உத்துசான்: மலேசியாகினி ‘மலேசியர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’

மலேசியாகினி செய்தி இணையத் தளத்துக்கு நாணய ஊக வணிகர் ஜார்ஜ் சோரோஸ் நிதி அளித்தார் என்று கூறப்படுவது மீது அது எல்லா மலேசியர்களிடமும் ‘மன்னிப்பு’ கேட்க வேண்டும் என உத்துசான் மலேசியா கேட்டுக் கொண்டுள்ளது.

‘அந்நியர்களுடைய கருவியாக இருப்பதை நிறுத்திக் கொள்ள’ மலேசியாகினி எண்ணம் கொண்டுள்ளதா என அந்த ஏட்டின் ஞாயிறு பதிப்பான மிங்குவான் மலேசியாவில் அவாங் செலாமாட் எழுதியுள்ளார்.

அவாங் செலாமாட் என்பது அந்த நாளேட்டின் ஆசிரியர்களை குறிக்கும் புனை பெயராகும்.

“எல்லா ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ள வேளையில் சுதந்திரமான இணையத் தளம் என அது கூறிக் கொள்ளக் கூடாது. அவ்வாறு சொல்வது தன்னைத் தானே சுட்டுக் கொள்வதற்கு ஒப்பாகும்.”

“இதில் நாட்டின் இறையாண்மை சம்பந்தப்பட்டுள்ளதால் அந்த இணையத் தளம் சரியான பாதைக்குத் திரும்புவதற்கு இன்னும் நேரம் இருப்பதாக,” அடையாளம் தெரியாத அந்தக் கட்டுரையாளர் சொன்னார்.

‘அரசாங்க எதிர்ப்பு செய்திகளுக்கு அந்த அந்நிய நிதி உதவியாளர்களே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அத்துடன் அந்தச் செய்திகள் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவானவை என்றும் அவர் கூறிக் கொண்டார்.

அந்த இணையத்தளத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஹார்லான் எம் மாண்டெல் ‘சோரோஸ் ஆள்’ எனக் குறிப்பிட்டு சோரோஸ் தொடர்பு இருப்பதாக முன்னாள் மலேசியாகினி ஆசிரியர் ஒய் எல் சொங் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து உத்துசான் மலேசியாகினிக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டே இருக்கிறது.

ஆனால் அரசாங்கத்துக்கு ஆதரவான அந்த ஏடு அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்து மலேசியாகினி தலைமை நிர்வாக அதிகாரி பிரமேஷ் சந்திரன் கூறிய விளக்கங்களை வெளியிடவே இல்லை.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சோரோஸுடன் சமரசம் செய்து கொண்ட செய்தியையும் தமது போர் எதிர்ப்பு உலக அமைதிக் கருத்தரங்கிற்கு அந்தக் கோடீஸ்வரருடைய ஆதரவை நாடியதையும் அந்த ஏடு பிரசுரிக்கவே இல்லை.

அந்தக் குற்றச்சாட்டுக்கள் 11 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப்பட்டவை என்றும் அவை மீண்டும் கூறப்படுகின்றன என்றும் பிரமேஷ் குறிப்பிட்டிருந்தார். சோரோஸுடன் மாண்டெலை இணைக்கும் அந்த நாளேட்டின் நோக்கம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

மலேசியாகினி முதலீட்டாளர்களில் ஒருவரான Media Development Loan Fund-நிதியின் தலைவராக மாண்டெல் பொறுப்பேற்ற பின்னரே அவர் இணையத் தளத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார் என்ற தகவலையும் பிரமேஷ் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

 

TAGS: