கசிந்த பிகேஆர் கூட்ட குறிப்புக்கள் மீதான அறிக்கை தலைமைத்துவத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது

கசிந்த பிகேஆர் கூட்ட குறிப்புக்கள் மீதான அறிக்கை தலைமைத்துவத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என பினாங்கு பிகேஆர் உதவித் தலைவர் அப்துல் ஹலிம் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் லிம் குவான் எங்-கை ‘கர்வம் பிடித்தவர்’ என துணை முதலமைச்சர் மான்சோர் ஒஸ்மான் சொன்னதாக கசிந்த அந்தக் கூட்டக் குறிப்புக்கள் காட்டின.

அந்த வார்த்தையை மான்சோர் சொன்னதாகக் கூறப்படும் ஒலிப்பதிவை கசிய விட்டதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலச் சட்டமன்ற சபாநாயகருமான அப்துல் ஹலிம் சொன்னார். அந்த ஒலிப்பதிவை டிவி3 தொலைக்காட்சி நிலையம் பின்னர் ஒலிபரப்பியது.

அந்தப் பிரச்னையை மிகவும் கடுமையானது எனக் குறிப்பிட்ட அவர், பினாங்கில் பக்காத்தான் ராக்யாட் தலைவர்களுக்கு இடையில் வேறுபாடுகள் நிலவுவதாகக் கூறப்படுவதை மறுத்தார்.

“தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் பக்காத்தான் தலைவர்களுக்கு இடையிலான உறவுகள் உறுதியாக இருக்கின்றன,” என்றார் அப்துல் ஹலிம்.

“இந்த தொழில்நுட்ப கால கட்டத்தில் உங்கள் மனைவியிடம் பேசுவது கூட ஆபத்தானது. ஏனெனில் அதுவும் கூட ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளியில் கசியக் கூடும்,” என அவர் நகைச்சுவையாகக் கூறினார்.

பினாங்கில் மான்சோரின் கீழ் பிகேஆர் வலுவான தலைமைத்துவத்தைக் கொண்டுள்ளது. மார்ச் மாதம் நிகழ்ந்த அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களிடையே துரோகம் செய்தவர்கள் இருப்பதால் எந்தக் கருத்து வேறுபாடும் உருவாகவில்லை என்றும் அப்துல் ஹலிம் வலியுறுத்தினார். அடுத்த பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடுகள் பற்றியும் அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டதாகத் தெரிகிறது.

அந்தக் கூட்டத்தில் லிம் ‘தம்பட்டம் அடித்துக் கொள்கின்றவர், கர்வம் பிடித்தவர், ‘தொக்கோங்’ (தெய்வம்) என மான்சோர் சொன்னதாக அதிகம் பிரபலமில்லாத வலைப்பதிவு ஒன்றில் ஜுன் மாதம் கூறப்பட்டது.

அந்த வார்த்தைகளை தாம் சொன்னதை மான்சோர் வெளிப்படையாக மறுக்கவில்லை என்றாலும் அது மிகைப்படுத்தப்பட்டு விட்டதாக மட்டும் தெரிவித்தார்.

 

TAGS: