நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் லிங்குக்கு இல்லை

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக் உடல்நலம் குன்றி இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து அவர்மீதான மோசடி வழக்கை மீண்டும் தள்ளி வைத்தது.

புதன்கிழமையிலிருந்து மருத்துவமனையில் இருந்த லிங், நேற்றுத்தான் அங்கிருந்து வெளியேறினார் என்று லிங்கின் வழக்குரைஞர் வொங் கியான் கியோங் (இடம்), நீதிபதி அஹ்மடி அஸ்நாவி-யிடம் தெரிவித்தார்.

“இன்று காலை அவர் மீண்டும் மருத்துவமனை சென்றார் என லிங்கின் மகன் என்னிடம் தெரிவித்தார்”,என்று வொங் குறிப்பிட்டார்.

இரண்டு நாள்களுக்குமுன் நிகழ்ந்த சம்பவத்துக்காகவும் வொங் நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.அச்சம்பவம் பற்றி அரசு வழக்குரைஞர் துன் அப்துல் மஜிட் துன் ஹம்சாவும் நீதிபதியிடம் புகார் செய்திருந்தார்.

“லிங்குக்கு நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணமோ, தப்பிச் செல்லும் எண்ணமோ கிடையாது”,என்றாரவர்.

புதன்கிழமை, வழக்கு தொடங்கி ஒரு மணி நேரமே ஆன நிலையில் ஒரு சிறு இடைவேள்ளை வேண்டுமென்று கேட்டுக்கொண்டார் லிங். ஆனால், வழக்கு மீண்டும் தொடங்கியபோது அவர் வரவில்லை.

வொங், தம் கட்சிக்காரர் மருத்துமனைக்குச்“சென்றிருப்பதாக”க் கூறியதால் நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.

ஆனால், லிங் மருத்துவமனை செல்லாமல் நீதிமன்றத்துக்கு வெளியில் ‘சுற்றிகொண்டிருப்பதை’ அரசு வழக்குரைஞர் கண்டார்.

தகவல் பறிமாற்றத்தில் ஏற்பட்ட தவறு

வொங், தமக்கும் லிங்குக்குமிடையில் அன்று தகவல் பரிமாற்றத்தில் ஏதோ தவறு நிகழ்ந்து விட்டதாக விளக்கமளித்தார்.லிங் நீதிமன்றத்துக்கு வெளியில் இருப்பதை அறியாமலேயே அவர் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருப்பதாக நினைத்து அவ்வாறு கூறியதாகச் சொன்னார்.

லிங், கோலாலம்பூர் மருத்துவமனையில் இரண்டு நாள் தங்கி இருந்ததற்கு ஆதாரமாக மருத்துவ அறிக்கை ஒன்றையும் அவர் தாக்கல் செய்தார்.

வழக்கு விசாரணை அக்டோபர் முதல் நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

திங்கள்கிழமையாவது லிங் வருவாரா என்ற கேள்விக்கு, “வருவார் என்றே நினைக்கிறேன்.வழக்கு விரைவில் முடிய வேண்டும் என்பதையே நானும் விரும்புகிறேன்”,என்றார்.

மருத்துமனை அறிக்கை, லிங்குக்கு நீரிழிவு நோய், இரத்தத்தில் கூடுதல் சீனி, உயர் இரத்த அழுத்தம் ஆகியவை இருப்பதாகக் கூறுகிறது என்றாரவர்.

லிங், கிள்ளான் துறைமுக தீர்வையற்ற மண்டலத்துக்கு நிலம் கொள்முதல் செய்ததில் சில உண்மைகளை அமைச்சரவைக்குத் தெரியாமல் மறைத்தார் என்று அவர்மீது மோசடி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

TAGS: