இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை எதிர்த்து, நடந்த போராட்டத்தின் போது, இந்து கோவிலும், இந்துக்கள் வீடுகளும் சூறையாடப்பட்டன.
அமெரிக்காவில், ‘முஸ்லிம்களின் அப்பாவிதனம்’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. இந்த படத்தில், நபிகள் நாயகத்தை கேலி செய்வது போன்ற காட்சி இடம் பெற்றதால் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில், இது தொடர்பாக இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் வன்முறை மூண்டது. கராச்சியில் 21ம் தேதி, நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குல்ஷன்-இ-மேமர் என்ற பகுதியில் வசித்த இந்துக்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தினர். இதே பகுதியில் உள்ள, ஸ்ரீகிருஷ்ண பகவான் கோவில் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த கோவிலிலிருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. விலை உயர்ந்த நகைகளும் பூஜை பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன.
இது தொடர்பாக, இப்பகுதி இந்துக்கள் காவல்துறையில் புகார் செய்துள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இது குறித்து, பாதிக்கப்பட்ட இந்துக்கள் குறிப்பிடுகையில், “நாங்கள் என்ன அமெரிக்கர்களா? நாங்கள் இந்தியர்களும் கிடையாது. பாகிஸ்தானில் தான் வசிக்கிறோம். எதற்காக எங்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும். நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தியதாக கூறி போராட்டம் நடத்தியவர்கள் ஏன் இந்து கோவில் மீது தாக்குதல் நடத்த வேண்டும். இது இந்து மதத்தை இழிவுப்படுத்துவதாகாதா? என கேள்வியெழுப்பினர்.