக்கும் ஷியாரிகாட் ப்ராசரானா நெகரா பெர்ஹாட்(ப்ராசரானா)-இன் நிர்வாக இயக்குனர் ஷ்ரில் மொக்தார் 2012 ஜனவரி 20 என்று தேதியிடப்பட்ட கடிதமொன்றில் “ஜார்ஜ் கெண்ட் குழுமம் நிதி மதிப்பீட்டில் தேறவில்லை”என்று குறிப்பிட்டிருப்பதாகக் கூறினார்.
ரபிஸி(இடம்) காண்பித்த அக்கடிதம் ஜார்ஜ் கெண்ட்-லயன் பசிபிக் கூட்டு நிறுவனம்,“தொழில்நுட்ப ரீதியிலும் நிதி ரீதியிலும் செய்யப்பட்ட மதிப்பீட்டுச் சோதனையில் தேர்ச்சி பெறவில்லை” என்று குறிப்பிட்டுள்ளது.
“ஜார்ஜ் கெண்டிடம் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட தகுதிகள் இல்லை…..எனவே, ஜார்ஜ் கெண்ட் எல்லா மதிப்பீடுகளிலும் தேறி ஒப்பந்தத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்தது என்ற பொய் நாட்டின் கொள்முதல் நடைமுறைகளை இழிவுபடுத்துகிறது என்பதுடன் குத்தகைக்கு விண்ணப்பம் செய்யும் நிறுவனங்கள் மதிக்கப்படுவதில்லை என்பதையும் காண்பிக்கிறது”, என்று ரபிஸி கடந்த மாதம் கூறியிருந்தார்.