எஸ்பிஎம் சோதனைத் தேர்வில் பெர்சே கேள்வி ‘ஒரு பிரச்னை அல்ல’

அண்மையில் நடத்தப்பட்ட எஸ்பிஎம் சோதனைத் தேர்வுகளில் பெர்சே 3.0 பேரணி மீதான கேள்வி இடம் பெற்றது ‘ஒரு பிரச்னையே அல்ல’ என்று கல்வித் துணை அமைச்சர் புவாட் ஸார்க்காஷி கூறுகிறார்.

“அது இன, சமய உணர்வுகளைக் காயப்படுத்தாத வரையில் அல்லது எந்த ஒரு தனிநபரையும் குறை கூறாத வரையில் அது பிரச்னையே அல்ல.. அது மக்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயமாகும்,” என அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

இன்று கோலாலம்பூர் செந்தூலில் செயிண்ட் ஜோசப் தமிழ் தேசிய வகைப் பள்ளிக்கூடத்துக்கு வருகை அளித்த பின்னர் மலேசியாகினியிடம் ஸார்காஷி பேசினார்.

அமைச்சு அந்தக் கேள்வியை நிர்ணயம் செய்யவில்லை என்றும் அந்த விவகாரம் பற்றிப் புகார் ஏதும் கிடைக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

“எனக்கு எந்தப் புகாரும் கிடைக்கவில்லை. அது சோதனைத் தேர்வுக்கான கேள்வி ஆகும். அது அமைச்சிடமிருந்து செல்லவில்லை. அது பள்ளிக்கூடத்தைச் சார்ந்ததாகும். ஆகவே நாங்கள் அந்த விவகாரத்தை பள்ளிக்கூடத்திடம் விட்டு விடுகிறோம்.”

எஸ்பிஎம் சோதனைத் தேர்வு வினாத்தாள் ஒன்றிலிருந்து பெறப்பட்டதாக கூறப்பட்ட அந்தக் கேள்வியின் படம் முகநூல் பக்கத்தில் அண்மையில் பரவியது.

நன்னெறிக் கல்விப் பாடம் சம்பந்தப்பட்டது எனக் கருதப்படும் அந்தக் கேள்வியில் ஏப்ரல் 28ம் தேதி பேரணியின் போது நிகழ்ந்த சம்பவங்களின் இரண்டு படங்கள் இடம் பெற்றிருந்தன.

“சட்ட விரோதக் கூட்டம் ஒன்றில் பிரஜை ஒருவர் பங்கு கொள்வது நியாயமானதா ?” என அந்தக் கேள்வி இருந்தது.

‘நியாயமில்லாதது’ என மாணவர் அளித்த பதில் அங்கு சரியானது என கோடிடப்பட்டுள்ளது.

சோதனைத் தேர்வுகளுக்கான கேள்விகளை பள்ளிக்கூடங்கள் அல்லது மாநிலக் கல்வித் துறைகள் நிர்ணயம் செய்வதாக தேசியத் தேர்வு வாரியப் பேச்சாளர் ஒருவர் இதற்கு முன்னர் மலேசியாகினியிடம் கூறினார்.

இதனிடையே அந்தக் கேள்வி அமைச்சிடமிருந்தோ அல்லது தேசியத் தேர்வு வாரியத்திடமிருந்தோ வரவில்லை என்பதை கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங்-கும் உறுதிப்படுத்தியுள்ளார்.

“யார் அந்தக் கேள்விகளை நிர்ணயித்தது என்பது எனக்குத் தெரியாது. என்றாலும் புகார்களை உருவாக்குவதற்காக யாரும் அந்தக் கேள்விகளை தயாரிக்கலாம். அவை அமைச்சிடமிருந்து வந்ததாகவும் சொல்லலாம்,” என அவர் நாடாளுமன்ற வளாகத்தில் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

இணையத்தில் கூறப்படுகின்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மீது அமைச்சு விசாரிக்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

“டோ, டிக், ஹாரி ஆகியோரின் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு நான் நடவடிக்கை எடுக்க முடியாது. அது அமைச்சின் கீழ் உள்ள அமைப்பிடமிருந்து வந்திருந்தால் நாங்கள் விசாரிக்க முடியும்.”

“இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதற்காக நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமா ? நாங்கள் முதலில் உண்மையா இல்லையா என்பதை விசாரிக்க வேண்டும்,” என அவர் காரணம் கூறினார்.

எது எப்படி இருந்தாலும் சோதனைத் தேர்வு வினாக்களை ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாநில அல்லது மாவட்ட கல்வி அலுவலகங்கள் நிர்ணயிக்கின்றன. தமது அமைச்சு அல்ல என வீ விளக்கினார்.

 

TAGS: