ஜோகூர் மாநில அளவில் நடத்தப்பட்ட எஸ்டிபிஎம் சோதனைத் தேர்வுகளில் காணப்பட்ட கேள்வி ஒன்றுக்கு முக்கிய மலாய் நாளேடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என பினாங்கில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு முதலமைச்சர் லிம் குவான் எங் விடுத்த எச்சரிக்கை ‘இனவாதம், இனங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்புக்குத் தடையாக இருக்கிறது’ என வருணிக்கும் பதில் இடம் பெற்றுள்ளதாக ஜோகூர் டிஏபி கூறிக் கொண்டுள்ளது.
அதே வேளையில் “ஒருவருடைய குடியுரிமை பறிக்கப்படுவதற்கு இவற்றில் எது காரணமாக இருக்கும் ?” என்ற இன்னொரு தேர்வுக் கேள்விக்கு கூறப்பட்ட பதில்களில் ஒன்றாக ‘எதிர்க்கட்சிகளில் சேருவது’ குறிப்பிடப்பட்டுள்ளது குறித்தும் அது வருத்தம் அடைந்துள்ளது.
கூறப்பட்ட பதில்களையும் கேள்விகளையும் இணையப் பயனீட்டாளர் ஒருவர் தமக்கு அனுப்பியுள்ளதாக மாநில டிஏபி இளைஞர் தலைவர் தான் ஹொங் பின் கூறினார்.
லிம் சம்பந்தப்பட்ட கட்டுரைக் கேள்வி மாணவர்களை ” தேசியக் கல்வி முறை வழியாக இனங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதையும் அந்த நோக்கத்தை அடைவதற்கு சமாளிக்க வேண்டிய பல்வேறு சவால்களையும்” விவாதிக்குமாறு கேட்டுக் கொள்கிறது.
அந்தக் கேள்விக்கான பதில்களில் ஒன்று என தான் காட்டிய பதில் முறைகளில் “பினாங்கில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு முதலமைச்சர் லிம் குவான் எங் விடுத்த எச்சரிக்கை ‘இனவாதம், இனங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்புக்குத் தடையாக இருக்கிறது’ என்பதும் அடங்கும்.
“மாணவர்கள் அந்த அம்சத்தை பதிலாக கூறா விட்டால் அவர்கள் மதிப்பெண்களை பெற முடியாது என்பது அதன் அர்த்தமா ? ஜோகூர் கல்வித் துறை நியாயமான விளக்கத்தைத் தரும் என நான் நம்புகிறேன். அது எந்த ஒரு அரசியல் கட்சியின் கருவியாக இருக்கக் கூடாது,” என தான் இன்று மலேசியாகினியிடம் கூறினார்.
இரண்டாவது கேள்வி நான்கு வகையான பதில்களை கொண்டதாகும். அவற்றுள் எதிரியுடன் சமரசம் செய்து கொள்வது, எதிர்க்கட்சிகளில் சேருவது, கள்ள நோட்டு தயாரிப்பது, மலாய் பேச முடியாமல் இருப்பது என்பதே அவை.
எதிரியுடன் சமரசம் செய்து கொள்வது, கள்ள நோட்டு தயாரிப்பது ஆகியவையே சரியான பதில்கள் என்றாலும் ‘எதிர்க்கட்சிகளில் சேருவது’ என்ற தேர்வு எதிர்க்கட்சிகளில் சேருவது என்ற எண்ணத்தை மாணவர்களுக்குத் தந்து விடும் என்றார் அவர்.
‘எதிர்க்கட்சிகளைக் களங்கப்படுத்தும் எண்ணம் ஆசிரியருக்கு இல்லை’
ஜோகூரில் எஸ்டிபிஎன் மாணவர்கள் அனைவரும் எழுதிய பொது ஆய்வியல் ( General Studies )பாடத்திற்கான சோதனைத் தேர்வில் அந்த இரு கேள்விகளும் இடம் பெற்றிருந்தன எனக் கூறப்பட்டுள்ளது.
அந்த வினாத் தாளை கட்சி விவரமாக ஆராய்ந்து போலீசில் புகார் செய்யும் என்றார் தான்.
இதனிடையே அந்தப் புகாரை ஜோகூர் கல்வித் துறை விசாரிக்கும் என அதன் துணை இயக்குநர் முகமட் ஹாசிடின் ஜைனி கூறியதாக சின் சியூ ஜிட் போ செய்தி வெளியிட்டுள்ளது.
“அந்த விவகாரம் குறித்து உங்களிடமிருந்து தான் இப்போது தெரிந்து கொண்டேன். ஆகவே நிலைமையைப் புரிந்து கொள்ள எனக்கு அவகாசம் கொடுங்கள். என்றாலும் அது கேள்வியாக இருந்தாலும் பதிலாக இருந்தாலும் அந்த வினாத் தாளை தயாரித்த ஆசிரியருக்கு எதிர்க்கட்சிகளை களங்கப்படுத்தும் எண்ணம் இருந்திருக்காது என நான் நம்புகிறேன்,”என அவர் சொன்னதாக அந்த ஏடு குறிப்பிட்டது.