மிஸ்மாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டதில் விதிகள் மீறப்பட்டுள்ளன

சர்ச்சைக்கு இலக்கான வாக்காளர் மிஸ்மா, சட்டப்பூர்வமாகவே மலேசியக் குடியுரிமை பெற்றதாகக் கூறிக்கொண்டாலும் அவருக்கு முதலில் நிரந்தர வசிப்பிடத் தகுதியும்(பிஆர்) பின்னர் குடியுரிமையும் வழங்கப்பட்டதில் குடிநுழைவுக் கொள்கை மீறப்பட்டுள்ளது என்று பாஸ் இளைஞர் பகுதி கூறுகிறது.

இந்தோனேசியாவின் பாவீன் தீவைச் சேர்ந்த மிஸ்மா என்றழைக்கப்படும் நிஸ்மா நயிம், குடிநுழைவு விதிகளின்கீழ் பிஆர் தகுதியோ குடியுரிமையோ பெற தகுதியற்றவர் என்று ஜோகூர் பாஸ் இளைஞர் பகுதித் தலைவர் சுஹாய்சான் காயாட் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அவருக்கு 1982, ஜூலை 17-இல், பிஆரும் 29 ஆண்டுகளுக்குப் பின்னர் 2011,ஜனவரி 31-இல், குடியுரிமையும் வழங்கப்பட்டதாக தேசியப் பதிவுத்துறை(என்ஆர்டி) கூறுகிறது.

மிஸ்மா,47, சினார் ஹரியானுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் 1982-இல், கட்டுமான தொழிலாளியாக மலேசியாவுக்கு வந்ததாகக் குறிப்பிட்டார். அவரின் கணவர் மவாசி மவார்டி(51)-யும் பிஆர் தகுதி பெற்றவர்தான்.

“இதிலிருந்து மலேசியாவில் ஓராண்டுக்கும் குறைவான காலத்திலேயே மிஸ்மாவுக்கு பிஆர் கிடைத்துள்ளது. இது, குடிநுழைவுத் தலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மட்டின் அறிக்கைக்கு முரணாக இருக்கிறது”, என்று சுஹாய்சான் கூறினார்.

செப்டம்பர் 23-இல், உத்துசானில் வெளிவந்த ஒரு செய்தி  அறிக்கையில், அலியாஸ், மலேசியர்களை மணம் செய்துகொண்டுள்ள வெளிநாட்டவரும் அவர்களின் பிள்ளைகளும்தான் பிஆருக்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.விண்ணப்பிக்கும் முன்னர், அவர்கள் மலேசியாவில் குறைந்தது ஐந்தாண்டுகளாவது தங்கியிருக்க வேண்டும். 1963ஆம் குடிநுழைவுச் சட்டம் அப்படிக் கூறுகிறது என்றும் அவர் தெரிவித்தார்..

தற்காலிக வேலை அனுமதி வைத்துள்ள வெளிநாட்டவர், பிஆருக்கு விண்ணப்பிக்க முடியாது என்று அலியாஸ் விளக்கினார்.

“அதே வேளையில் முதலீட்டாளர்கள், நிபுணர்கள் போன்றோரும் பிஆருக்கு விண்ணப்பிக்கலாம்”, என்றாரவர்.

உள்நுழைவு அனுமதி பெற்று குறைந்தது ஐந்தாண்டுகளாவது மலேசியாவில் தங்கிய வெளிநாட்டவர் மட்டுமே பிஆருக்கு மனுச் செய்துகொள்ளலாம் என்று குடிநுழைத்துறை விதிகள் கூறுவதை பாஸ் இளைஞர்கள் கண்டறிந்தனர்.

உள்நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள்:

1.நிபுணர்கள்.
2.அவர்களின் பிள்ளைகள்-ஆறு வயதுக்குக் குறைந்தவர்கள்.
3.நிபுணர்களின் துணைவர்/துணைவியர்.
4.தேசியப் பொருளாதார முக்கியத்துவத்தின் காரணமாக உள்துறை அமைச்சின் சிறப்பு அனுமதி பெற்றவர்கள்.
5.குடிமக்களின் பிள்ளைகள்-ஆறு வயதுக்குக் குறைவானவர்கள்.
6.சிறப்புத் தகுதிகளின் காரணமாக அனுமதிக்கப்பட்டோர்.

அந்த வகையில் மிஸ்மாவுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டதில் குறைந்தது நான்கு விதிகள் மீறப்பட்டுள்ளன என்று சுஹாய்சான் சுட்டிக்காட்டினார்-அவர் ஒரு நிபுணரல்ல; அவரின் கணவர், குடியுரிமை பெற்றவருமல்ல, ஒரு நிபுணருமல்ல; அவர் ஓராண்டுக்குக் குறைந்த காலமே மலேசியாவில் தங்கியிருந்திருக்கிறார்.

“இது எப்படி என்பதை அலியாஸ் மலேசிய மக்களுக்கு விளக்க வேண்டும் என்று பாஸ் இளைஞர் பகுதி கேட்டுக்கொள்கிறது.”

என்ஆர்டி தலைமை இயக்குனர் ஜரியா முகம்மட் சைட்டும் மிஸ்மாவுக்கு பிஆரும் அதனை அடுத்து குடியுரிமையும் வழங்கப்பட்டது எப்படி என்பதை விளக்க வேண்டும் என்று அந்த இளைஞர் பகுதி வலியுறுத்தியது.

“மிஸ்மா ஒரே ஓர் எடுத்துக்காட்டுத்தான்.இதுபோல் ஆயிரக்கணக்கான அந்நியர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கலாம் என்று பாஸ் இளைஞர்கள் கவலை கொண்டிருக்கிறார்கள்.

“தகுதி இல்லாதவர்களுக்கு அரசியல் காரணங்களுக்காக குடியுரிமை வழங்குவது நாட்டுக்குத் துரோகம் இழைக்கும் செயலாகும்”, என்று சுஹாய்சான் வலியுறுத்தினார்.

மிஸ்மா சர்ச்சை, என்ஆர்டி இணையத்தளத்தில் அவர் பிஆர் தகுதி உள்ளவர் என்றும் தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் வாக்காளர் என்றும் பதிவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மூண்டது.

மலேசியாகினியில் செய்தி வெளியான சில மணி நேரத்துக்குள் மிஸ்மா குடியுரிமை பெற்றவர் என்று என்ஆர்டி அதன் இணையத்தளத்தில் திருத்தம் செய்தது. பின்னர், மிஸ்மா 29 ஆண்டுகள் பிஆர்-ஆக இருந்துள்ளார் என்றும் அதன் அடிப்படையில் அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது என்றும் விளக்கம் கூறியது.

என்ஆர்டி தரவுத்தளம் இற்றைப்படுத்தப்படவில்லை என்பதால் அந்த விவரம் பதிவாகவில்லை என்றும் அது கூறியது.

TAGS: