அரசாங்கம் “பொருளாதாரப் பேரிடரை ஏற்படுத்தும் சாத்தியமுள்ள” ஒன்றைப் பற்றிய தகவல்களை மூடி மறைப்பதாக மாற்றரசுக் கட்சி எம்பி ஒருவர் கூறுகிறார்.
“தொழில் அதிபர் சைட் மொக்தார் அல்-புஹாரியின் (வலம்) வணிகக் கடன்களை மூடி மறைக்கிறார்கள் என்று சந்தேகப்படுகிறேன்.
“அதனால் பொருளாதாரப் பேரிடர் விளையும் சாத்தியம் உண்டு”, என பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா கூறினார்,
முன்பு உள்ளூர் வங்கிகளிடம் ரிம20பில்லியன் கடன்பட்டிருந்த ரெனோங் குழுமம் படுவீழ்ச்சி அடைந்து பொருளாதாரமே ஆட்டம் கண்ட நிலையை நினைவுபடுத்திய அவர் அப்படி ஒரு நிலை ஏற்படலாம் என்றார்.
இதுவரை மொக்தார் குழும நிறுவனங்கள் உள்ளூர் நிதி நிறுவனங்களிடம் ரிம34 பில்லியனுக்கும் அதிகமாக கடன் வாங்கியிருப்பதாக புவா கூறினார்.
நாடாளுமன்றத்தில் அந்தத் தொழில் அதிபர் பற்றித் தாம் கேட்டிருந்த கேள்வி நிராகரிக்கப்பட்டது குறித்து கருத்துரைத்தபோது புவா இவ்வாறு கூறினார்.
அவ்விவகாரம் தொடர்பில் மூன்று தடவை கேள்வி கேட்டு நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்றாரவர்.
இன்று அவருடைய வாய்மொழி கேள்வியை நிராகரித்த அவைத் தலைவர், புவாவின் கேள்வி “அற்பமான” விவகாரம் பற்றி “வெறும் அனுமானங்களைக் கொண்டிருப்பதாக”க் கூறினார்.
சைட் மொக்தாரின் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டவை என்பதால் அவற்றின் கடன்கள் இரகசியமானவை அல்ல.அவை பற்றி ஆண்டறிக்கைகளில் பொதுமக்களுக்கும் பங்குதாரர்களுக்கும் பங்குச் சந்தைக்கும், மலேசிய நிறுவனங்களின் ஆணையத்துக்கும் தெரிவிக்கத்தான் வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.
கேள்விகள் “வெறும் அனுமானங்களை”க் கொண்டிருப்பதாக அவைத்தலைவர் கூறியதையும் அவர் ஏற்கவில்லை.
“எல்லாக் கேள்விகளும் அனுமானங்கள் இருக்கத்தான் செய்யும்.அனுமானம் சரியா தப்பா என்பதைத் தெரிந்துகொள்ளத்தானே கேள்வி கேட்கிறோம்”.
ஒரு தனி மனிதரின் தொழில் சாம்ராஜ்யம் ரிம34பில்லியன் கடன் பட்டிருப்பது “அற்பமான விசயமல்ல”, அது நாட்டின் பொருளாதாரத்தையே கவிழ்த்து விடலாம் என்று புவா குறிப்பிட்டார்.
1997-இல் ரெனோங்கிலும் வேறு சில நிறுவனங்களிலும் அப்படி ஒரு நெருக்கடி நேர்ந்தபோது அரசாங்கம் தலையிட்டு நொடித்துப்போன பல நிறுவனங்களுக்குக் கைகொடுக்க வேண்டியதாயிற்று என்றாரவர்.
எனவேதான், பல பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட இதை ஒரு கடுமையான விவகாரமாக அவர் கருதுகிறார்.