2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று காலை மக்களவையில் தொடக்கி வைத்தார்.
அப்போது மக்களவையில் பிரதமர் நஜிப் காணப்படாதது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
“பட்ஜெட் விவாதத்தின் போது நிதி அமைச்சர் இங்கு இருப்பதுதான் வழக்கம். ஆனால் விவாதத்திற்கு வருமாறு நான் அழைக்கும் போது அதனை ஏற்கும் துணிச்சல் அவருக்கு இல்லை. இப்போது நாடாளுமன்றத்திலும் கூட அவருக்கு வருவதற்குத் துணிச்சல் இல்லை,” என அன்வார் குறிப்பிட்டார்.
“தமது பின்னிருக்கை உறுப்பினர்கள் பட்ஜெட்டைத் தற்காத்துப் பேசுவதற்கு அவர் விட்டு விடுகிறார். அவர்கள் அமைச்சரவையில் இருந்ததே இல்லை. அவர்களுக்கு புள்ளி விவரங்கள் தெரியாது. அவர்கள் புள்ளிவிவரத்துறை தரும் விவரங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. நிதி அமைச்சர் அடுத்த முறை அவர்களுக்குச் சில குறிப்புக்களையாவது கொடுக்க வேண்டும்..”
பக்காத்தான் ராக்யாட் ஆட்சி புரியும் மாநிலங்களில் திரட்டப்படும் வருமானத்தை விட கூடுதலான பணத்தை அந்த மாநிலங்களுக்கு கூட்டரசு அரசாங்கம் கொடுப்பதாக கோத்தா பெலுட் உறுப்பினர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் கூறியுள்ளதை அன்வார் எடுத்துக் காட்டினார்.
“நீங்கள் எண்கள் மீது கேள்வி எழுப்பலாம். ஆனால் புள்ளி விவரத்துறை கொடுக்கும் விவரம் இதுதான்,” என அப்துல் ரஹ்மான் இடைமறித்துச் சொன்னார்.
பொய்களைச் சொல்வதற்கு புள்ளி விவரங்களை ஜோடிக்க முடியும் என அன்வார் அவருக்குப் பதில் அளித்தார்.
“சிலாங்கூர் வருமானம் அதன் வரவு செலவுத் திட்டத்தை விடக் குறைவானது என்பது உண்மையல்ல. அது கொஞ்சம் கூட பொருளாதார ரீதியில் பொருத்தமானதாக இல்லை. பணம் எங்கே இருந்து உங்களுக்குக் கிடைக்கிறது,” என அவர் வினவினார்.
அவையில் எந்த முதுநிலை அமைச்சர்களும் இல்லாத சூழ்நிலையில் முற்பகல் மணி 11.30க்கு அன்வார் தமது 90 நிமிட உரையைத் தொடங்கினார். நண்பகல் உணவு இடைவேளைக்குப் பின்னர் அவர் தமது உரையைத் தொடர்ந்தார்.