‘சீரமைப்புகள்’ மீது நம்பிக்கை உள்ளவர் தேர்தலை நடத்தலாமே

உங்கள் கருத்து: “அதையே திரும்பத் திரும்ப ஏன் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்? உங்கள் சீரமைப்புத் திட்டங்கள்மீது அவ்வளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் இப்போதே தேர்தலை நடத்தலாமே”.

நஜிப்: சட்டச் சீரமைப்பு மனித உரிமைக்கு மதிப்பளிக்கிறது

ஜெரார்ட் லூர்துசாமி: பிரதமர் நஜிப் ரசாக் சொல்வது உண்மையாக இருந்தால், அரசாங்கம் ஐநாவின் அடிப்படை மனித உரிமை சாசனங்களை நிபந்தனையுடனோ நிபந்தனையின்றியோ ஏற்றுக்கொண்டு மனித உரிமைச் சட்டம் ஒன்றின்வழியாக அவற்றைச் செயல்முறைக்குக் கொண்டு வரவேண்டும்.

அமைதிப் பேரணிச் சட்டம், அச்சக,பிரசுரச் சட்டம், சங்கப் பதிவுச் சட்டம், தேச நிந்தனைச் சட்டம், பல்கலைக்கழகம், பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டம், தொழிற்சங்கச் சட்டம், குடிநுழைவுச் சட்டம், போலீஸ் சட்டம், பல்லூடக, தொடர்புச் சட்டம், ஒலிபரப்புச் சட்டம் முதலியவை மறு ஆய்வு செய்யப்பட்டு அவை பன்னாட்டு மனித உரிமை தரங்களுக்கும் நடைமுறைகளுக்கும் ஏற்ப அமைந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தேசிய மனித உரிமை ஆணையம் வலுப்படுத்தப்பட வேண்டும்.தேர்தல் ஆணையம் உண்மையிலேயே சுதந்திரமாக இயங்க வேண்டும்.

போலீசின் தவறான நடத்தை குறித்து புகார் செய்ய தனி ஆணையமும் இருக்க வேண்டும்.

லின் வெங் குவான்: நஜிப் ‘சீரமைப்பு’ என்று சொல்லிச் சொல்லி அச்சொல்லின் அர்த்தத்தையே கெடுத்து விட்டார்.அவரது சீரமைப்புகள் பற்றிச் சொல்வதென்றால்,‘கள் பழசு, மொந்தை புதுசு’அவ்வளவுதான்.

புதியமலேசியா: ஐயா, சீரமைப்புப் பற்றியே ஓயாமல் பேசிக்கொண்டிருப்பது ஏன்?. அதன்மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தால் தேர்தலை நடத்த வேண்டியதுதானே. நீங்கள் சொல்வதை மக்கள் ஒத்துக்கொள்கிறார்களா, பார்ப்போம்.

கேஎஸ்என்: நஜிப் அவர்களே, உங்கள் சொல்லை வைத்து அல்ல, செயலை வைத்துதான் மக்கள் தீர்மானிப்பார்கள்.

நீங்கள் சொல்வது எதுவும் இனி எடுபடாது. ஏனென்றால் நீங்களும் உங்கள் அம்னோ பாருவும் என்ன சொல்கிறீர்களோ அதற்கு மாறாகத்தான் செய்கிறீர்கள்.

ஊழல்கள், வேண்டியவர்களுக்குச் செய்யப்படும் தனிச் சலுகைகள்,சட்டங்களும் பொதுப்பணமும் தவறாக பயன்படுத்தப்படுதல், ,தீவிரவாதத்தின் மூலம் இணக்கநிலையைக் கெடுக்கும் இரண்டு அலிகள், இனவாதம் பேசும் ரிம100பில்லியன் மனிதர், பொதுச் சேவையில் மலாய்க்காரர்-அல்லாதாருக்குப் பாகுபாடு- போதுமா, இன்னும் வேண்டுமா- இவற்றுக்கு எதிராக இதுவரை என்ன செய்தீர்கள்?

மலாய்க்காரர் உள்பட மக்கள் இப்போது மாறி விட்டார்கள்.

பூ: பிரதமர் அவர்களே, நீங்கள் அடிநிலை மக்களைவிட்டு விலகியே நிற்கிறீர்கள்.அவர்களிடம் சென்று பேசுங்கள்.அவர்கள் சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போவீர்கள்.

மலேசிய வம்சாவளி: ஐயா, சட்டங்களுடன் எங்களுக்குப் பிரச்னை இல்லை. பிரச்னைக்குரியது என்னவென்றால், சட்டங்களை முறையாகவும் சரியாகவும் வெளிப்படையாகவும் செயல்படுத்தும் பொறுப்பில் இருக்கிறார்களே அவர்களின் செயல்பாடுதான்.

ஏசிஆர்: சட்டங்களை மாற்றி புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டதாகக் கூறுவதெல்லாம் வெறும் கண்துடைப்பு.

ஐந்துக்கு மேற்பட்டோர் ஒன்றுகூட போலீஸ் அனுமதி தேவை என்ற போலீஸ் சட்டம் அகற்றப்பட்டு அமைதிப் பேரணி சட்டம் கொண்டுவரப்பட்டது.ஆனால், அது பல நிபந்தனைகளைப் போடுகிறது.

ஜேம்ஸ்: எல்லா நிலைகளிலும் மண்டிக் கிடக்கும் ஊழலை ஒழியுங்கள்….என் வாக்கு உங்களுக்கே.

TAGS: