தேர்தல் சீரமைப்பை நினைவுபடுத்த ‘ரோக்’ இசை நிகழ்ச்சி; பெர்சே நடத்தும்

தூய்மையான, நேர்மையான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்பதை அரசாங்கத்துக்கு நினைவுபடுத்த விரும்பும் பெர்சே அதற்காக இம்முறை தெரு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடப்போவதில்லை.ரோக் இசை நிகழ்ச்சி நடத்தப்போகிறது.

பெர்சேயின் எட்டு-அம்ச கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பதைத் தேர்தல் ஆணையத்துக்கு உணர்த்த இசைநிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்படும் என அவ்வியக்கத்தின் இயக்கக்குழு நேற்று வெளியிட்ட அறிக்கை கூறியது.

ஏப்ரல் 28-இல்,இலட்சம் பேர் கோலாலம்பூர் தெருக்களில் ஒன்றுதிரண்டு சீரமைப்புக்குக் கோரிக்கை விடுத்து ஐந்து மாதங்கள் கடந்து விட்டன.ஆனாலும்,அரசாங்கம் கோரிக்கைகளுக்கு இன்னமும் செவிசாய்க்கவில்லை.

“வரலாற்றுச் சிறப்புமிக்க பெர்சே 3.0அமைதிப் பேரணிக்குப் பிந்திய மாதங்களில்  தேவையான தேர்தல் சீரமைப்புகளைச் செய்யாமல்  பெர்சே இயக்கக்குழுவைத் தாக்குவதிலேயே அரசாங்கம் குறியாக இருந்து வருகிறது.

“இயக்கக் குழுவுக்கு எதிராக அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்”.

பெர்சே பின்வாங்காது

அதற்கெல்லாம் அஞ்சாமல் அக்குழு வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும் பணியைத் தொடர்கிறது.

“ஆனாலும் செய்யப்பட வேண்டியது நிறைய உள்ளது”,என்று கூறிய அது, அதன் தொடர்பில் அக்டோபர்13-இல் ஸ்டேடியம் கிளானா ஜெயாவில் இசைநிகழ்ச்சி ஒன்று நடத்தப்படும் என்றது..

“அந்நிகழ்ச்சி நிதி திரட்டும் நிகழ்வாக அமைவதுடன் கேளிக்கை மிகுந்ததாகவும் அவசர சீரமைப்புகளைச் செய்ய வேண்டிய அவசியத்தை அரசாங்கத் தலைவர்களுக்கு நினைவுபடுத்துவதாகவும் இருக்கும்.

“தேர்தல் முறைக்கு முழுமையான சீரமைப்பு தேவை.அதற்குக் குறைந்த எதையும்  மலேசியர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.அதை எடுத்துச் சொல்ல, மீண்டும் ஒன்றுதிரளவும் அவர்கள் தயங்க மாட்டார்கள்”, என்றந்த குழு கூறியது.

அந்நிகழ்வில், Ito, Julian Mokhtar and the Gang, Soul Saviors (Pesta Lagu Jalananவெற்றியாளர்கள்), Republic of Brickfields, Dum Dum Tak punk band, Canto rock இசைக்குழுவான Hui Se De Dai, Ray Cheong முதலியோர் கலந்துகொள்கிறார்கள்.

“எல்லா வயதினரையும் கவரும் அங்கங்கள் அதில் இருக்கும்.பெர்செ இயக்கக்குழுவின் சிறப்புப் பாடல் ஒன்றும் இடம்பெறும், தேசிய இலக்கியவாதி ஏ.சமட் சைட் சிறப்புக் கவிதை படைப்பார்”.