கூட்டரசுக் கடன்கள் ஆவணங்கள் ரீதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 விழுக்காட்டை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் 2011ம் ஆண்டு டிசம்பர் வரையிலான ‘உண்மையான கடன்” 573 பில்லியன் ரிங்கிட் ஆகும். அது மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 67 விழுக்காடு ஆகும்.
அந்த விவரங்கள் மூத்த வழக்குரைஞரான டோமி தாமஸ் வெளியிட்டுள்ளார்.
கடன் அளவு, சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 விழுக்காடு என்னும் உச்ச வரம்பைத் தாண்டாது என ஏற்கனவே கூட்டரசு அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது.
நிறுவன ஆளுமையில் நிபுணத்துவம் வாய்ந்தவரான அவர் கோலாலம்பூரில் நடைபெறுகின்ற 2011ம் ஆண்டுக்கான அனைத்துலக மலேசிய சட்ட மாநாட்டில் தயாரிக்கப்பட்ட கட்டுரை ஒன்றை அவர் சமர்பித்தார்.
அந்த 67 விழுக்காட்டில் அரசாங்க உத்தரவாதங்கள், ‘ஐந்தொகைக்கு அப்பாற்பட்ட’ கடன்கள் ஆகியவையும் அடங்கும் என்றார் அவர்.
“2009ம் ஆண்டு அந்த மறைவான கடன்கள் மதிப்பு 84 பில்லியன் ரிங்கிட் ஆகும். அது 2011ல் 117 பில்லியன் ரிங்கிட்டாக கூடியுள்ளது.”
அரசாங்கக் கடன்கK தொடர்பில் கிரீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் எதிர்நோக்கும் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு பார்த்தால் அது மிகவும் பொறுப்பற்றதாகும்,” என்றார் தாமஸ்.
அவர் நிறுவன ஆளுமை மீதான ஐநா மேம்பட்டுத் திட்டத்துக்கு முதுநிலை ஆலோசகரும் ஆவார்.
கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் மலேசியாவின் கடன்கள் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துள்ளன என்றார் அவர்.
2005ம் ஆண்டு அப்போதைய பிரதமர் அப்துல்லா அகமட் படாவியின் கீழ் தேசியக் கடன் 229 பில்லியன் ரிங்கிட்டை எட்டியது.
“ஆனால் அடுத்த ஆறு ஆண்டுகளில் அந்த அளவு 456 பில்லியன் ரிங்கிட்டாக கிட்டத்தட்ட இரு மடங்கு கூடியது. அந்த அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52 விழுக்காட்டைக் குறித்தது,” என்றும் தாமஸ் தெரிவித்தார்.
“மெர்தேக்காவுக்கு பின்னர் 48 ஆண்டுகளில் சேர்ந்ததைக் காட்டிலும் கூடுதலான கடன்களை ஆறு ஆண்டுகளில் கடந்த இரண்டு நிர்வாகங்களும் சேர்த்து விட்டன,” என அவர் சமர்பித்த கட்டுரை கூறியது.
“நிறுவனக் கடன்கள் அளவுக்கு அதிகமானதால்” உருவான 1997 நிதி நெருக்கடியை மலேசியா நல்ல முறையில் சமாளித்துள்ளதை தாமஸ் தமது கட்டுரையில் ஒப்புக் கொண்டார்.
“முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வரலாற்றில் அது மிகவும் வெற்றிகரமான திருப்பங்களாகும். அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.56 விழுக்காடு செலவை மட்டுமே வரி செலுத்துவோருக்கு ஏற்படுத்தியது. அது உண்மையில் மிகவும் மலிவான மீட்பு நடவடிக்கை ஆகும்,” என்றார் அவர்.
புதிய பொருளாதாரக் கொள்கையின் பொற்காலம்
அந்த மாநாட்டில் பொருளாதார நிபுணரான டெரன்ஸ் கோமஸும் பேசினார். அவரது உரையின் தலைப்பு ‘ஆசிய நில வடிவமைப்பு: அடுத்தது என்ன ?’ என்பதாகும்.
அவர் தமது உரையில் மலேசியாவை தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளுடன் ஒப்பிட்டார்.
மலேசியா தவறான பாதையைத் தெரிவு செய்து விட்டதாக அவர் சொன்னார்.
“புதிய பொருளாதாரக் கொள்கையின் முதல் 10 ஆண்டுகள் உண்மையில் பொற்காலமாகும். என்றாலும் 1981ல் தொழிற்சங்கங்கள் குறிக்கப்பட்டதும் தனியார் மயம் உட்பட தாராள மயத்துக்கு ஆதரவான சிந்தனைகள், விதிகள் தளர்த்தப்பட்டது ஆகியவை திருப்பத்தை ஏற்படுத்தின.”
வர்த்தகத்திற்கு ஆதரவாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் உறுதுணையாக இருந்தன என்றும் கோமஸ் குறிப்பிட்டார்.
புதிய பொருளாதாரக் கொள்கையின் தொடக்க காலத்தில் அரசாங்கம் கல்வி மீதான தனது ஈடுபாட்டில் ஆதரவான நடவடிக்கைகளை அமலாக்கியது. அதனால் பொருளாதாரத்தின் மீது ஏற்பட்ட சாதகமான தாக்கத்தினால் புதிய நடுத்தர வர்க்கம் உருவானது.
“ஆனால் வர்த்தகத்தில் ஆதரவு நடவடிக்கைகள் புரவலர் போக்கை தேர்வு செய்தன. அது பொருளாதாரத்துக்கு நன்மையைத் தரவில்லை. அங்கு தான் நாம் தவறு செய்து விட்டோம்.”
“என்றாலும் நாம் இன்னும் மோசமாகவில்லை. நிறுவனச் சீர்திருத்தங்களை அமலாக்கி பொருளாதாரத்தை சரியான பாதையில் வைக்க முடியும்,” என்றும் கோமஸ் நம்புகிறார்.
இன்று சிஐஎம்பி வங்கிக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நாசிர் ரசாக்கும் உரையாற்றினார்.