எஸ்யூபிபி இப்போதைக்கு சரவாக் பிஎன்-னில் தொடர்ந்து இருக்கும்

எஸ்யூபிபி என்னும் சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி இப்போதைக்கு மாநில பிஎன் -னில் இருந்து வரும் என அதன் தலைவர் பீட்டர் சின் அறிவித்துள்ளார்.

கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ள விஷயங்கள் மீது கூட்டணித் தலைமைத்துவத்துடன் ‘கலந்தாய்வு’ செய்வதற்கு மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளது என அவர் சொன்னார்.

பல வர்த்தக வாய்ப்புக்களிலும் உள்ளூர் பேராளர்கள் நியமனங்களிலும் கட்சி ஒதுக்கப்பட்டுள்ளதால் அது கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என பல மத்தியக் குழு உறுப்பினர்கள் கருதுவதை அவர் ஒப்புக் கொண்டார்.

“பிஎன் -னில்  எஸ்யூபிபி நிலை மீது எந்தத் தீர்மானமோ, முடிவோ எடுக்கப்படவில்லை என நாங்கள் உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். என்றாலும் கவலைக்குரிய விஷயங்கள் மீது பிஎன் தலைமைத்துவத்துடன் விவாதிப்பது கட்சியின் கடமையாகும்,” என வார இறுதியில் நடைபெற்ற கட்சி மத்தியச் செயற்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் சின் தெரிவித்தார்.

“1970ம் ஆண்டு சரவாக் அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்ட போது கையெழுத்தான புரிந்துணர்வு அம்சங்களை பிஎன் மதிக்க வேண்டும் என எஸ்யூபிபி விரும்புகின்றது. அரசாங்கக் கொள்கைகள் சம்பந்தப்பட்ட பெரிய பிரச்னைகள், பெரிய விவகாரங்கள், உறுப்புக் கட்சிகளுடைய நலன்களையும் மக்கள் நலன்கலையும் பாதிக்கின்ற விஷயங்கள் ஆகியவற்றில் கலந்தாய்வு செய்யப்பட வேண்டும் என்பது அந்த அம்சங்களில் அடங்கும்.”

போட்டித் தரப்பு ஆட்சேபம்

எஸ்யூபிபி-யை பிஎன் -னிலிருந்து விலக்கிக் கொள்வது தொடர்பான மருட்டலை அந்தக் கட்சியில் மூத்த உறுப்பினரான வோங் சூன் கா தலைமையில் இயங்கும் போட்டித் தரப்பினர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

பிஎன் -னிலிருந்து வெளியேற வேண்டும் என மத்தியக் குழு தீர்மானத்தை சமர்பித்தது ஏன் என வோங் சின் -னிடம் வினவினார்.

சின் நியமனம் செய்த மத்தியக் குழு உறுப்பினர்கள் மாநில பிஎன் -னுக்குள் நிலவிய ஒத்துழைப்பு, நம்பிக்கை உணர்வைச் சிதறடித்து மத்திய செயற்குழு விவாதத்திற்கு அந்தத் தீர்மானத்தை அனுப்பி விட்டதாக அவர் கூறிக் கொண்டார்.

“அவர்கள் செய்தது மாநில பிஎன் மீது நம்பிக்கையில்லை என வாக்களிப்பதற்குச் சமமாகும்,” என வோங் சொன்னார்.

“கட்சியின் அடி நிலை உறுப்பினர்கள், கிளைத் தலைவர்கள் ஆகியோருடன் விவாதிக்காமல் மத்தியக் குழு அத்தகைய தீவிரமான முடிவை எடுத்துள்ளது குறித்து பல உறுப்பினர்கள் வியப்படைந்துள்ளதோடு, கவலையும் அடைந்துள்ளனர்.”

 

TAGS: