நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமரும் நம் நாட்டின் நிதி அமைச்சருமான நஜிப் துன் ரசாக் தாக்கல் செய்த பட்ஜெட் மிக முக்கியமானது. ஆனால் அது இந்நாட்டின் பல இன மக்களுக்குப் பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்து 55 ஆண்டுகளுக்கு மேலாகியும் அம்னோ மக்களைப் பிரித்தாளும் அதன் கொள்கைகளிலிருந்து சற்றும் விடுப்படவில்லை என்பதை நேற்றைய பட்ஜெட் வழி நாட்டுக்குப் பிரதமர் உணர்த்தியுள்ளார் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தமது அறிக்கையில் கூறுகிறார்.
அதே வேளையில், கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த பக்காத்தானின் நிழல் வரவுசெலவுத் திட்டத்தையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கத் தவறக்கூடாது என்றாரவர்.
பிரதமரின் மகன் என்ற தகுதி வேண்டும்
பல இனச் சமுதாயத்தின் மேம்பாடு குறித்தும், புதிய பொருளாதாரப் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய அவசியத்தையும் அதில் அன்வார் எடுத்துரைத்துள்ளார்.
“புதிய பொருளாதாரக் கொள்கை பூமிபுத்ரா வளர்ச்சியை முக்கியமாகக் கொண்டு செயல் படுத்தப்பட்டது. ஆனால் அது, உண்மையாக ஏழை பூமிபுத்ராக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவதை விட வசதி படைத்த சில பூமிபுத்ராக்களின் ஏகப்போக வாழ்வுக்கே அதிகம் பயன்படுகிறது, குறிப்பாக பெட்ரோனாஸ் குத்தைகைகளை அதிகம் பெற, ஒருவருக்கு முன்னால் பிரதமரின் மகன் என்ற அந்தஸ்து வேண்டும் என்று கூறியிருந்தார் அன்வார்”, என்பதை சேவியர் சுட்டிக் காட்டினார்.
ஆனால், நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் நஜிப் தாக்கல் செய்த பட்ஜெட்டில், பக்காத்தானுக்கு நேர்மாறான கொள்கையைப் பிரகடனப் படுத்தியுள்ளார். அவர் பூமிபுத்ராக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் வளத்தை அதிகம் வலியுறுத்தியிருந்தார். அதில் முக்கியமாக பட்ஜெட் ஆண்டில் மேலும் இரண்டு அரசாங்க நிறுவனங்கள் பூமிபுத்ரா நிறுவனங்களுக்கு மாற்றி விடப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதன் வழி இந்நாட்டு பொருளாதாரத்தில் பூமிபுத்ரா மக்களின் பொருளாதாரப் பங்கினை உயர்த்துவதாகக் கூறிக்கொண்டு தலைவர்களுக்கும் பிரதமரின் குடும்பத்துக்கும் வேண்டியவர்களின் நிறுவனங்களிடம் அரசாங்கத்துக்குச் சொந்தமான சில நிறுவனங்களை ஒப்படைக்க வகை செய்துள்ளார் என்று பிரதமர் நஜிப்பின் இனவாதப் போக்கை வெளிப்படுத்தினார் சேவியர்.
இந்தியர்களின் நிலையை உயர்த்த எப்படி உதவும்?
இன்றைய இக்கட்டான அரசியல் சூழ்நிலையிலும் பக்காத்தான் மக்கள் கூட்டணி அதன் நிழல் பட்ஜெட்டில், பல இன மலேசியாவின் எல்லா மக்களின் மேம்பாட்டையும் முன்வைத்து நிழல் வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்துள்ளது.
அன்வார் இப்ராகிம் தனது அரசியல் இலாபத்திற்காக மற்ற இனங்களிடம் மலாய்கார்களின் உரிமையை விற்பதாக பாரிசானும், முன்னாள் பிரதமர் மகாதிரும், பல மலாய் தீவிரவாத இயக்கங்களும் அவரை சாடிவரும் வேளையிலும், அன்வார் துணிச்சலாக உண்மை நிலையைப் பறைசாற்றி உள்ளார் என்பதை சேவியர் வலியுறுத்தினார்.
புதிய பொருளாதாரக் கொள்கை மலாய்காரர் மற்றும் சீனர்களைவிடப் படுமோசமான ஏழ்மை நிலையிலுள்ள இந்தியர்களின் நிலையை உயர்த்த எப்படி உதவும் என்றும் அன்வார் கேட்டார்.
ஆக, எல்லா மக்களும், குறிப்பாக ஏழைகள், இன, சமய, பூர்வீக அல்லது சபா, சரவா, தீபகற்பம் என்ற மாநில வேற்றுமையின்றி அனைவரும் ஏழ்மையிலிருந்து விடுப்பட சரியான திட்டமிடல் வேண்டும். அதற்காகப் பொருளாதாரக் கொள்கைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதன் வழியே நாட்டுக்கு நன்மை ஏற்படுத்த முடியும் என்று அன்வார் திட்டவட்டமாகக் கூறியுள்ளதை சேவியர் நினைவுப்படுத்தினார்.
இப்போது, சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்களில் பக்காத்தான் அரசுகளால் அமல் செய்யப்பட்ட பல சமூக உதவி திட்டங்களில் சிறப்பு பூமிபுத்ரா சலுகை ஏதுமில்லை, ஆனால் அத்திட்டங்களில் பயனடைந்தவர்களில் பெரும்பாலோர் மலாய்காரர்களே! ஆக இன ரீதியான பொருளாதாரத் திட்டத்தின் வழிதான் பூமிபுத்ராக்கள் உதவி பொற முடியும் என்பது பொய்மையாகி விட்டது என்பதால், இன ரீதியான அம்னோவின் பொருளாதாரத் திட்டம் இனியும் அவசியமில்லை என்பதைக் காட்டுகிறது என்றாரவர்.
“இன்று நாடு வளர்வதாகவும், வருமானம் பெருகுவதாகவும் புள்ளி விவரங்களை நஜிப் காட்டலாம். ஆனால், பக்காத்தான் பட்ஜெட்டின் சிறப்பு அம்சம் மலேசியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கும் அதே வேளையில். வாழ்க்கைச் செலவீனங்களை குறைப்பதுமாகும்.
“பக்காத்தானின் புக்கு ஜிங்க கொள்கைப்படி பல்கலைக்கழகம் வரை இலவச கல்வித்திட்டம். குறிப்பிட்ட சில சாலைகளில் டோல் கட்டண நீக்கம். பிடிபிடிஎன் கடன் உதவி அகற்றுதல் போன்றவைகளினால் வாழ்க்கைச் செலவீனங்கள் குறையும்”, என்றார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.
தெக்குன் கடன் உதவி ரிம2,240 கோடி. இந்தியர்களுக்கு கிடைத்த கோடி எவ்வளவு?
கடந்த கால தவறுகளால் நாடு பெரிய கடனைச் சுமந்துகொண்டு இருக்கிறது. அதாவது நாட்டின் மொத்த உற்பத்தியில் 53.7 விழுக்காடு அல்லது ரிம5,024 கோடி கடனிலுள்ள ஒரு நாட்டைக் காப்பாற்ற பிரதமர் பட்ஜெட்டில் ஏதும் கூறாமல் தவிர்த்திருக்கிறார் என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் சேவியர்.
ஆகவே, இது ஒரு தேர்தல் பட்ஜெட் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் முடிந்தவுடன் உபரி பட்ஜெட்டின் வழி புதிய வரிகளைச் சுமக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும். நாட்டைப் பெரும் கடன் தொல்லையிலிருந்து மீட்க வேண்டிய இக்கட்டும் அடுத்து வரும் அரசாங்கத்திற்கு உண்டு என்று எச்சரிக்கை விடுத்தார் சேவியர்.
“இந்திய சமூகத்தில் நிலவும் ஏழ்மைநிலை இந்நாட்டில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உண்மை. இந்திய சமூகத்தில் பெருகி வரும் குற்றச்செயல்களுக்குப் பொருளாதாரமே முக்கிய காரணம். சமூகத்தில் நிலவும் ஏழ்மைநிலை படுமோசமாக இருக்கிறது. அது நாட்டின் அமைதிக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவருவதை அனைவரும் அறிவோம்.
“ஆனால், அப்படிப்பட்ட ஒரு சமூகத்திற்கு தெக்குன் தொழில் கடன் உதவி நிதிக்கு இவ்வாண்டு 5 கோடிகள் ஒதுக்கீடு என்ற அறிவிப்பை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது. இந்தியர்கள் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் தெக்குன் கடன் உதவி மூலம் சிறிய தொழில் முனைவர்களுக்கு இது வரை அரசாங்கம் வழங்கியுள்ளது ரிம2,240 கோடி. ஆனால் பரம ஏழையான இந்தியர்களுக்கு, வழங்கப்பட்டது அதில் சுமார் ஒரு விடுக்காடு மட்டுமே.
“அவ்வாறே, தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்கு பக்காத்தானின் நிழல் பட்ஜெட்டில் 20 கோடிகளையும், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பயிற்சிக்கு 20 கோடி வெள்ளியையும் அறிவித்திருந்தது. ஆனால் பிரதமரின் பட்ஜெட்டில் நமக்கு வெறும் 10 கோடியையே வழங்கியுள்ளார்.
“பொருளாதாரத்துறையை பற்பல பிரிவுகளாகப் பிரித்து, தனிச் சலுகைகளைக் கொடுத்து, பல அரசு நிறுவனங்களைத் தனியார் மயத்திட்டத்தின் கீழ் வழங்கி, ஆயிரக்கணக்கான ஹெக்டர் விவசாய நிலங்களை பெட்டா, ரிஸ்டா, ஃபாமா, போன்ற நிறுவனங்களின் வழி வழங்கி, பல வங்கிகளுக்கு சொந்தக்கார்ரகள் ஆக்கியும், அரசாங்க உத்தியோகத்தில் 90 விழுக்காடு பதவிகளைப் பெற்றும், உயர்க்கல்வியில் 70 விழுக்காட்டை பெற்றுள்ள ஒரு சமூகம், தேசிய பொருளாதாரத்தில் கடந்த ஆண்டு ஒரு விழுக்காடு மட்டுமே உயர்ந்துள்ளதாம்.
“ஆக, இந்தியர்களுக்கு என்னவுள்ளது? என்ன கிடைக்கிறது? இன்றைய அரசின் கொள்கைப்படி நமக்கு வழங்கப்படும் துரும்புகளைக் கொண்டு எப்படி முன்னேறுவது? எலும்புகளை வைத்து எப்படி உயிர் வாழ்வது?
“தேசிய பொருளாதாரத்தில் நமது பங்கு என்ற வாதத்தை நாம் கனவாகவே வைத்திருக்கப் போகிறோமா, அல்லது அதனை நனவாக்க பாடுப்பட போகிறோமா என்பதை இந்திய சமூகம் முடிவு செய்ய வேண்டிய முக்கிய தருணம் இது என்பதை இந்தப் பட்ஜெட் உணர்த்துகிறது”, என்று டாக்டர் சேவியர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.